Monday, April 19, 2010

சினிமாதான் ஆனால் '...' சினிமா


ஒர் ஈரானிய படம்கூட பார்த்தது இல்லை என்பவரா. அப்படின்னா நான் பேச வந்தது உங்ககூட தான். (தலைப்பில் விடுபட்ட வார்த்தை 'நல்ல')

சிறுவயதில் தூர்தர்ஷனில் மதியங்களில், பின்னிரவுகளில் வேற்றுமொழி படம் சப்டைட்டிலோடு பார்திருப்போம். சன் டிவியெல்லாம் நம்மை தொடாத காலத்தில், இந்தி நிகழ்ச்சி முடிந்த பிறகு மாலை நேரங்களில் கொஞ்சம் தமிழ் காட்டுவார்கள். நான் எண்பதுகளில் பிறந்த ஆசாமி. ராமாயணம், மஹாபாரதத்தை அக்கம்பக்கத்து வீடுகளில் பார்த்ததுண்டு. அப்போது எங்கள் வீட்டில் டி.வி. இல்லை.

இந்தி முதல் ஒரிய மொழி வரை, புரியாவிட்டாலும் அந்த படங்களின் கதைப்போக்கும் நடிப்பும் பார்த்து ரசித்ததுண்டு. அந்தளவிற்கு மட்டுமே என் அனுபவமிருந்தது. திருச்சியில் படிக்கும்போதுதான் பிற மொழி படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னைக்கு வந்த பின் சற்று விசாலமாச்சு.

தீபாவளிக்கும் பொங்கலுக்கும் கூட்டத்தில் முண்டியடித்து திரையரங்களில் நாம் பார்த்த படங்கள் எல்லாம் வேறு சாதி. ஒரு ரசிகனாக நம் படங்கள் ஏற்படுத்தியிருக்கும் அபிப்பிராயங்கள் நமக்கு நன்றாக தெரியும். ஆனால், ஈரானிய படங்களில் பல்டியடிக்கற ஹீரோ இல்லை; உரசிக் காதலிக்கிற ஹீரோயின் இல்லை; அவர்களை துரத்துகிற வில்லன் இல்லை; காமெடியன் இல்லை; குரூப் டான்ஸ் இல்லை; சண்டை இல்லை; செண்டிமென்ட் இல்லை; பாட்டும் இல்லை.

எந்தவொரு மூன்றாம் உலகநாடும் இதுவரை பெற்றிராத அளவுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல விருதுகளை ஈரானிய திரைப்படங்கள் பெற்று வருகின்றன. அப்படி என்னதான் ஈரானிய படங்களில் இருக்கிறது?

ஈரானிய நாடு, இஸ்லாமிய நாடு; அதற்கான கலை, இலக்கியம், திரைப்படம் போன்றவற்றிலும் கட்டுப்பாடுகள் உண்டு. பெண்களை திரையில் காட்டும்போது தலைமுதல் கால் வரை மறைக்கப்பட்ட உடைகளில் மட்டுமே திரையில் காட்ட முடியும், காதல் காட்சிகளோ பாலுணர்ச்சி சம்பந்தபட்ட காட்சிகளோ கட்டாயமாக திரைப்படத்தில் இடம்பெற முடியாது. காதல் காட்சியிருந்தாலும் கூட தொடக்கக்கால தமிழ் திரைப்படங்களில் இருந்தது போல இருவரும் தொடாமல்தான் நடிப்பார்கள். இவ்வளவு கட்டுப்பாடுகள். இருந்தும் அற்புதமான படங்களை உலகிற்கு அளித்து வருகிறார்கள். மிகச்சிறிய முடிச்சைபோட்டு அவிழ்ப்பதுதான் அவர்களுடைய படங்களின் கதைப்போக்காக இருக்கிறது.

ஒவ்வொரு படத்திலும் வாழ்க்கையின் உயிர்ப்பு, நாட்டின் கலாச்சாரம் இருக்கிறது. ஒரு படத்தைப் பார்த்ததும் மனதுக்குள் ஏற்படும் அந்த உணர்வே ஒரு புது அனுபவமாக இருந்தது. அந்த படங்களை பார்த்த பிறகு, நம் நிலையில் ஏதோ உயர்கிறது. ரசனை, நிச்சயம் மாறுகிறது. ரசனை மாறினால் வாழ்க்கையில் எல்லாமே மாறுகிறது.

பொதுவாக உலகப் படங்கள் என்றதும் புரியுமா? போரடிக்குமா? சொல்லுறத பார்த்தா டாக்குமென்ட்ரி போல இருக்க போகுது என்று சந்தேகிப்பீர்கள். காமெடி இல்லையாம், சண்டை இல்லையாம், குறைந்தபட்சம் ஒரு பாட்டுகூட இல்லாமா ஒரு படமா? அட போங்கப்பா.....

உங்களுக்கு என்னுடைய எளிமையான பதில் 'அவற்றை பாருங்கள்' என்பதுதான்.

முதல் முறை பார்க்கும்போதே நமக்கு பிடிக்கும். நானும் இப்படி யாரோ வழிகாட்டி, கை பிடித்துதான் பார்க்க ஆர்வமானேன். நாளைக்கு உங்கள் கைபிடிக்கவும் யாரோ காத்திருக்கிறார்கள்.

நல்ல திரைப்படம் தனது முதல் காட்சியிலிருந்தே கதை சொல்லத்துவங்கி விடுகிறது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் - 'சொர்க்கத்தின் குழந்தைகள்' Children of Heaven இயக்கம்: மஜீத் மஜிதி. தங்கையின் காலணிகளை தைக்கக் கொடுக்கப்போன இடத்தில் தவறவிட்டு விட்டு அண்ணனும் தங்கையும் ஒரே காலணிகளை பயன்படுத்தி, புதிய காலணிக்காக......  

இப்படி ஒன்றரை மணிநேரம் ஓடக்கூடியது இந்த திரைப்படம்.  (கதைச் சொல்லும் உத்தேசமில்லை எனக்கு)

பொருந்தாத காலணிகள் நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் தம்மை அறிவிக்கின்றன. பொதுவாக காலணிகள் வழியில் அறுந்துவிடும்போதும், தொலைந்துபோகும் போதும் நமக்கு ஏற்படும் மன உணர்வுகள் நுணுக்கமானவை.

'உங்கள் காலணிகள் சரியாகப் பொருந்தும்போது அதை மறந்துவிடுகிறீர்கள்' என்று ஒரு ஜென் பழமொழி சொல்கிறது. Children of Heaven ஒரு முறை பார்த்துவிட்டு சொல்லுங்க.

உங்களை கை நீட்டி அழைக்கிறேன், விரல் பிடிக்க தயாரா?

.