Sunday, October 31, 2010

கனவு பூமியின்...


இன்று ஏறக்குறைய பிறந்த நாள்.

1931 அக்டோபர் 31-ம் நாள் சனிகிழமை....

செலுலாயிட் ஃபிலிம் தமிழிலும் பேசத் தொடங்கிய அற்புதத்தை 'காளிதாஸ்' படத்தின் மூலம் தமிழன் கண்டான்.

ஆம்....

தமிழ் சினிமா பிறந்துவிட்டது....

கனவு பூமிக்குள் தமிழன் பிரவேசித்து விட்டான். (80 வயதாகிறது).

இப்போது இருக்கும் 'தமிழ் சினிமா' நம் எல்லோருக்கும் அத்துப்படி. அலச, ரசிக்க எப்போதும் நாம் தயாராய் இருக்கிறோம். நம் கணத்தை திருடியிருக்கிறது. தெரிந்தே ஆசையோடு திருடு கொடுத்திருக்கிறோம். கொடுப்போம். சிரிக்க, கோபப்பட, பயப்பட, காதல், காமம் கொள்ளச் செய்திருக்கிறது. ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதில் விதிவிலக்குகள் மியூசிம் ஆசாமிகள். விதிவிலக்குகள் உண்டா, என்ன?

இன்று நாம் காணுகின்ற 'தமிழ் சினிமா' எப்படி இருக்கிறதோ, இப்படியாக உருக்கொள்ள எண்ணற்ற பலர் உழைத்தனர். ரஜினி, கமலுக்கு முந்தைய எம்.ஜி.ஆர், சிவாஜியைத் தெரியும். படங்கள் பார்த்திருக்கிறோம். அவர்களுக்கு முந்தைய தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா பற்றியும் கேள்விபட்டிருக்கிறோம். அதற்கும் முன்....

தமிழ் சினிமாக் குழந்தையைத் தாலாட்டி வளர்த்தவர்களைப் பற்றி வரலாறு இல்லை, படங்கள் இல்லை, அவர்கள் எடுத்த படங்களில் பல இல்லை. காலணா விலையில் வந்த பாட்டு புத்தகங்களின் கதைச் சுருக்கத்தில் நம் தமிழ் சினிமா வரலாறு கிடைக்கிறது!

காளிதாஸ் தனித் தமிழ் படமல்ல; தமிழிலும் தெலுங்கிலும் பேசிய பாடிய படம்! எச்.எம்.ரெட்டி டைரக்க்ஷனில், நாயகி டி.பி.ராஜலட்சுமி நடித்த படம். ஹீரோ தெலுங்கு நடிகர். பெயர் தெரியவில்லை. இந்தப் படம் எட்டே நாளில் எட்டாயிரம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது. வசூல் 75 ஆயிரம்.



பல பழைய பத்திரிக்கைகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் செய்திகள் விமர்சனங்கள், குறிப்புகள், போட்டோக்கள். தொடர்ந்த தேடல்... இடைவிடாத தேடல்.... தேடிக் கண்டுபிடித்து, திரட்டி தொகுத்திருக்கிறார் திரு.அறந்தை நாராயணன். 'கனவு பூமியின்...' என்னும் கட்டுரைத் தொடராக 'பொம்மை' இதழில் வந்திருக்கிறது. இப்போது புத்தகமாக, 'ஆரம்பகால தமிழ் சினிமா' (ரூ.100/- விஜயா பதிப்பகம். 044-2471 8757). அறந்தை நாராயணனின் பணி ஒரு இமாலய சாதனை.

வரலாற்றை சுருக்கமாக புதியதாகத் தந்திருக்கிறார். நிச்சயம் இந்த தலைமுறைக்கு தெரியாது. தெளிவான படங்களோடு இருக்கிறது.

எம்.ஆர்.ராதா நடித்த முதல் படம்(ராஜசேகரன்). 1939-ல் 'வீர ரமணி' என்றொரு படம். கதாநாயகி கே.டி. ருக்மணி. மோட்டார் சைக்கிளில் சவாரி செய்து ரசிகர்களின் இதயத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார், சிகரெட் பற்றவைத்துப் புகைத்து, சுருள் சுருளாகப் புகைவிட்டிருக்கிறார். இது ஒரு சண்டைப் படமாம்.'1939' என்பதுதான் இதில் விசேஷம். அவரின் புகைப்படம் இருக்கிறது.


புராணம் இல்லாமல் கதைகளிலும் புதுமை, புரட்சி செய்திருக்கிறார்கள் - பிராமண வகுப்பைச் சேர்ந்த வாலிபன், பிராமணரல்லாத வகுப்பைச் சேர்ந்த இளம் பெண்ணைக் காதலிக்கும் கதை 'சாந்தா'. 1941-ல் வெளிவந்திருக்கிறது. 'யம வாதனை', 'அடங்காப் பிடாரி', 'புலி வேட்டை', 'போலிச் சாமியார்', 'மாலைக் கண்ணன்' ஆகிய தனித்தனிச் சிறு கதைகளை இணைத்து 'சிரிக்காதே' என்ற பொது தலைப்பில் ஓர் படம் 1939-ல் வெளிவந்தது. என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், கொத்தமங்கலம் சுப்பு, என நகைச்சுவை நடிகர்கள் நடித்தது.

1941 'சாயா' என்று ஒரு படம் தயாரிக்கப்பட்டு வெளி வரவில்லை. வந்திருந்தால் வரலாற்றுப் புகழைப் பெற்றிருக்கும். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம் இது!

இப்படி, சுவாரஸ்ய பளிச் !..... உண்டு.

அறந்தை நாராயணன் அவர்கள், படங்கள் வெளிவந்த காலம், படங்களில் நடித்தவர்கள் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த புத்தகம் ஒரு Fast forward.

இப்பொழுது இருக்கும் நடிகைகள் சினேகா, பாவணா, அசின், நயந்தாரா கணக்காய் அப்பொழுதும் கண்ணுக்கு நிறைவாய் எம்.வி.ராஜம்மா, டி.சூர்யகுமாரி...... இருந்திருக்கிறார்கள்.


நான் வெகுவாக ரசித்தது - அப்போது வந்த படங்களின் பெயர்களை. உ.ம்:- 'பாலாமணி (அ) பக்கா திருடன்', 'உஷா கல்யாணம் & கிழட்டு மாப்பிள்ளை', 'வாலிபர் சங்கம்', 'மட சாம்பிராணி', 'டூபான் - குயின்', 'போர் வீரன் மனைவி & அசட்டு வீரன் மனைவி', 'என்னை அடியாதே பெத்தப்பா'.

இதில்,

'சைரந்திரி (அ) கீச்சவதம்' - இந்த பெயர் இப்போது வைத்தால் வரிவிலக்கு கொடுப்பார்களோ?

Wednesday, October 27, 2010

தீண்டும் இன்பம்

எந்திரன் - நமது பார்வை

எந்திரன் - திரையிலோ, திருட்டு ஸிடியிலோ இணையத்திலோ பார்த்துவிட்ட பிறகு, அவரவருக்கு கருத்தும் அபிப்பிராயமும் ஏற்பட்டுவிட்டது. முதல் நாள் விடியற்காலை 4 மணிக்கு படம் பார்த்த ஆரம்ப சந்தோஷம் அலாதியானது. ஆரவாரம் அடங்கி, அவரவர் வேலைப் பார்க்க தொடங்கிவிட்டிருக்கிறோம். இப்பொழுது சற்றே உணர்ச்சிவசப்படாமல், நுரை விளக்கிப் பார்ப்போம்.


எந்திரனுக்கு அதை உருவாக்கியவரின் காதலி மேல் காதல். இந்த கதையின் திரைக்கதையில், சில சுவாரஸ்யங்கள் தள்ளி நிறைய கோட்டைவிட்டிருக்கிறார்கள். ஒவ்வொன்றாக,

1. Prime numberன் அத்தனை சொல்லும் ரோபோவுக்கும் பெண்ணின் காதல் பெரிசு.

2. சுயசிந்தனை பெற்றவுடன் கவிதை படிக்க ஆரம்பித்து விடுகிறது, கட்டளையை மீறி.

3. ஒரு ரெட் சிப்பில் அத்தனை அடம் வந்துவிடுகிறது, ரெட் சிப்- உவமை. மக்களுக்கு புரியாமல் போய்விடக்கூடாது என்ற கவலை இயக்குனருக்கு.

4. ரோபோவினால் எல்லாம் முடியும் என்பதை வசனத்திலும் காட்சிகளிலும் திரும்ப, திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பது. பாடல்களிலும் அதே.

5. எந்த வேலை செஞ்சாலும் - ஆராய்ச்சி செய்வது வரை - அழகான காதலி இருந்தே தீருவாள். இந்த க்ளிஷேவை எப்போது மீறுவோம்?

6. பாடல் காட்சிக்காக (கிளிமாஞ்சாரோ ரஜினியை கோழையாக காண்பிக்க வேண்டுமா என்ன? காமெடி முயற்சி பண்ணியிருந்தாலும் 'சாரி'.

7. ரெண்டு, ஒரு ரஜினி ஓகே. திகட்ட திகட்ட எதற்கு அத்தனை ரஜினி.

8. Climax Graphics காட்சிகளை எவ்வளவு தூரம் justify பண்ண முடியும் - இயக்குனரால்? கதைக்காக.

9. செக்ஸை தாண்டி யோசிக்கும் ரோபாவால், சிக்கலான கேள்விக்கு - 'hypothesis' சொல்லும் ரோபோவால், நுட்பமாக பிரசவிக்கும் ரோபோவால், 'ஐஸ்'ஸின் மனதை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆச்சர்யம். ஒரு வேளை கதையின் ட்விஸ்ட் அதுதானோ!

10. ஏன் கடைசிவரை ஒரு 'பெண் ரோபோ' செய்யும் யோசனை, ரஜினிக்கு தோன்றவில்லை.

இருந்தும்.....இவ்வளவு இருந்தும்...


பணம் வைத்திருக்கிறார் - தயாரிப்பாளர்.

வித்தை கற்றவர் - இயக்குனர்.

அழகும், திறமையும், நடிக்கவும் - நாயகி.

பாடலாகட்டும், காட்சியாகட்டும், கிராஃபிக்ஸ் ஆகட்டும் - கூட்டணி, கூட்டணி உழைப்பும் அபாரம்.

அத்தனைக்கும் மேல் ரஜினி - மாஸ் பலம், ஓடும் குதிரை, ஜெயித்திருக்கிறது. 'வெற்றி' எல்லாவற்றையும்விட ஓங்கி உரைக்கும்.
*****
சமிபத்தில், சுஜாதா எழுதிய நாவலான 'தீண்டும் இன்பம்' படிக்க சந்தர்பம் வாய்த்தது (கிழக்கு பதிப்பகம்). கிட்டதட்ட பத்தாண்டுகளுக்கு முன் 'விகடனில்' தொடராக வந்திருக்கிறது. உங்களில் சிலர் படித்திருக்கலாம். நான் இப்போதுதான்.

நாவலின் ஒன் லைன் - கல்லூரிக்குப் போகும் பெண் கர்ப்பமானால் என்ன ஆகும்? இந்த ஒற்றைவரியை வைத்துக்கொண்டு, ஒரு பெண்ணின் மனப் போராட்டங்களை, இயல்பு மாறாமல், வெகு யதார்த்தமாக, ரசிக்கும்படி தந்திருக்கிறார். இதில் குறிப்பிடும்படியாக நான் கருதுவது, இன்றும் பல விஷயங்களில் முரண்படாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும்படி இருப்பதுவே. பொழுதுபோகும்படியாகவே இருந்தாலும் இளைஞர்களுக்கான 'மணி' கட்டப்பட்டு இருக்கிறது. வாத்தியாராச்சே !

ரசித்த இடம் -

"தேசியக் கருத்தரங்கம். அதற்கு பரீட்சைக்குப் படிப்பது போல இரண்டு பேரும் லைப்ரரி ஹாலில் படித்தார்கள். 'Unplanned Pregnancy' என்ற புத்தக்கதை பிரிட்டிஷ் கவுன்சிலிலிருந்து ப்ரமோத் எடுத்து வந்திருந்தான். சன்னமான குரலில் படித்துக்காட்டினான்.

'ஒரு பெண்ணுக்கு வேண்டாத கர்ப்பம் என்பது மிகக் கடினமான, கடுமையான ஒரு அனுபவம் ...............................................................................................................................................
அமெரிக்காவில் மாத்திரை சாப்பிடுபவர்களில் 16 சதவிகிதமும், உறைகளைப் பயன்படுத்துபவர்களில் 16 சதவிகிதமும் வேண்டாத கர்ப்பம் அடைகிறார்கள்.'

ப்ரமோத் அதைப் படித்துவிட்டு நிமிர்ந்தான். 'இதெல்லாமா சொல்லப்போறோம் ப்ரமோத்' என்றாள்.

'ரிஸ்க் இருக்கிறது தெரியாம மாணவ-மாணவிகள் அது பத்திரமானதுன்னு நெனைச்சுக்கிட்டு மாட்டிக்கறாங்கன்னு சொல்லலாம். செக்ஸ் எஜுகேஷ்னுக்கு வலுவான சாட்சியமாப் பயன்படுத்தலாம் இல்லையா? என்ன?'

'நீங்க என்ன யூஸ் பண்றீங்கன்னு கலாட்டா பண்ணுவாங்களே ப்ரமோத்? பயமா இருக்கு.'

'கேட்டா, சிரிச்சிட்டு ஐஸ்வாட்டர்னு சொல்லு.'

'புரியலை.'

புரிஞ்சவங்க நம்ம கட்சி. புரியாதவர்களுக்கு ஒரு க்ளு- வயது வந்தவர்களுக்கான சைவ ஜோக் இது. அடம்பிடிப்பவர்களுக்கு - ஒரு நடை நாவலை படிச்சுட்டு வாங்க, அப்புறமா சொல்லுறேன்.

*****
ரசித்த கவிதை

Wednesday, October 6, 2010

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!

நன்றி தினமணி.


ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்" உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா" 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

தஞ்சாவூரில் "சந்திரலேகா" வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: "ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''


படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ". "சந்திரலேகா" வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூறப்படுகிறார்!


ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக

"சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த்...


வரலாறுதானா 'சன் பிக்சர்'ஸின் "எந்திரன்"?

நிச்சயமாக "எந்திரன்" ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. 'சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான 'கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை 'எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்"டுக்கும் "கோகோ கோலா"வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர"ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் 'எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.


சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.

இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு 'எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட 'எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் 'எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக" (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, 'எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

'எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். 'எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் 'எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!
 
http://bit.ly/9hMsaO

நமது கருத்து, வரும் பதிவில்....