Saturday, May 10, 2014

தமிழ் நாட்டிற் சினிமா


நீங்கள் சினிமா விமர்சனம் எழுதுவதில்லையா? என கேட்கிறவர்களுக்கு எழுதியிருக்கேனே எனச் சொல்வதை நிறுத்திவிட்டேன். பழகிக்கொண்டேன்.

இப்போதெல்லாம் சினிமா நல்லா இருந்த 140 வார்த்தைகளுக்குள் வாட்ஸ்அப் அல்லது டிவிட்டி விடுகிறேன். விஸ்தாரமாக சொல்வதில்லை. விடாபிடியாக திருட்டு ஸிடியில் பார்க்காமல் தியேட்டரில் மட்டும் பார்க்கிறேன். அப்படியிருக்கும் இன்னும் சிலரும் வழக்கொழிந்து விடாமல் இருக்க வேண்டுமே என்றுதான் கவலையாக இருக்கிறது, நிற்க. 

சினிமா விமர்சனம் எழுதும், சொல்லும் விமர்சகர் மேல் எனக்கொரு விசனமுண்டு. இப்போது விமர்சகர் எனத் தனியாக யாரும் இருப்பதில்லை. படம் பார்க்கும் அனைவரும் ரஸிகனாக, பொ போக்க மட்டும் வருவதில்லை, அவர்கள் உள் இருக்கும் விமர்சகனையும் உயிர்போடு வைத்து அழைத்து வருகிறார்கள். இதற்கு தகவல் தொடர்பு விரிந்ததும், நமது ரசனை உயர்ந்ததும்-தாழ்ந்ததும் ஒரு சமூக காரணம். போகட்டும்.

பொதுவாக நமது சினிமா, இப்போது எப்படி இருக்கிறது? 

எப்போதும் இருக்கும் கேள்வி,  எது ஜெயிக்கும்? இதற்கான பதில் கண்டிபிடித்துவிட்டால் Patent rights வாங்க தயார், நீ நான் என.



எல்லா எழுத்தாளர்களும் பிரியப்பட்டு சினிமா விமர்சனம் செய்திருக்கிறார்கள். அனைத்துப் பத்திரிக்கைகளும் - குமுதம், விகடன், தினத்தந்தி என அவர்கள் ஓரிருப்பக்கம் ஒதுக்கி பாராட்ட குட்ட செய்தார்கள், செய்கிறார்கள். விகடனில் மார்க் வாங்குவது விஷேசம்.

கல்கி அந்த காலத்திலேயே சர்வ தேசிய பிலிம் திருவிழாவுக்காகச் சென்னையில் காட்டப்பட்ட வெளிநாட்டு படங்களைப் பார்திருக்கிறார். ஒப்பிட்டு சொல்லியிருகிறார். 'மனிதன் எப்படி உயர்கிறான்?' ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். (கல்கி கட்டுரைகள் தொகுதி-1, மணிவாசகர் பதிப்பகம்). அதில்  'சம்சாரம்' என மகத்தான வெற்றி பெற்ற படத்தை அவரது நடையில் எழுதியிருப்பார் (கழுவி, கழுவி ஊத்தியிருப்பார்!).

"பத்துப் படங்களுக்கு ஒரு படம் வீதமாவது நம் நாட்டையும் நாட்டு மக்களையும் உயர்த்தக் கூடிய முறையில் நம் ஸினிமா முதலாளிகள் உயர்தரப் படமாக எடுக்கக் கூடாதா? வெளிநாடுகளில் காட்டிப் புகழ்பெறக் கூடிய படமா எடுக்கக் கூடாதா?" . ஆனால் நல்ல படங்களை அவர் பாராட்டத் தவறியதில்லை. உதாரணம், நல்லதம்பி, சந்திரலேகா, வேலைக்காரி, வாழ்க்கை - போன்ற படங்களுக்கான இவரது விமர்சனம்.

புதுமைபித்தன் சினிமாவிலே இருந்திருக்கிறார். கல்கியிடம் இருந்த ஏக்கம் சுஜாதவிடமும் இருந்தது. இப்போது நிறைய எழுத்தாளர்கள் சினிமாவில் இருப்பது மகிழ்ச்சி.

விளக்கமாக சொல்லும் விமர்சனமும் ஒரு கலை, வரவேற்க கூடியதே. அதில் விற்பனர்கள் பார்த்துக் கொள்வார்கள். நமது பொறுப்பு நல்ல சினிமா எடுப்பதும், ரசிப்பதும்.

***

இதில் கவிதை செய்திருப்பவர் பாரதிதாசன் என்பது நம்மில் சிலர் தெரிந்திருக்கலாம். சினிமா விமர்சனத்தை கவிதையில் சொன்னதில் இவர்தாம் முன்னோடி. எளிமையாக, படித்ததும் புரியும். 56 வரியில் சொன்ன கவிதை அப்படியே இதோ...

உருவினையும் ஒலியினையும் ஒன்றாகச் சேர்த்தே
  ஒளிபெருகத் திரையினிலே படங்காட்டும் கலையைத்
திருவிளைக்கும் நல்லறிஞர், ஐரோப்பி யர்கள்
  தெரிந்துவெளி யாக்குகின்றார் எனக்கேட்ட நாளில்
'இருவிழியால் அதுகாணும் நாள் எந்த நாளோ,
  என்நாடும் அக்கலையில் இறங்குநாள் எந்நாள்
இருள் கிழித்துத் தமிழ்நாடாம் நிலவுதனை, உலகின்
  எதிர்வைக்கும் நாள் எந்நாள்' என்றுபல நினைத்தேன்.

ஒலியுருவப்படம் ஊரில் காட்டுவதாய்க் கேட்டேன்;
  ஒடினேன்;ஒடியுட்கார்ந் தேன் இரவில் ஒருநாள்
புலிவாழும் காட்டினிலே ஆங்கிலப்பெண் ஒருத்தி,
  புருஷர்சக வாசமிலாப் புதுப்பருவ மங்கை
மலர்க்குலத்தின் அழகினிலே வண்டுவிழி போக்கி
  வசமிழந்த படியிருந்தாள்! பின்பக்கம் ஒருவன்
எலிபிடிக்கும் பூனைபோல் வந்தந்த மங்கை
  எழில் முதுகிற் கைவைத்தான்! புதுமை ஒன்றுகண்டேன்.

உளமுற்ற கூச்சந்தான் ஒளிவிழியில் மின்ன,
  உயிர் அதிர்ந்த காரணத்தால் உடல் அதிர்ந்து நின்றே,
தெளிபுனலின் தாமரைமேற் காற்றடித்தபோது
  சிதறுகின்ற இதழ்போல செவ்விதழ் துடித்துச்
சுளைவாயால் நீயார்என் றனல்விழியாற் கேட்டாள்
  சொல்பதில்நீ என்றதவள் சுட்டுவிரல் ஈட்டி!
களங்கமிலாக் காட்சி, அதில்இயற்கை யெழில்கண்டேன்!
  கதைமுடிவில் 'படம்' என்ற நினைவுவந்த தன்றே!

எந்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்,
  எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
ஒன்றேனும் தமிழர்நடை யுடைபா வனைகள்
  உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர் உள்ளதில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதா யில்லை!
  ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவா யில்லை!
ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவா யில்லை
  ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதா யில்லை!

வடநாட்டார் போன்ற உடை, வடநாட்டார் மெட்டு!
  மாந்தமிழர் நடுவினிலே தெலுங்கு கீர்த் தனங்கள்!
வடமொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில ப்ரசங்கம்!
  வாய்க்கு வரா இந்துஸ்தான்! ஆபாச நடனம்!
அடையும் இவை அத்தனையும் கழித்துப் பார்க்குங்கால்,
  அத்திம்பேர் அம்மாமி எனுந் தமிழ்தான் மீதம்!
கடவுளர்கள், அட்டைமுடி, காகிதப் பூஞ்சோலை
  கண்ணாடி முத்துவடம் கண்கொள்ளாக் காட்சி

பரமசிவன் அருள்புரிய வந்துவந்து போவார்!
  பதிவிரதைக் கின்னல்வரும் பழையபடி தீரும்!
சிரமமொடு தாளமெண்ணிப் போட்டியிலே பாட்டுச்
  சிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து
வரும் காதல்! அவ்விதமே துன்பம் வரும், போகும்!
  மகரிஷிகள் கோயில்குளம் - இவைகள் கதாசாரம்.
இரக்கமுற்ற படமுதலாளிக் கெல்லாம் இதனால்
  ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!

படக்கலைதான் வாராதா எனனினைத்த நெஞ்சம்
  பாழ்படுத்தும் முதலாளி வர்க்கத்தின் செயலால்,
படக்கலையாம் சனியொழிந்தால் போதுமென எண்ணும்!
  பயன்விளைக்கும் விதத்தினிலே பலசெல்வர் கூடி
இடக்ககற்றிச் சுயநலத்தைச் சிறிதேனும் நீக்கி
  இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப்
படமெடுத்தால் செந்தமிழ் நாடென்னும் இளமயிலும்
  படமெடுத்தாடும்; தமிழர் பங்கமெலாம் போமே!

***

56 வரிகளானாலும் பிற்பாடு படிக்கலாம் என வந்துவிட்ட அன்பர்களுக்கும், படித்தவர்களுக்கும் சேர்த்தே நான் சொல்ல விரும்புவது இதைத்தான் - விமர்சனம் வைப்பது முறைமை, ஒரு கலை. அதில் மெனக்கெடல் உண்டு. கவனம் தேவை. அதை விட ரஸிப்பது எளிமையானது. இயல்பாக வருவது.  

வாருங்கள்... திறந்த மனதுடன் ரசிக்கலாம், (முடிந்தால்) ஆக்கலாம், பின் விமர்சிக்கலாம். அடுத்தடுத்த படிநிலையும் இதுதான்!