Tuesday, April 27, 2010

என் 'போன' வாரம்

போன வாரத்தின் அதிர்ஷ்ட நாளின் ஒரு பொழுதில் என் மெயில் பாக்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானது. எனது sent item 'மாத கடைசி' சம்பளகாரனின் பாக்கெட் போலானது. 'காலி'. இதன் விளைவு சற்று தாமதமாகத் தான் தெரிந்தது.


என் அனுமதியின்றி நண்பர்களுக்கு message forward ஆகி போக ஆரம்பித்தது. டெல்லியில் இருக்கும் என் நண்பன் கூப்பிட்டு சொன்ன பிறகுதான், விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. எனது இந்த கையறு நிலையறிந்து எங்கேயும் அரை கம்பத்தில் கொடி பறக்கவிட அரசாங்கம் மறுத்துவிட்டது. மான நஷ்ட வழக்கு தொடரலாமென்று தீர்மானித்து, வக்கீல் நண்பரை தொடர்பு கொண்டேன். யார் மேல் போடுவது என்ற ஒற்றை கேள்வியில் என் net result தெரிந்துவிட்டது. திருவாளர் வைரஸ் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்துவது சாத்தியமில்லை என்பதால், தீர்மானம் கை விடப்பட்டது.

என் நிலை விளக்கி, காணமல் போனதை முடிந்தால் கண்டுபிடித்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டி விரும்பி கையியொப்பம் இட்டு customer care க்கு மெயில் அனுப்பினேன். என் நிலைக்காக அவர்கள் வருந்துவதாகவும், எனக்கு உதவுவதற்காகவே காத்திருப்பதாகவும் மேலும், மிக சரியான விவரங்கள் தந்தால் அவர்கள் ஒத்துழைப்பு தர ஒரு மனதாக தீர்மானித்து விட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள். பதில் மெயிலை பத்திர படுத்திக்கொண்டேன்.

உலகின் முதல் கம்ப்யூட்டர் வைரஸ், கார்னெல் பல்கலைக்கழக மாணவர் மோரிஸால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 2,1988-ம் வருடம் 99 வரியில் எழுதபட்ட சிறிய program. சின்னதாக உள்ளே நுழைந்து ஒவ்வொரு ஃபைல்களாக அழித்து கம்ப் யூட்டரின் செயல்பாட்டையே முடக்கியது மோரிஸின் வைரஸ். முதல் மூன்று நாட்களில் ஆறு ஆயிரம் கம்ப்யூட்டர்கள் காலி. பல்கலை கழகம், இராணுவம், மருத்துவ ஆராய்ச்சி கூடம் என பல இணையதளங்களை ஒரு கை பார்த்தது. மொத்தம் 100 மில்லியன் டாலர் நஷ்டம். ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம். நடு இரவு 34 நிமிடம் கழித்து தான் (நவம்பர் 3,1998) விளைவுகளை உலகம் உணர ஆரம்பித்தது. அந்த வகை வைரஸ்களுக்கு மோரிஸ் வார்ம் என்று பெயர் சூட்டிக் கௌரவித்தார்கள். 'இணையம் எங்கே வீக்காக இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். அதனால்தான் வைரஸை உருவாக்கினேன். மற்றபடி நான் நல்ல பையன்' என்று அறிக்கைவிட்டான் மோரிஸ்.

என் வரையில் இணையத்தில் பாதுக்காப்பாக உலவ:                                        Internet security உள்ள Antivirus காசு கொடுத்து வாங்கிக்கொள்வது. இலவசமாகவும் கிடைக்கிறது. தெரியாதவர்களிடம் இருந்து வரும் மெயிலை திறக்காமலே 'டெலிட்' செய்து விடுவது. நம் பாஸ்வேர்டை ரகசியமாக காப்பது. முக்கியமா மெயிலில் வருகிற எந்த லிங்கையும் கிளிக்காமல் இருப்பது.

இல்லையென்றால் இன்னொரு வழியும் இருக்கிறது. கைகள் ரெண்டும் மேல் தூக்கியவாறு, கை ஒட்டியபடி கிழக்கு முகம் பார்த்து, வலது பக்கம் மூன்று முறையும், இடது பக்கம் மூன்று முறையும் சுற்ற வேண்டும்.

சுத்தினால் இழந்தது மீண்டு வருமா?

புண்ணியம் வரலாம்.