Friday, April 29, 2016

சிறிது வெளிச்சம்

"நம்பிக்கைதான் வெளிச்சம்"


எங்கள் பக்கத்து வீட்டு குழந்தை, இரண்டரை வயது. தனக்கு காயமேற்பட்டதால் வலியிருப்பதாகவும் புண்ணைப் பார்க்கும்படியும் சொன்னாள். குண்டூசி அளவு புண்ணில் பொக்கு கட்டியிருந்தது. மிகவும் சிறியது. அதைப் பற்றி விஸ்தாரமாகச் சொன்னாள். பார்த்து, ஒன்றுமில்லையென ஊதிவிட்டு ஆறிவிடும் என்று சொன்னதும் சரி என ஒப்புக்கொண்டாள்.

சிறியவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் கவனித்து விடுகிறார்கள். எதைப் பற்றியும் அறியும் ஆவலோடு இருக்கிறார்கள். என் பக்கத்து வீட்டு குழந்தைமட்டுமல்ல எல்லா குழந்தைகளும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள்.

பட்டாம்பூச்சி பிடிப்பது, ஓடி விளையாடுவது, தெரிந்துகொள்ளும் பொருட்டு எதையும் கேள்வி கேட்பது, அவர்களின் மன இயல்பாக இருக்கிறது. நாம்தாம் புரிந்து கொள்ளாமல் அதட்டி அடக்கிவிடுகிறோம். பெரியவர்களாக நடந்து கொள்கிறோம். அவர்களை அப்படி நடக்கச் சொல்லி பழக்குகிறோம், கட்டாயப்படுத்துகிறோம்.

சின்ன சின்ன விஷயங்களை சிறியவர்களுக்கானது என முடிவு செய்துவிடுகிறோம். ஆனால் இப்படி சிறியது என பெரியவர்கள் மறந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு தொடர் கட்டுரையாக எழுதி தொகுத்த நூல்தான் 'சிறிது வெளிச்சம்'.

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய இந்த கட்டுரைகளை புத்தகமாக - விகடன் வெளியீடாக வந்திருப்பது நம்மில் பலர் அறிந்தது. இதை முழுவதுமாக இப்போதுதான் படித்து முடித்தேன். ஒரு சில கட்டுரைகளை அது வெளிவரும் காலங்களில் படித்திருக்கிறேன்.

உண்மையில் நம்மை சுற்றி பகலிலும் கண்டு கொள்ளபடாத எத்தனையோ சம்பவங்கள், நிகழ்வுகள், மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது சிறிது வெளிச்சமாவது பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” என்கிறார் எஸ்.ரா.

வாழ்க்கையில் நாம் என்னவெல்லாம் செய்யத் தவறியிருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும், அன்றாட வேலைப்பளுவினால் தங்களைச் சூழ்ந்துள்ள மனிதர்களை விட்டு விலகி எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என கோர்வையாகச் சொல்லி செல்கிறார். நாம் கவனத்தில் கொள்ளாதவைகளின் நினைவு தொகுப்பு இந்த நூல்.

இதில் மொத்தம் 58 விசயங்களை நம்மோடு பேசுகிறார். ஒவ்வொன்றை பற்றி சொல்லும் போதும், தகுந்த ஒரு சிறுகதை, திரைப்படம் மூலம் அவரது தனித்துவமான நடையில் விளக்கியுள்ளார்.


***
நம்மில் எத்தனைப் பேர் கடைசியாக கடிதம் எழுதியது? இதற்கு நினவுகளின் அடுக்குகளில் இருந்து தேடித்தான் பெரும்பாலானவர்கள் பதில் சொல்வார்கள். நாளைக்கு என்ன கிழமை என்பது போல சுலபமாக பதில் சொல்ல முடிவதில்லை. விஞ்ஞானமும் செல்போனுமாக வளர்ந்துவிட்ட காலத்தில் யாரும் யாருக்கும் கடிதம் எழுதுவதில்லை. இங்கு கடிதம் எழுதுவதில்லை என்பது புகார் அல்ல. அதை நாம் மறந்துகொண்டே வருகிறோம்.



"கடிதம் என்பது வெறும் பரிமாற்றம் மட்டுமல்ல. அது நாம் இன்னொருவரை நேசிக்கிறோம் என்பதன் சாட்சி. ஒருவகையில் கடிதம் நம் மனதின் குரல். நேரில் சொல்ல முடியாத தவிப்பைக் கடிதம் சொல்லிவிடும். கண்ணீர்க்கறை படிந்த கடிதங்களும், பிரிவின் அழியாத மணமுள்ள கடிதங்கள், தற்கொலை செய்து கொண்டவனின் கடிதங்கள், முதல் காதலை சொன்னக் கடிதங்கள்... " என பட்டியலிட்டு சொல்கிறார். உறவுகள் சுருங்கிவிட்ட சூழலில் குறுஞ்செய்தி போதுமானதாக இருக்கிறது. இன்னொரு பக்கம் ஊடகங்கள் விலாவரியாக விளக்கி சொல்கிறன. மிதமிஞ்சிய செய்திகள், தகவல்களால் சலிப்பாகிறது.

எப்போதும் அழ பழகிய நமக்கு உணர்வுகளை கடத்த இருந்த வழிகளை ஒவ்வொன்றாக
அடைத்துவிட்டு வெறுமனே மறுபடியும் அழுகிறோம். நமது கலைகளைப் போல காரணமேயில்லாமல் இப்பழக்கத்தை கைவிட்டுக் கொண்டிருக்கிறோம்.

அடுத்தவரைப் பற்றி அக்கறைப் படுகிறவர்களால் மட்டுமே கடிதம் எழுத முடியும். ரவீந்திரநாத் தாகூர் எழுதிய 'மனைவியின் கடிதம்' சிறுகதை உதாரணமாக தருகிறார். சிறந்த கதை. மேலும் இரானியத் திரைப்படத்தின் (Poet of the wastes) கதையையும் சொல்கிறார். தபால் அட்டையோ, மின்னஞ்சலோ எதுவாயினும் உங்கள் அக்கறைகளை அடுத்தவருடன் பகிர்ந்துகொள்ளுங்கள் என்பதில் உண்மையிருக்கிறது.


***
இப்படியாக.... கதை சொல்ல வேண்டிய அவசியம், வால் இல்லாத நாயின் பின்னணி, குடும்ப விரிசலுக்கான காரணம், அக்கறை, பரஸ்பர அன்பு, நமது முட்டாள்தனங்கள் அபத்தங்கள், புகைப்படத்தை பற்றி, குழந்தையிடம் காட்டும் பேதம், புத்தகங்கள் மீதான ஏளனம், விமான பயணம், இளைஞர்களின் அக்கறையை, வீட்டைவிட்டு ஓடிவந்த சிறுவர்களை, கயிற்றின் மீது நடப்பவர்கள், சாலையில் செத்துகிடக்கும் தவளை என நம் அவசர யுகத்தின் கவனிக்க தவறிய பட்டியல் நீள்கிறது.

இக்கட்டுரைகளின் ஒன்றில் ஒரு கேள்வி வருகிறது, 'உலகில் அதிகம் புரிந்துகொள்ளப்படாமல் போவது எது? – என்பதே அது. யோசிக்க வைக்கும் கேள்வி. இதற்கான பதில் தெரிந்ததும் இன்னும் இன்னும் யோசிக்க வைக்கும். 

எது அதிர்ஷ்டம், எதுவெல்லாம் துரதிர்ஷ்டம் என சுவாரஸ்ய பட்டியலில் ஒரு கட்டுரையிருக்கிறது. ஒட்டகத்தின் கண்ணீர், வீட்டின் இதயத்துடிப்பை கேட்டதுண்டா?, வீட்டுக்காரம்மாவைச் சமாளிப்பது எப்படி? பல்லினா பயமா?, புல்லின் நிழலில் இளைப்பாறுங்கள், உடைகள் பேசும் உண்மை, பெண்ணின் உயரம் பெரும் துயரம், உங்களை இயக்கும் சக்தி.... இன்னும், இன்னும்... இதில், எதை விடுவது?

அன்றாட வாழ்வின் கூண்டுகளைத் தாண்டி சற்று பறந்து பாருங்கள் என்கிறார். இப்பத்திகள் சொல்லும் விஷயங்கள் எளிமையானவை. புரிந்துகொள்ளக் கூடியவை. எல்லா கட்டுரைகளிலும் இருக்கும் பொது அம்சமென நான் கருதுவது எழுத்து வசீகரம். 

All you need is love, nothing more. இதுதான் இப்புத்தகம் சொல்லும் மையம். அடுத்தவர் மேல் அன்பு பாராட்ட வழியுறுத்தும் கட்டுரைகள். நம் காலகட்டதிலும், பின் வரும் காலத்திலும், மானுடத்திற்கு தேவையானது அன்புதானே. வேறென்ன இருக்கமுடியும் ?

 

***
இவரது எழுத்தில் ஒர் ஈர்ப்பு வாசனையிருக்கிறது எனத் தோன்றுகிறது. எழுத்தில் வாசனை சேர்க்கும் ரசவாதி. "சொற்களுக்கும் வாசனை இருக்கிறது. அது எப்போதோ, யார் கவிதையிலோ, அரிதாக மனம் நழுவும் தருணங்களில் உணரப்படுகிறது" என ஒரு வரி சொல்கிறார். உண்மை! நீங்கள் முழுவதும் படிக்கும்போது ஓர் இடத்திலேனும் நான் கூறும் வாசமறிவீர்கள். மழை தூறத் துவங்கியதும் மண் புரளும் வாசம் போல.

என்னைக் கேட்டால், இதில் 58 வாசனை இருக்கிறது என்பேன்.