Wednesday, May 19, 2010

மோதிரக்கையால் குட்டுப்பட்ட ரஹ்மான்


போன சனி கிழமை செந்தமிழ் மாநாட்டு மைய பாடல் அடங்கிய குறுந்தகட்டை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். அதை தூர்தர்ஷனில் லைவ்வாக போட்டார்கள்.

'என் ரேடியோ நிகழ்ச்சிகளுக்கு அப்போது டி.ஆர்.பாப்பாதான் இசையமைத்துக் கொண்டிருந்தார்.​ ஒரு ஒளிப்பதிவுக்காக சென்றிருந்த போது ஒன்பது வயது சிறுவன் கீ போர்டு பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்தான். ​ 'இவன் யார்' என்றதும் டி.ஆர்.​ பாப்பா 'இந்த பையன்தான் உங்கள் பாட்டுக்கு இசையமைக்கப் போகிறார்' என்றார்.

​'உலக அளவில் என் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.​ இவனை போய் என் பாடலுக்கு இசையமைக்க வைத்திருக்கிறாய்' என்றேன்.​ பின் அந்த சிறுவனிடம் நெருங்கி 'என் பாடல்களையெல்லாம் கேட்டிருக்கியா' என்றேன்.​ 'உங்கள் பாடல்கள் அனைத்தும் எனக்கு அத்துப்படி' என்றான்.​ உடனே 'உலகம் பிறந்தது எனக்காக....​ ஓடும் நதிகளும் எனக்காக....' என நான் பாட எம்.எஸ்.வி.​ செய்யாத விஷயங்களையெல்லாம் அவன் கீ போர்டில் செய்து என்னை பிரமிக்க வைத்து விட்டான்.​

அன்று என் விரலில் கிடந்த வைர மோதிரத்தால் அவன் தலையில் குட்டு வைத்தேன்.​ அந்த குட்டுதான் இப்போது ரஹ்மானை இவ்வளவு உயரத்தில் வைத்திருக்கிறது'.​

'அதை அவர் பேசும்போது குறிப்பிட்டிருக்க வேண்டும், நன்றி மறக்கக் கூடாது'.

தன் கடந்த கால நினைவுகளை இப்படி பகிர்ந்துக் கொண்டார் பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்.

முதல்வர் முன்னிலையில் பொதுவாக சிரித்து வைத்தார் ரஹ்மான்.

டி.எம்.எஸ் பாடுவதில் வல்லவர். மேடை பேச்சில் அல்ல. இந்த மாதிரி சந்தர்பங்களில் எழுதி வைத்து படித்து விடுவது சிறந்தது. முன்னரே பிழை திருத்த வழியாவது உள்ளது.

                                                                *******

அப்புறம் தூர்தர்ஷனுக்கு ஒரு வார்த்தை, துல்லியமான ஒளிப்பதிவு. அதில் குறையில்லை. எடிட்டிங்கில் இன்னும் கவனம் தேவை. ஒவ்வொருவராக வந்து பரிசு வாங்கும் போதும் அவர்களை காட்டாமல் சம்பந்தம் இல்லாமல் ஜனங்களை காட்டிக் கொண்டிருந்தார்கள். அப்பப்போ, கேமர நிலைக் கொள்ளமல் ஆடுகிறது. இந்த சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்திவிட்டால் மட்டும் போதாது.

யானை பலம் உள்ள மீடியாவை கையில் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். தயிர் சாதம் மட்டும் வைப்பேன் என்றால் எப்படி. உங்களுக்கு பின்னாடி வந்தவங்க எல்லாம் கியர் மாற்றி போய் கொண்டிருக்கிறார்கள். ரூபாய் வாங்கிக்கொண்டு ஆசிர்வதித்தது போதும். விலங்கை அவிழ்த்து விடுங்கள். வயசான பாகன்கள் ஓய்வெடுக்கட்டும். யானையின் பலம் அம்பாரி சுமப்பதும் பிச்சை எடுப்பதில் மட்டும் இல்லை.

2010 லும் சன்னோ, சாதா டிவியோ நுழையாத கிராமங்கள் உள்ளன.

நம்புங்கள்.

இன்னமும் தூர்தர்சன் மட்டும் பார்க்கும் குடும்பங்களை எனக்கு தெரியும்.

இருந்தும் எங்கோ பிழை, யார் யாரெல்லாமோ காரணம். எதுவெல்லாமோ தடை. எவ்வளவு சக்தி வாய்ந்த மீடியா. ம்ம்..... ஆதங்கமாக இருக்கிறது.