Tuesday, June 29, 2010

செம்மொழி மாநாடு - நம் பார்வை I


நாடாளுபவரின் நிறைவேறாத பெருங்கனவாக இருந்ததை, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தி தற்போது நிறைவேற்றியுள்ளார் கலைஞர்.
திராவிட இயக்கத்தில் ஏற்கனவே அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்திவிட்டனர்.


நமது கருத்துக்களை பகிரும் முன் - மாநாட்டுத் துளிகள் - உங்களுக்காக!


செம்மொழி மாநாட்டிற்காக போய் இறங்கியதும் ஜில்லென்று இருந்தது ஊர்.

"செம்மொழி மாநாடு நடக்கும் ஐந்து நாட்களுக்கும் சேர்ந்து ஆறு லட்சம் பேர் வருவார்கள்!" - இப்படித்தான் கணக்குப் போட்டிருந்தார்கள் போலீஸ் புலனாய்வுத்துறை அதிகாரிகள். அவர்கள் போட்ட கணக்கு தப்பாகி விட்டது. முதல் நாளே ஆறு லட்சத்தைத் தாண்டியிருக்கலாம். அந்த அளவுக்கு கூட்டம் என்றால் அப்படியொரு கூட்டம்.


கோவை மாநகருக்குள்ளும், மாநகரைத் தொட்டும் மாநாட்டை ஒட்டி பல்வேறு சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலைப்பணிகள் மேற்கொள்ள சுமார் 60 கோடிக்கு அரசாணை பெறப்பட்டுப் பணிகள் நடைபெற்றுள்ளன.

மாநாட்டில் கலந்துகொள்ள ஒருநாள் முன்னதாகவே ஜனாதிபதியும் வந்து விட்டார்.

மாநாட்டிற்கு வந்த நடிகர்கள் பாடு படுதிண்டாட்டம். நடிகர் சிவகுமார், பிரபு, விஜயகுமார், பிரகாஷ்ராஜ், தியாகு போன்றவர்கள் கேலரியில் 'கலைஞர்கள்' என்று எழுதப்பட்ட ஒரு கோடியில்தான் அமர வேண்டியிருந்தது. அங்கிருந்து பார்த்தால் மேடையே தெரியாத நிலை. மின்விசிறி வேறு இல்லை. அழைப்பிதழையே விசிறிக் கொண்டனர். (மற்றொரு நாள் இந்த பகுதியில்தான் நாம் அமர வைக்கப்பட்டோம் !).

பிரகாஷ்ராஜ் வரும்போது அவரை யார் என்று தெரியாமல்(!) ஒரு பாதுகாப்பு போலீஸ்காரர் தடுத்து தள்ளியது தனிக் கதை.


மாநாட்டு பட்டிமன்றம் முடிந்த போது வெளியே கட்டுக்கடங்காத மக்கள் கடல். அதை நீந்தி கடந்து செல்ல ஒரு கி.மீ.க்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆயிற்று.


நாம் பார்த்த பிரபலங்கள். வாலி, வைரமுத்து, சிவக்குமார், வடிவேலு, பாரதிராஜா, சந்திரசேகர் (விஜய் அப்பா அல்ல), எஸ்.வீ.சேகர், லியோனி, நக்கீரன் கோபால், எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன், சாலமன் பாப்பையா, மனுஷய புத்திரன், மற்றும் அறிஞர் பெருமக்கள்.

மாநாட்டு மைய நோக்கு பாடல் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது, டிவியிலும், பெரிய திரையிலும் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு தமிழ் அலை பரவ மிக முக்கிய காரணமாய் இதைக் குறிப்பிடலாம்.

உணவில் 'சுவை, தரம் முக்கியம்' என்பது முதல்வரின் கறார் கட்டளையாம். ரூ.30-க்கு சாப்பாடு விநியோகிக்கப்பட்டது. ஒரு வெரைட்டி ரைஸ், ஒரு தயிர் சாதம், ஒரு பாட்டில் தண்ணீர், ஊறுகாய், இனிப்பு, சிப்ஸ் இருந்தது. (அதை 'ஊசி, புளித்துப் போன சாப்பாடு, விலையும் அதிகம்' என்று திட்டிக்கொண்டே சிலர் சாப்பிட்டனர்.)

கழிவுகளைக் கொட்ட 660 குப்பைத் தொட்டிகள் மாநாட்டு திடலில் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தன. சாதாரணக் காய்ச்சலில் துவங்கி விபத்து வரை எவ்வகையான உடல் நலப் பிரச்னைகள் ஏற்பட்டாலும், விரைந்து சேவையாற்ற நூற்றுக்கணக்கான மருத்துவர்களும் தயார் நிலையில். வி.ஐ.பி-க்களுக்கு என ஸ்பெஷல் ஏற்பாடுகளுடன் அதி நவீன மருத்துவ வாகனங்கள்!

மாநாடு முழுக்க டாய்லெட் வசதி ஏற்படுத்திக் கொடுத்து பெண்களின் புண்ணியத்தை கட்டிக்கொண்டனர். பெண்களிடம் முகச்சுழிப்பில்லை. பஞ்சமில்லாமல் தண்ணீர் வசதி செய்து கொடுத்தார்கள். ஆண்களில் சிலர் வசதியை புறக்கணித்து இயற்க்கை அழைத்த போதெல்லாம் சுவர் ஓரம் ஒதுங்கினர்!.

தமிழ்க் கணினி இணைய கண்காட்சி நடந்தது. 123 அரங்குகளில் மத்திய, மாநில அரசுத் துறை சார்ந்த 123 இணைய தளங்கள் இடம்பெற்றன. இந்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகமும் இதில் பங்கேற்றது. இதன் சார்பில் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களுக்கு யூனிகோட் தமிழ் மென்பொருள்கள் அடங்கிய ஒரு லட்சம் சி.டி-க்கள் இலவசமாக வழங்கப்பட்டது. கண்காட்சியில் பங்கேற்கும் மற்ற நிறுவனங்களும் தங்களது தமிழ் மென்பொருட்கள் அடங்கிய சி.டி-க்களை இலவசமாக வழங்கின. (நாம் கேட்ட லினக்ஸ் சிடி பெற, அரை மணி கழித்து வர சொன்னார்கள். மெயில் ஐடி, செல் நம்பர் கொடுத்து வந்தேன், இது வரை தொடர்பில்லை!)

புத்தக கண்காட்சியிலும் பெரும் கூட்டம். சிந்து சமவெளி மற்றும் பல பெருமைகள் விளக்கும் கண்காட்சியிலும் கூட்டம். அவசியம் குழந்தைகளும் பெரியவர்கள் காண வேண்டியது.

லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள் என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கவில்லையோ போலும். சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களை பல்லாயிரக்கணக்கில் வரவழைத்திருந்தனர். கூட்டத்தில் அந்த பெண்கள் சிக்கி சங்கடப்பட்டனர். கஷ்டமாக இருந்தது. (யாருக்கு என்று கேட்காதீர்கள் !)


கட்சிக் கரை வேட்டியினரை வெகு அரிதாகத்தான் விழாவில் காணமுடிந்தது. நாம் பார்த்த வரை, நகரில் எந்த மூலையிலும் தி.மு.க பேனர்களையோ, போஸ்டர்களையோ காணமுடியவில்லை. கட்சி நிர்வாகிகள் ஆச்சரியப்படுத்தினர். பாராட்டலாம்.

ரத ஊர்வலத்தை தொடங்கி வைக்க (லக்ஷ்மி மில்ஸ் சந்திப்பு) வந்த கனிமொழி, அங்கு நின்றிருந்த நாதஸ்வரம், கரகாட்டப் பெண்கள், ஆண்களிடம், "ரொம்ப நேரமா நிற்கிறீங்களே. கால் சுடுமே. உட்கார்ந்துகொள்ளலாமே?" என்றார். அவர்களோ, "நாங்கள் நாள்கணக்கில் இப்படி நின்றாலும் எங்களுக்குக் கால் சுடாது. வலிக்காது. கடவுளிடம் அப்படியொரு வரம் வாங்கி வந்திருக்கிறோம்" என்று கூறி அசத்தினர்.

ஸ்டாலினும் கனிமொழியும் விழா முழுக்க ஜொலித்தனர். நமது பத்திரிக்கைகளும் இதை சிலாகித்தது.


இந்த லட்சோப லட்சம் மக்கள் கூட்டத்தைப் பார்த்துவிட்டு ஒரு பெண்மணி பேசி வந்த வார்த்தைகள் இதுதான். "அடுத்த தடவையும் தேர்தல்ல கருணாநிதிதான் வருவார் போலிருக்கு!"

தொடரும்.....

Sunday, June 20, 2010

என்றுமுள தமிழ்



தமிழ் மொழியையும், நம்மையும் பெருமையுறச் செய்த தமிழறிஞர்கள் பலர். இவர்களைப் பற்றி பிறகு.


******

செம்மொழி என்ற வார்த்தை திடிரென்று நம் எல்லோருக்கும் பரிச்சயம் ஆகியிருக்கிறது. கோவை செம்மொழி மாநாட்டு செய்திகள் நம்மை வந்து சேருவதற்கு எல்லா வழிகளிலும் அரசாங்கம் முயன்று, வெற்றியும் பெற்றிருக்கிறது. இதில் அரசியல் பார்க்கத் தேவையில்லை. மொழி வளர்ச்சிகான வாய்பாக இதைப் பார்க்கலாம்.

Friday, June 18, 2010

2010 இயர் அப்ரைசல்



ஒரு அலசல்:

தி.மு.க அரசு - யாருக்கு எவ்வளவு மார்க்?

சிறந்த மற்றும் மோசமான அமைச்சர்கள் யார், யார்?

தி.மு.க அரசுக்கு எதிர்க்கட்சிகள் தந்த மார்க் எவ்வளவு? என இந்தியா டுடே (ஜுன் 23,2010) கவர் ஸ்டோரி வெளியிட்டு இருக்கிறார்கள்.

தி.மு.க அரசின் அமைச்சர்களின் சாதனைகள் தோல்விகள் தர்மசங்கடங்களை அலசி இருக்கிறார்கள்.

தரப் பட்டியலில் 29 அமைச்சர்களுக்கு மதிப்பெண்(%) கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல்வருக்கு 64% ஸ்டாலின் 63% அன்பழகன் 55% தந்திருக்கிறார்கள். முதல் முறை அமைச்சர்களில் வெகு சிலரே திருப்திகரமாகச் செயல்பட்டுள்ளனர்.

புள்ளிவிவரங்களுடன் அணுகினால் தமிழகம் ஒன்றும் இந்தியாவின் முதன்மையான மாநிலமாகத் திகழவில்லை. இப்போது தமிழகத்தின் கடன் ரூ.75,000 கோடி. தரப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. விவசாயத்திலும் மூன்றாமிடம்தான். ஆரம்ப சுகாதாரத்தில் நான்காவது இடம். உள்கட்டமைப்பில் ஆறாவது இடம்.

இலவசங்கள், மானியங்களுக்காக மட்டும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் போடப்பட்டுவருகின்றன. இது சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் இன்னும் உயரவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. கருணாநிதி, எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.கவை பல வகைகளிலும் பலவீனமாக்கியிருக்கிறார். பதவி கேட்டுப் போராடிய காங்கிரசை அடக்கியும், ஆதரித்துக் கொண்டே எதிர்ப்பு அரசியலை நடத்தும் பா.ம.கவை ஓரங்கட்டியும் ஓர் அரசியல் தலைவராக சிறந்த ராஜ தந்திரியாக செயல்பட்டிருக்கிறார்.

ஆனால் அது மட்டும் போதாதே, தமிழகத்தை முதலிடத்தில் வைக்க. மின் பற்றாக்குறை இல்லாத, குடிதண்ணீருக்குப் பஞ்சம் இல்லாத, விலைவாசி கட்டுக்குள் இருக்கிற, நாளொரு கொலை, பொழுதொரு கொள்ளை இல்லாத, தொழில் வளம் மேம்பட்டு வேலைவாய்ப்புகள் பெருகியிருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, இலவசம் இனி தேவையில்லை என்கிற சூழலுக்கு தமிழகம் வந்திருக்க வேண்டும். அப்போதுதான் நாம் முதலிடத்தை பிடித்திருக்க முடியும்.

******

நமது மதிப்பீட்டை ஒப்பிட்டு பார்க்கலாம்.

தெரியாதவர்கள் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆர்வமிருப்பின் படித்துப்பாருங்கள்.

******

நான் ரசிச்ச 'பாசம்' கவிதை -- ரசிச்ச கேள்வி பதில்
                                                                                      
                                                               


Thursday, June 10, 2010

ஜோதிகாவும் குட்டி ஆப்பிளும்



பக்கத்தில் இருக்கும் குழந்தையை யார் என்று தெரியவில்லையென்றால், நீங்கள் தமிழ் சினிமாவை விட்டு வெகு தூரம் தள்ளி இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இந்த பாப்பாவுக்கு ஒரு தம்பி பாப்பா பிறந்திருக்கிறான்.

ஆம். சூர்யா ஜோதிகாவுக்கு ஒரு மகன் பிறந்ததுதான் இப்போதைய கோடம்பாக்க லேட்டஸ்ட். பத்திரிக்கைகளில் செய்திச் சொல்லி ரசிகர்கள் இனிப்பு கொடுத்தார்கள். பாதகம் யாருக்கும் இல்லை என்பதால் அனைவருக்கும் மகிழ்ச்சி.
*****

மத நம்பிக்கையிலும், பழமொழியிலும், வரலாற்றிலும் இடம் பெற்ற ஒரு பழம். ஏவாள் முதலில் கடித்து ஆதாமிடம் கொடுத்தது. தினம் ஒன்று சாப்பிட்டால் மருத்துவனை தள்ளி வைக்கலாம் என - நமக்கு வெகுவாக பரிச்சயம் ஆனதுதான். அறிவியல் கண்டுபிடிப்புக்கு உதவியதில் தான் சுவாரஸ்யம்.

நாம் அறிந்திருப்பதைப் போல் புவிஈர்ப்பு விசை தத்துவத்தை கண்டுபிடித்தவர், இங்கிலாந்து விஞ்ஞானி ஐசக் நியூட்டன். அவர் ஓர் ஆப்பிள் மரத்தடியில் படுத்து இருந்தபோது, மரத்தில் இருந்து ஒரு ஆப்பிள் கீழே விழுந்ததை வைத்து இந்தத் தத்துவத்தை கண்டுபிடித்தார்.”மேலே எறியப்படும் எல்லாப் பொருளும், புவிஈர்ப்பு விசை காரணமாக கீழே வந்தே தீரும்” என்றார். அந்த ஆப்பிள் மரத்தை, லண்டனில் உள்ள ஆவணக் காப்பகத்தில் வைத்து பராமரித்து வருகிறார்கள்.

இந்த ஆப்பிள் மரத்தில் இருந்து 4 அங்குல நீளத்துக்கு ஒரு பகுதியை வெட்டி எடுத்து, விண்வெளிக்கு கொண்டு சென்றார்கள். போன மாதத்தின் ஒரு நாளில் நாசா, விண்வெளிக்கு அனுப்பிய அட்லாண்டிஸ் விண்கலத்தில், இந்த மரத்துண்டையும், நியூட்டன் புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டு 6 விண்வெளி வீரர்கள் சென்றார்கள்.

“விண்வெளியில் புவிஈர்ப்பு விசை கிடையாது என்பதால், அங்கு இந்த மரத்துண்டு கீழே விழாமல் அந்தரத்தில் மிதக்கும். இதனால் விண்வெளியில் நியூட்டனின் ஈர்ப்பு விசை விதி செல்லாது என்பதை அவருடைய ஆப்பிள் வைத்து நிரூபிக்கப்போகிறோம்” என்றார் அதை எடுத்துச் சென்ற விண்வெளி வீரர்.

விண்வெளி பயணத்தை முடித்த பிறகு, அந்த மரத்துண்டும், நியூட்டன் புகைப்படமும், லண்டன் ஆவணக்காப்பகத்தில் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. “நியூட்டன் உயிரோடு இருந்தால்கூட, விண்வெளியில் தனது விதி பொய்யாகும் அதிசயத்தை காண விரும்புவார்” என்று விண்வெளி வீரர்கள் வேடிக்கையாக கூறினார்கள்.

*****

நம்மில் எத்தனை பேர்களுக்கு இந்த விஷயம் தெரியும். இதை பத்திரிக்கைகளும் இங்கு சொல்லவில்லை. சினிமா சார்ந்த செய்திகளே போதும் என்று விட்டார்களோ என்று நினைக்க தோன்றுகிறது. நித்தியானந்தாவின் படுக்கையில் கிடைத்த சுவாரஸ்யம் உலக நடப்புகளில் கிடைப்பது இல்லை என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம். விஞ்ஞானத்தை வேப்பங்காய் ஆக நினைக்காமலும், விளையாட்டு சினிமா தாண்டியும் நாம் வர வேண்டிய தூரம் நிறைய.

பின் வரும் ஒர் நாளில் நம் மெயில் பாக்ஸ் நிரப்ப அந்த இரண்டாவது குழந்தையின் ஃபோட்டோ வரலாம். அப்போது நான் சொன்ன விஷயம் மறந்திருக்கும்.

அதனால் என்ன இப்போ?

.