Saturday, August 7, 2010

ஞானப் பல்


அடிக்கடி தொந்தரவான பல் வலி உபாதையுடன் அலுவலகம் வருகிறேன். பல் வலிக்கான காரணம் - ஞானப் பல் முளைக்கிறது.

                                
ஒருவருக்கு கடைசியாக முளைக்கும் நான்கு கடைவாய்ப் பற்கள்தான் ஞானப் பற்கள் (Wisdom teeth). 'விஸ்டம்' என்றால் அறிவு, ஞானம் என்று மட்டும் அர்த்தமில்லை. தற்பெருமை உணர்வு என்றும் பொருள் உண்டு. Late teen age 17 அல்லது 18 வயதிற்கு பின் நமக்கு நன்கு விபரம் தெரிந்து முளைப்பதால் இதை ஞானப் பற்கள் என்று சொல்கிறார்கள் !.

பொதுவா பற்களில் பற்சொத்தை, பயோரியா (பற்களை சுற்றியுள்ள எலும்பை தாக்கும் நோய்), ஹாலி டோலிஸ் (பற்சிதைவால் ஏற்படும் வாய் துற்நாற்றம்)- னு பிரச்சனை வரும். ஆனால் நமக்கு, (ஞான !) பல் முளைக்க போதுமான இடம் இல்லாத காரணத்தால் தொந்தரவு.

காரணம் தெரிந்திருப்பதால் டாக்டரை சந்திப்பதில் தாமதம். வலி அவ்வளவு திவிரம் இல்லை. முன்பொருமுறை இதே காரணம் ஏற்பட்டு இருக்கிறது. அதை பிறகு சொல்கிறேன்.பல் வலி முதல் பாதினா, டாக்டர் பார்க்கும், அனஸ்தீசியா, ஆஸ்பிட்டல் வாசம்னு ஜோரா போகும் இரண்டாம் பகுதி.


இதில் அனஸ்தீசியா பற்றி கொஞ்சம் சேர்ந்து சிந்திப்போம்.

அனஸ்தீசியா என்பது ஒரு கிரேக்கச் சொல். இதற்கு, இல்லாத என்றும், உணர்வுக்காக என்றும் பொருள். ஆலிவர் வென்டால் ஹோம்ஸ் என்பவர்தான் 1946-ல், இந்த வார்த்தையை உருவாக்கினார். உணர்வு நீக்கி கண்டுபிடிப்பால், பல வகை அறுவை சிகிச்சையின் கதவுகள் திறந்தன.

1946க்கு முன்வரை அறுவை சிகிச்சை என்றாலே அனைவருக்கும் நடுக்கம்தான். 'பல்லை' எடுப்பதுகூட பயங்கரமான விஷயம் தான். அறுவை சிகிச்சை செய்யும் நபருக்கு, ஆல்கஹால், ஓபியம் கொடுத்து, நல்ல பலசாலியான பத்து மனிதர்களைக் கொண்டு அவரைப் பிடித்துக் கொள்ளச் செய்துவிட்டு, அறுவை சிகிச்சை நிபுணர், மிக துரித கதியில் சிகிச்சையை முடிப்பார். இந்த நிலையில் நோயாளி மிக பயங்கரமாக அலறுவார்; மயங்கிவிடுவார்; இறப்பு நேரிடுவதும் உண்டு.

*****
உணர்வு நீக்கியின் உபயோகம், பழங்கால 'இங்கா' இன மக்களிடம் இருந்திருக்கிறது. 'கோக்கோ' மர இலைகளைச் சுவைத்தபின் நோயுண்டாக்கும் கெட்ட ஆவியை விரட்ட மண்டையில் துளை போடுவார்கள். கோக்கோ மரப்பிசினை துளை போடும் இடத்தில் பலமணி நேரம் தடவி, அந்த இடம் மரத்துப் போகச் செய்து ஆவி விரட்டுவர். கெட்ட ஆவி உடலுக்குள் நுழைந்தது நோய்க்கு காரணம் என அக்கால மக்கள் நம்பினார்கள்.

*****

நாம் பாடத்தில் படித்தது போல், பிரிஸ்ட்லி(Priestley) என்ற அமெரிக்க கெமிஸ்ட் கி.பி.1772-ல் 'நைட்ரஸ் ஆக்ஸைடை'க் (N2O) கண்டு பிடித்தார். அதை சுவாசித்தால், மனம் லேசாகி, ரொம்ப சந்தோஷப்பட்டது. அவருக்கு ஏற்பட்ட சிரிப்பை அடக்கவே முடியவில்லை. தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தார். எனவே இவ்வாயுவுக்கு 'சிரிக்கும் வாயு' எனப் பெயரிட்டார்.


கார்டனர் கியூன்கி கால்ட்டன் (Gardner Quincy Colton) என்ற நிபுணர் 1844-ம் ஆண்டு, டிசம்பர் 10 ஆம் நாள் நைட்ரஸ் ஆக்ஸைடின் சாதனைகளை நடுத் தெருவில் எல்லோரும் பார்த்து, மெய்சிலிர்த்து வியப்படையும்படி செய்து காட்டினார். பார்வையாளர் கூட்டத்தில் 'ஹோரஸ் வெல்ஸ்' (Horace Wells) என்ற பல் மருத்துவரும் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார். N2O தான் வலி நீக்கியாகச் செயல்படுகிறது என வெல்ஸின் மூளை சொல்லியது.

வெல்ஸ், நைட்ரஸ் ஆக்ஸைடின் குணத்தை, பல் பிடுங்கும் நோயாளிகளிடம் செலுத்தி சோதிக்க விரும்பினார். நைட்ரஸ் ஆக்ஸைடு உள்ள ரப்பர் பையைத் திறந்து, நோயாளியின் முகத்தருகே கொண்டு சென்றார். நோயாளி வாயுவை சுவாசித்ததும், தோல் வெளுத்து, கண் நீலமாகி, தலை சாய்ந்தது. நோயாளியின் பல்லை வெகு வேகமாகப் பிடுங்கினார். நோயாளி பயங்கரமாக அலறுவார் என எதிர்பார்த்தால், அவரிடம் ஒரு சத்தமும் இல்லை. நோயாளி கொஞ்ச நேரத்தில் கண்விழித்தார்.

1846ம் ஆண்டு வெல்ஸ் பெயர், உணர்வு நீக்கியின் கண்டுபிடிப்பில் வெளியானது. புத்தகம் வெளியிட்டார். நியூயார்க் போய் குளோரோபார்ம் பயன்படுத்தி, பல் பிடுங்குதலின் போது குளோரோபார்மே பாதுகாப்பானது, சிறந்தது என நிரூபித்தார்.

பின்னர் ஜனவரி, 1848 தற்கொலை செய்து கொண்டது தான் சோகம்.

 வெல்ஸ் உலகைவிட்டு மறைந்தபின் Father of anesthesia என்று மருத்துவ கழகம் பாராட்டியது.
*****

தலையனையாக புத்தகம் படித்து, நவீன மருத்துவதுடன் சடுதியில் பிடுங்கி விடுகின்றனர், இப்போதெல்லாம். என் ஞானப் பல்லில் ஒன்றை, ஏற்கனவே அனஸ்தீசியா பெற்றுகொண்டு இழந்துவிட்டேன். நோகாமல் பல்லை தட்டி கையில் கொடுத்து விடுகிறார்கள். இப்போது, இன்னொன்று போக்கு காட்டிக்கொண்டிருக்கிறது.