Wednesday, March 23, 2011

Facebook keyboard shortcuts


நம்மில் சிலருக்கு key board shortcut-ஏ தகராறாக இருக்கும் போது... இதுவொரு புது கலாட்டாவாகத் தெரியும்.


'ஃபேஸ் புக்' (Face book-ல்) ஓர் ஆண்டுக்கும் மேலாக பயணீட்டாளராக இருப்பதால், இந்த சலுகையை நானாக எடுத்துக் கொண்டேன்.

பொறுத்தருள்க !
*****

புதியவர்களுக்கு, ஃபேஸ் புக்கின் shortcut key அறிந்துக் கொள்ளும் முன்னர், Modifier key என்பதை என்னவென்று தெரிந்துக் கொள்ளுங்கள். keyboard-ல் இருக்கும் Alt, Ctrl and Shift கீகளே Modifier key.

நீங்கள் உபயோகிக்கும் உலாவி (Browser) மற்றும் இயக்கு தளத்திற்கான (Operating system) key combination கீழே.


உதாரணமாக, நீங்கள் Firefox-ஐ windows-ல் உபயோகிப்பவராக இருந்தால் Alt + Shift + 1 அழுத்தி ஃபேஸ் புக்கின் Home Page திறக்கலாம்.

Internet Explorer உபயோகிப்போர், Alt + 1 அழுத்தி ஃபேஸ் புக்கின் Home Page திறக்கலாம்.

*Internet Explorer-ல் M வேலை செய்யாது.



இது கூட தெரியாதா என்று கேட்கிற நண்பர்களுக்கு மட்டும்:

என்ன Boss பண்றது !
.

Monday, March 21, 2011

நேற்று ஜப்பானில் நடந்தது...


***ஜப்பான் உணர்த்தும் பாடம்***

ஜப்பான் தனக்கு ஏற்பட்டிருக்கும் பேரழிவைத் துணிவுடன் எதிர்கொண்டுள்ளது என்பது உண்மை.

ஆனால், மின்வெட்டு, உணவுப் பற்றாக்குறை, எல்லோரையும் பயமுறுத்தும் அணுக் கதிர்வீச்சு அபாயம் என்று நிலைகுலைந்து போயிருக்கிறது. தலைநகரான டோக்கியோ உள்ளிட்ட நகரங்களிலிருந்து வெளியேறி 500 மைல்களுக்கு அப்பாலுள்ள நகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள் பலர்.

சுனாமியால் ஆயிரக்கணக்கானோர் பலியாகிவிட்டனர். இதுவரை சுமார் 20 ஆயிரம் பேர். சுனாமியால் ஃபுகுஷிமா நகரிலுள்ள அணு மின் உற்பத்தி நிலையம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. நிலையத்திலிருந்து 4 அணு உலைகளும் வெடித்துவிட்டன. இதனால் அங்கு கதிரியக்கப் பாதிப்பு ஏற்பட்டது. அணு மின் நிலையத்தில் மின்சாரம் இல்லாததால் அங்குள்ள குளிர்விப்பாங்கள்(Coolers) செயலிழந்துவிட்டன. தண்ணீர் சூழ்ந்திருப்பதால் அங்கிருக்கும் ஜெனரேட்டர்களையும் இயக்க முடியவில்லை. இதன் காரணமாகவே அணு உலைகள் வெடித்தன.

கடல் நீரைக் கொண்டு அணு உலைகளை குளிர்விக்க நடவடிக்கைகள் தீவிரப் படுத்தியும், இயக்க பொறியாளர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

*****

இது ஜப்பானின், இன்றைய சூழல். அணு மின் நிலையங்கள் மனிதனின் விஞ்ஞான வளர்ச்சிக்கு எடுத்துக் காட்டாக வர்ணிக்கப்பட்டு வந்தன. ஆனால் அணுசக்தியின் அபாயங்கள் எத்தகையவை என்பதை ஜப்பானைப் பார்க்கும்போதுதான் உணர முடிகிறது*.


இந் நிலையில் நம் நாட்டு பாதுகாப்பு பணிகள் எப்படி இருக்கின்றன என்பது தான் நூறு மில்லியன் டாலர் கேள்வி?

பதில் பார்போம்...

அணு உலை குறித்து பாதுகாப்பு அவசியம் என்று பிரதமர் கருத்து கூறியிருக்கிறார். இதை ஒப்புக்காகச் சொன்னதாகவே கருத்து கணிப்பில் (73.92%) மக்கள் நினைக்கிறார்கள்.


நிபுணர்களின் கருத்தும், இதை ஒட்டியதாகவே இருக்கிறது. உதாரணமாக - 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சுந்தர்ராஜன்,

''தமிழகத்தில், கல்பாக்கத்தில் ஓர் அணு உலை செயல்பட்டு வருகிறது. இந்த மார்ச் 31-ம் தேதி முதல் கூடங்குளத்திலும் அணு உலையைத் திறக்கிறார்கள். இதுவரை நாட்டில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களில் இருந்தும் பெறப்படும் மின்சாரத்தின் அளவு வெறும் 4,385 மெகாவாட்தான். ஆனால், நமக்கான தேவையோ 1,70,000 மெகாவாட்! எனவே, 'பல்லாயிரம் கோடிகள் செலவழித்து குறைந்த அளவிலான மின்​​சாரம் ஏன் தயாரிக்க வேண்டும்?’ என்பதுதான் முதல் கேள்வி.


மரபு சாரா எரிசக்தி மூலம் அல்லது சூரிய ஒளியைப் பயன்​படுத்தியோ நாம் மொத்த நாட்டுக்கும் மின்​சாரம் பெற்றுவிட முடியும் என்கிற​பட்சத்தில், அதற்கான நடவடிக்கைகளை ஏன் எடுக்கத் தயங்குகிறது நம் அரசு?

கடந்த 2008-ல் அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில், உலக நாடுகளில் இருந்து யுரேனியத்தையும், அணு உலைகளையும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

நம் நாட்டிலேயே 1,20,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக யுரேனியம் இருக்கும்போது, இறக்குமதி ஏன்? இந்த ஒப்பந்தத்தின் மூலம் 2020-ல் சுமார் 5 லட்சம் கோடி மதிப்பில் வியாபாரம் நிகழ்த்தப்பட இருக்கிறது. மேலும், உபயோகமான யுரேனியத்தை மீண்டும் உபயோகிக்கும்போது, அதில் இருந்து வெளிப்படும் கழிவுகளும் அதிகம் பாதிப்பைத் தரும்.

அந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டு இருக்கும் இன்னொரு விஷயம்... இழப்பீடு. அணு விபத்துகள் ஏதேனும் ஏற்பட்டால், அதற்கு 1,500 கோடி இழப்பீடாகத் தர வேண்டும். ஆனால், இதில் 500 கோடியை மட்டும் அணு உலை நிறுவனங்கள் செலுத்தினால் போதுமாம். மீதித் தொகையை அரசே செலுத்துமாம். எத்தனை வருடங்கள் கழித்து விபத்து ஏற்பட்டாலும், இதே 1,500 கோடிதான் இழப்பீடு. ஆக, இதை எல்லாம் பார்க்கிறபோது, அணு மின் நிலையங்கள் என்பதே தேவை இல்லாத விபரீதங்கள்தான்!'' என்றார்**.

*****

ஜப்பானில் நம்பர் 1 பாதுகாப்பு என்று சொல்லக்கூடிய அளவுக்கு இருந்த அணு உலையிலேயே விபத்து ஏற்பட்டுவிட்டது.

வாழ்ந்து கெட்டவன் என்று நாம் பரிதாபப்படுவோம். விஞ்ஞானம் தரும் எல்லா சுகத்துக்கும் ஆசைப்பட்டவர்கள் ஜப்பானியர்கள். வசதியான வாழ்வு என்று நாம் கருதும் எல்லாமே அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள். ஒரு ஆழிப்பேரலை அத்தனையையும் அழித்துப் பல ஜப்பானியர்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. எஞ்சி இருப்பவர்களை கதிர்வீச்சு அபாயம் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

ஒரு விபத்து நேர்ந்துவிட்டது என்பதற்காக அணு மின் சக்தி வேண்டாம் என்று கூறுவது முட்டாள்தனம் என்கிறார்கள் சிலர். அவர்கள் தங்களைப் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்களில் ஒருவராகச் சிந்தித்து, இந்தப் பிரச்னையை அணுகிப் பார்க்கட்டும். விடை கிடைக்கும்!

*****

பின் குறிப்பு:

*http://bit.ly/fXdsTP அணு மின்உலை பற்றி பத்திரிகையாளர் சுந்தர்ராஜனின் பதிவு.
** 20 மார்ச்2011, ஜூ.வி. பேட்டியில்.

Wednesday, February 23, 2011

முதல்வரின் உண்மை


இலேசாக தலைவலி..... அதனால் என்ன என்று நான் இருந்திருக்கலாம். இல்லை தைலம் தடவி சாய்ந்திருக்கலாம். இரண்டும் இல்லாமல் இப்படி ஆகிவிட்டதற்கு காரணமும் நானே!

என்ன நடந்தது?


தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் பேச்சை படிக்க நேர்ந்தது. சமீபத்தில் நடைபெற்ற ப.ஜீவானந்தம் அவர்களின் இல்ல மணவிழாவில் கலந்து கொண்டு பேசினார்.

'அரசியல் நாகரிகத்தை தமிழ் நாட்டைத் தவிர வேறு எல்லா இடங்களிலும் பெற்றிருக்கிறார்கள். தமிழ் நாட்டிலே தான் அந்த உறவு மனப்பான்மை, அந்த நேச மனப்பான்மை, அந்த நாகரிகம் இல்லை. .....இன்றைக்கு என்னவோ, அரசியல் நாகரிகம் என்றால் என்ன விலை - எந்தக் கடையிலே விற்கிறது என்று கேட்கின்ற அளவுக்கு - விசாரிக்கின்ற அளவுக்கு நாகரிகம் நலிந்து போய்விட்டது. நசிந்து போய் விட்டது'.
(முரசொலி 8.2.2011) http://bit.ly/dOR82Z

முதல்வர் கூறியது முற்றிலும் உண்மைதான். தமிழகத்தில் அரசியல் நாகரிகம் சற்றும் இல்லாமல் போய்விட்டதோ என சிந்தித்து, ஏற்றுக் கொண்டுவிட வேண்டியதுதான் என பெருமூச்சு விட்டேன்.

ஆனாலும் பாருங்கள் இன்னொன்றும் என் கண்ணில் பட்டது.

அது, சுப்ரமணியம் சாமிக்கு, வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப் பட்டது தொடர்பாக கழக துணைப் பொதுச் செயலாளர், தமிழக சட்ட அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள பதில். பதிலின் ஒரு பகுதியில் இப்படிக் குறிப்பிட்டுள்ளர். அதுவும் அதே தேதியில்....

'சுப்பிரமணியம் சுவாமி என்பவர் யார், அவருடைய குணாதிசயங்கள் என்ன என்பதை இந்திய நாட்டு மக்கள் நன்கறிவார்கள். தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் எல்லாம் தான் ஏதோ மெத்தப் படித்த "மேதாவி" என்பதைப் போலக் காட்டிக் கொள்பவர். அரசியலில் கூடு விட்டு கூடு பாயும் பேர்வழி. நாடு விட்டு நாடு போய் நஞ்சை கொட்டி விட்டு வரும் ஜென்மம். ஒரு கட்சியில் கூட நிலையாக நிற்காத அரசியல் நாடோடி. ஆதாயம் கிடைக்கிறது என்றால், யாருக்கும் பல்லக்கு தூக்கும் வாடகை மனிதர். விளம்பரம் கிடைக்கும் என்றால் மனிதக் கழிவையும் கூட தொடத் துணியும் அற்ப பேர்வழி. பொதுவாகச் சொல்லப் போனால் இந்தியாவில் ஒரு முதிர்ந்த அரசியல் ஜோக்கர் என்று கூறலாம். ஆனால் அவருக்கு தான் ஒரு அறிவாளி, மேதை என்கிற நினைப்பு. அதனால் எதிலும் மூக்கை நுழைக்கலாம் என்கின்ற அரிப்பு.

அந்த அரிப்பின் விளைவுதான்.....' இப்படி நீள்கிறது. http://bit.ly/ebogFS


இப்போது சொல்லுங்கள். தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லை என்று கருணாநிதி அவர்கள் கூறியது எப்பேர்பட்ட உண்மை.

துரைமுருகனுக்கு அவரின் தலைவர் சொன்னது தெரியாது போலிருக்கிறது. இல்லை என்றால் தைரியமாக அதே தேதியில் அந்த அறிக்கையை வெளியிடுவாரோ. இல்லையில்லை.... இருக்காது. பின் ஒரு மந்திரிக்கு, முதல்வர் சொன்னது தெரியாமல், முதல்வரின் பேச்சை கேட்காமல் வேறு என்ன செய்துவிடுவார்.

அது மக்களுக்காக மக்களிடம் சொன்னது என்று கூடவா நமது அமைச்சருக்கு தெரியாமல் போய்விடும். அப்படிதான் இருக்க வேண்டும்.

அதே நேரத்தில், முதல்வரும் இதை அறிந்திருப்பார். அப்படியானால் அமைச்சரின் மீது என்ன நடவடிக்கை வருமோ(!), என்னவாகுமோ என்பதையும் பொறுத்திருந்துதான் நாம் பார்க்கவேண்டும். இதற்காக முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால்? துரைமுருகன் கூறியது நாகரிகமானது என்று (முதல்வர் போல்) ஏற்றுக் கொண்டுவிட்டால் போகிறது !

*****
ஒரு வேளை தைலமே தடவியிக்கலாமோ?
.

Wednesday, February 16, 2011

கவிதை தருணங்கள்




கவிஞர் சொன்னது போல் 'நான் கவிஞனுமில்லை.... நல்ல ரசிகனுமில்லை....' இரு கைகளையும் முதலிலேயே தூக்கிவிடுகிறேன். ஆனாலும் கவிதைப் பற்றி பேச ஆசை.

காதலர் தின பிப்ரவரி, மூச்சு முட்ட தமிழகம் முழுவதும் ஆடி வெள்ளம் போல பொங்கி ஓடுகிறது கவிதை. இதில் விஷயமே, நம் எல்லோருக்கும் கவிதை வருகிறது. கவிதை உள்ளம் அபரிதமாக இருக்கிறது. சென்னை தொட்டு நாகர்கோவில், கன்னியாகுமரி தெருகோடி வரை அத்தனை பேர்களுக்கும் 'கவிதை' சரளம்.

இளைஞர்கள் எந்நேரமும் ஆய்தமாயிருக்கிறார்கள். கைகடிகாரம், காங்கிரீட் வீடுகள், கற்பு, ஏழை, காகா, மழை, முத்தம், யுத்தம், மறதி, துக்கம் என எதுவும் கருப்பொருள் ஆகிவிடுகிறது. குழந்தையோ, பிரசவமோ அவர்களுக்கு சுலபம்.

கவிதை வளர காரணிகளாக வாரம்தோறும் பத்திரிக்கைகள் பத்து ரூபாய் முதல் சன்மானம் கொடுத்து வளர்த்துவிடுகிறது. முதல் மீசை மழித்த கையோடு ஆசை முளைக்க - பால் பயிண்ட் பேனா பிடிக்கிறார்கள். கால் பக்க காகிதம் போதுமானதாக இருக்கிறது. ரோட்டோரம் இயற்கை அழைப்புக்கு ஒதுங்குவதில் உள்ள தயக்கமின்மையே கவிதையிலும் சகஜமாய் வருகிறது. நான் கவிஞர்களை பழிக்கவில்லை. அந்த அளவுக்கு இயல்பாய் தயாராய் இருக்கிறார்கள் என்கிறேன். இது ஒரு ஆரம்ப நிலை.

அடுத்து, சொந்த காசைப் போட்டு அல்லது மனைவியின் நகை என ஒன்றிரண்டு புத்தகம் வரை வந்துவிடுகிறார்கள். சினிமாவில் சங்கமம் ஆவது இலக்கு. இது மத்திய நிலை.

வேலை கிடைக்காதவர்கள் தாடி வளர்த்து கொஞ்சம் கஞ்சா குடித்து தலை கலைந்த இண்டெலக்சுவல், கவிதை படிப்பார்கள் இல்லை வடிப்பார்கள். உபத்திரம் இல்லை. கவிதை எழுதி, புரட்சி பேசி, சமூகம் சாடி கன்னோ (gun), திவிரவாதமோ கையில் எடுக்காதவரை ஒரு பிரச்சனையும் இல்லை. இப்போது இந்த நிலை கிடையாது. எஞ்சியவர்கள் சினிமாவின் கதவு தட்டி காத்திருக்கிறார்கள்.

என் வரையில் மிக அதிகமாய் எழுதப்பட்ட டாப் ஃபைவ் சங்கதிகள்: காதலும் சோகமும், சுயமுன்னேற்றம், தொழிலாளிகள், இயற்கை காட்சிகள், மற்றும் பெண். திகட்டத் திகட்ட எழுதியாகிவிட்டது. தடை உத்தரவு வாங்கி தருபவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் பரிசு! தர காத்திருக்கிறேன்.

*****

தமிழர்கள் தொல்காப்பிய காலத்திலிருந்தே எல்லாவற்றையும் கவிதையில்தான் சொல்லி வந்தார்கள். ஆச்சரியமான சங்கப் பாடல்களை விட்டு விட்டால் எல்லாவற்றையும் விருத்தங்களிலும் வெண்பாக்களிலும் பொருத்திக் கொண்டிருந்தார்கள். கவிதை என்பது எழுத்து தமிழின் சிகர வடிவமாக இருந்தது. உரைநடை பேச்சில்தான் இருந்தது. இலக்கியத்தில் உரை நடை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்ததே தவிர, தனித்து வளர அச்சியந்திரமும் ஆங்கிலேயர்களும் வர வேண்டியிருந்தது.

ஆனால் கவிதை ஏறக்குறைய இரண்டாயிர வருஷ சரித்திரம். நம் முன்னோர்கள் எண்ணற்ற கவிதைகளும் வடிங்களும் கொண்டு எழுதியிருக்கிறார்கள். மொழி ஆளுமை தேவையும் மரபு கட்டுபாடும் இருந்ததால் சென்ற நூற்றாண்டு வரை கவி எழுதுபவர்கள் எண்ணிக்கை மிக குறைவு. கட்டுப்பட்டு இருந்தது.

பாரதி சற்றே எளிமைப்படுத்தினார். இருந்தும் மரபிலிருந்து அதிகம் விலகவில்லை. தேசிய விஷயங்களைப் பற்றி நேரிசை வெண்பாக்களும் விருத்தங்களும் எழுதினார்.

ஆனாலும், புதுகவிதையின் முன்னோடி பாரதி இல்லை. முப்பது-நாற்பதுகளில் நா.பிச்சமூர்த்தி, கு.ப.ரா போன்ற ஆதாரமான சிறுகதை எழுத்தாளர்கள் சிறுகதை அளவுக்கு நீட்ட முடியாத விஷயங்களை, யாப்பைப் பற்றி கவலைப்படாமல் நேரடியாக எழுதிப் பார்த்தார்கள். புதுமைப்பித்தன் நேரிசை வெண்பாவில் எழுதினார். இந்த முயற்சிகள் எல்லாம் கூட அன்று அவர்களுக்குள்ளேயேதான் இருந்தது.

ஐம்பதுகளில்தான் சி.சு.செல்லப்பா, சி.மணி போன்றோர்கள் புதுகவிதையை யாப்பில் இருந்து ஒரு புரட்சி போல இந்த பக்கம் கொண்டு வந்தவர்கள்.

*****

அதன்பின் பளிச்சென வெளிச்சம் பாய்ச்சி, ஒளி வெள்ளம். புது கவிதை புறப்பட தொடங்கிவிட்டது. பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், போன்றோர் ஏழைகளுக்காக, பாட்டாளி மக்களுக்காக பாடியதில் மரபின் சிரமத்தை குறைத்தனர். மேத்தாவின் கண்ணீர்ப்பூக்கள், மீராவின் ஊசிகள், கனவுகள் கற்பனைகள் காகிதங்கள், அப்துல் ரகுமானின் பால்வீதி போன்ற கவிதைத் தொகுப்புகள் எல்லாம் 'கமர்சியல் ஹிட்'. கலாப்பிரியா, வண்ணதாசன், ஞானக்கூத்தன், ஆத்மநாம், விக்கிரமாதித்தன்.... என தனி படை நடைப் போட்டது.

வாலி, வைரமுத்துகள் எல்லாம் சினிமாவில் ஒதுங்கி அவ்வப்போது புதுகவிதை வளர்த்தார்கள். கண்ணதாசன் குறிப்பிட தகுந்த இடத்தில் இருந்தார். 'இயேசு காவியம்' மரபில் எழுதினார். 'தூங்கும் குழந்தையை' புதுகவிதையில் வைத்தார். இத்தனை எளிமை படுத்தி விஷயம் சுலபம் ஆனவுடன் பலபேர் வாத்சல்யத்துடன் கவிதை துணைப் பிடித்தனர்.

விளைவு - கவிதை! முன்பு சொன்னது போல் கவிதை வெள்ளம்.
கவிதையும் கழிசடைகளும் கலந்துவிட்டன.

இதில் நல்ல கவிதை எது?

'நல்ல' என்பதில்தான் நமக்கு கருத்து பேதம். எது கவிதை, எது கவிதையல்ல - இனம் பிரித்துவிட்டால் போதும், முடிந்தது வேலை. பிரிப்பதில் சிரமம். முயற்சித்து பார்கலாம்.

நல்ல கவிதையில் ஈடுபாடு வருவது கொஞ்சம் கஷ்டம். ஆரம்பத்தில் புரியாது. பழக பழக வரும். யாப்பு வகைகள் தெரியாமல் மரபில் நுழையாதீர்கள். எதுகை என்றால் என்ன? மோனை என்றால் என்ன? எழுத்து, சீர், அடி, பாட்டு என பள்ளியில் வருவது போலவேதான். அவசரப்பட்டு ஒதுக்கிவிடாதீர்கள். உரை வைத்து படியுங்கள். மிக மிக சுவாரஸ்யமானது. பரிட்சை பயம் இல்லாமல் படித்தால் 'கடி'க்காது.

குறள், புறநானூறு தவறவே விடாதீர்கள். Must. முடிந்தால் குறுந்தொகை. என்னிடம் குட்டி பட்டியல் இருக்கிறது. நம் இலக்கியங்கள், அதிர்ஷடமான கனத்தை கொடுக்க இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கிறது. நிஜ அதிர்ஷடம்.


மரபின் பரிச்சயம் வந்தவுடன் புதுகவிதைக்கு நகருங்கள். இங்கு யாப்பு பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. புது கவிதையில் எழுதப்பட்ட வரிகளைவிட எழுதாத வரிகளைத் கண்டுபிடிக்க வேண்டும். கவிதை புரியவில்லை என்றால் பரவாயில்லை, கவலைப்படாதீர்கள். அவரவர் தளங்களில் இருந்து மெல்ல மெல்ல உயரலாம். புதுகவிதையின் சௌகரியம் இது.

நல்ல கவிதை அடையாளம் கண்டுபிடிக்க சுலப வழிகள்:

1. மரபில் நல்ல கவிதைகள் அனைத்தும் வந்துவிட்டன. இலக்கியங்களை உரையுடன் படியுங்கள். சீர், தளை எல்லாம் கவிதானுபவத்தை பாதிக்கும்.  பாதித்தால் நீக்கிவிடுங்கள்.

2. எந்த கவிதையிலும் 'ஓ', 'அட', எல்லாவற்றுக்கும் ஆச்சரிய குறி என எழுதியிருந்தால் ஒதுக்கிவிடுங்கள். கவிதைக்கு இந்த 'அட', 'ஓ'வெல்லாம் தேவையில்லை. வெளிப்படையாகத் தேவையில்லை.

3. வர்ணனைகள். அருமையான வர்ணனைகளுக்கு பாரதிதாசன் உத்திரவாதம். பெண், இயற்கை... என்றால் நகம் வெட்டி, முடி திருத்த போய்விடுங்கள். உபயோகமான வேலை நிறைய இருக்கிறது.

4. நல்ல கவிதை என்பது அரிதான மலர் போல. நல்ல கவிதையை ஒப்புக்கொள்வதில் அவசரப்படாதீர்கள். நீங்கள் நினைத்ததைச் சொல்லி வியக்க வைக்கும். உங்கள் மனசை 'ஏதோ' செய்யும். அந்த 'ஏதோ' உங்களுக்கு மட்டும் தெரிந்ததாய் கூட இருக்கலாம். Seize the moment. நல்ல கவிதை என்பது ஒருவிதமான சொந்த உன்னதம்.



5. வாழ்த்து கவிதை, அரசியல் தலைவரை, அடுத்த வீட்டு பெண்ணை சொல்வதெல்லாம் கவிதை இல்லை. சினிமாவில், எதிர்பாராத வரிகளை கவிதை என்று குழப்பிக் கொள்ளும் வாய்பிருக்கிறது. நல்ல கவிதை வரிகள் வந்துவிடுவது மிக மிக தற்செயலே. மற்றது -மாயைகள்.

6. நல்ல கவிதைக்கு பாஷை கிடையாது. காலம் கிடையாது. கவிஞன் தனக்கு கிடைத்த உன்னத கணத்தை உங்களுக்கும் வார்த்தைகளால் அளிக்கிறான். பாசாங்கு இல்லை. Robert Frost எழுதிய Stopping by woods on a snowy Evening உதாரணம்.

7. கவிதை என்பது தனிப்பட்ட அனுபவம். நல்ல கவிதையில் எல்லாவற்றிலும் பொதுவான அம்சமாக 'உண்மை' என்பது இருக்கிறது.

8. புத்திசாலிதனமான வரிகள் கவிதை கிடையாது. குழம்பாதீர்கள். 'பெண் கேட்டு வந்தார்கள், நாய் குரைத்தது.... கொள்ளையர் என்று அதற்கும் தெரிந்துவிட்டது'. வரிகளில் மயங்காதீர்கள்.

9. நல்ல கவிதைகளைப் படியுங்கள். தேடிப் பிடியுங்கள். நம்மைவிட சிறப்பாக ஒருவர் எழுதியிருக்க கூடும். நிறைய படியுங்கள். நல்ல கவிதைகளை கண்டுக்கொள்ள தெரிந்தவுடன், எழுதி பார்க்கும் ஆசை போய்விடும். அசாத்திய துணிச்சல் வராது.

அப்படி கைவிட்டவன் தான் நான்!


ஒரு ஸ்பானிஷ் கவிதை

நான் இறந்து போனாலும்
என் பால்கனி
திறந்தே இருக்கட்டும்

அதோ அந்தச் சிறுவன்
ஆரஞ்சுப் பழங்களைச்
சுவைத்துக் கொண்டிருக்கிறான்.
(என் மாடத்திலிருந்து
என்னால் அவனைப் பார்க்க முடியும்.)


அதோ அந்த விவசாயி
கோதுமை அறுவடையில்
ஆழ்ந்து போயிருக்கிறார்.

நான் இறந்து போனாலும்
என் பால்கனி
திறந்தே இருக்கட்டும்.
                                                   - லோர்கா

*****

ஏன் என்று உங்களிடம் தேடுங்கள். கவிதையை கொஞ்சம் யோசியுங்கள்.
 
வாழ்த்துகள்!

.

Friday, January 14, 2011

34-வது புத்தகக் காட்சி

என் முறை...
*****
'தனிமை தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்கப்பட்டபோது, 'புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்' என்று பதிலளித்தார் ஜவஹர்லால் நேரு.

*****

சென்னையில் 34-வது புத்தகக் காட்சி கடந்த 4 ஜனவரி 2011, செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஏறத்தாழ 1.76 லட்சம்(இது வேறு!) சதுர அடியில் 646 அரங்குகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த காட்சி அரங்கில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் 5 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் குவிக்கப்பட்டுள்ளன.


சனி, ஞாற்றுக்கிழமைகளில் சென்றிருந்தேன். போன முறை வருந்தி அழைத்த நண்பர்கள் இந்த முறை முதல் அழைப்பிலேயே ஆர்வம் காட்டி வந்திருந்தனர். முதல் முறையாக இங்கே வந்த நண்பர்களுக்கும் என் அன்பு.

வரும் வரைதான் தயக்கம். வந்தால் நிச்சயம் அடுத்த முறையும் வருவீர்கள். அடுத்தடுத்த முறையில் என்னதான் இருக்கிறது என்று புத்தகத்தைப் புரட்டினால்..... அங்கே இருக்கிறது 'தூண்டில்'. ஒரு நாள் இல்லை ஒரு நாள் நிச்சயம் மாட்டிவிடும்.

சூழல் மாற்றப்பட வேண்டும்

இந்த ஆண்டு மனுஷ்யபுத்திரன் பேசியது, தீவிரமானது.

"தமிழகத்தில் புத்தகம் தொடர்பான நிகழ்வுகள் நடைபெறும்போது அங்கு தவிர்க்க முடியாமல் கேட்கும் குரல்; 'புத்தகங்களை வாங்குங்கள், புத்தகங்களை வாசியுங்கள்' என்பதாகும். எனக்குத் தெரிந்து உலகில் வேறு எந்தச் சமூகத்திலும் இப்படியொரு துர்பாக்கியமான சூழல் கிடையாது.

ஒரு படித்த சமூகம் புத்தகத்தைத் தேடுவதும் வாங்குவதும் வாசிப்பதும் மிக இயல்பானவை. ஆனால், இங்கே என்ன நடக்கிறது படித்தவர்கள் மத்தியில் நின்றுகொண்டுதான் 'படியுங்கள், ஏதாவது படியுங்கள்' என்று கண்ணீர் வரும் அளவுக்கு கோருகிறோம்.

மெத்தப் படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் 'எனக்குப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எல்லாம் கிடையாது' என்பதைப் பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள்.

அவர்களே பல சமயங்களில் புத்தகங்களை வெளியிடவும் வருகிறார்கள். விசித்திரமான சூழலை மாற்றியே ஆக வேண்டும் நாம்" என்றார் மனுஷ்யபுத்திரன்.

"நிச்சயமாக இந்த சூழல் மாற்றப்பட வேண்டியது. மாற்ற வேண்டும் என்றால் எதாவது படியுங்கள் என்று கோருவதை தவிர்த்துவிட்டு, பேசுபவர்கள் முதலில் ஏதேனும் ஒரு நல்ல புத்தகத்தைப் பற்றி விரிவாகப் பேசிப் பழக வேண்டும். மனுஷ்யபுத்திரனை நான் வழி மொழிகிறேன்" என்றார் தமிழச்சி தங்கபாண்டியன்.

இவர்கள் விரும்புவதை போல மாற்றத்தை தான், நாம் வேறு மாதிரி முயன்று கொண்டிருக்கிறோம்.


குழந்தைகளை....

இங்கு பேசிய வைரமுத்துவின் பேச்சு வசிகரமானது.

"பெற்றோர்கள் குழந்தைகளைப் புத்தகங்கள் இருக்குமிடம் நோக்கி அழைத்துச் செல்லுங்கள். அவர்களைப் புத்தகங்களோடு புழங்கவிடுங்கள். அவர்கள் படிப்பது அப்புறம் இருக்கட்டும்; முதலில் அவர்கள் புத்தகங்களைத் தொட்டுப் பார்க்கட்டும். அந்தத் தொடுதல் - உலகை அவர்களுக்கு சரியான வகையில் அறிமுகப்படுத்தும்" என்றார் வைரமுத்து.

இங்கு பிரச்சனை, சரி வர நாமே பழகவில்லை. நாம் பழக்கவில்லை என்றால் ஒரு தலைமுறையே இதை இழக்கிறது. இதை தான், உணர மறுக்கிறோம்.

*****

இந்த முறை, வாங்கிய விவரம்.

1. திராவிட இயக்க வரலாறு - ஆர். முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம்(பாகம் 1) ரூ.200

2. திராவிட இயக்க வரலாறு - ஆர். முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம்(பாகம் 2) ரூ.200

3. முதல் உலகப் போர் - மருதன், கிழக்கு பதிப்பகம். ரூ.160
    (ஆரம்பப் புள்ளி முதல் இறுதிக் கட்டம் வரை)

4. இரண்டாம் உலகப் போர் - மருதன், கிழக்கு பதிப்பகம். ரூ.185
    (ஆரம்பப் புள்ளி முதல் இறுதிக் கட்டம் வரை)

5. புதுமைப்பித்தனின் சம்சார பந்தம் - கமலா புதுமைப்பித்தன், பரிசல் புத்தக நிலையம். ரூ.30

6. எம்.ஜி.ஆர். பேட்டிகள் - தொகுப்பு எஸ்.கிருபாகரன், மனோன்மணி பதிப்பகம். ரூ.130

7. குறுந்தொகை மூலமும் விளக்கமும், முல்லை பதிப்பகம். ரூ.150

8. கலித் தொகை மூலமும் விளக்கமும், முல்லை பதிப்பகம். ரூ.150

9. The history of mathematics கணிதத்தின் கதை - இரா. நடராசன், பாரதி புத்தகாலயம். ரூ.50 (தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்)

10. சிலப்பதிகாரம் பன்முக வாசிப்பு - கா. அய்யப்பன், மாற்று பதிப்பகம் ரூ.100

பகுதி இரண்டு

1. ஸ்மைல் ப்ளீஸ் - துக்ளக் சத்யா, அல்லயன்ஸ். ரூ.40

2. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன், தமிழினி ரூ.90 (சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல்)

3. தோரணத்து மாவிலைகள் - சுஜாதா, விசா பப்ளிகேஷன்ஸ். ரூ.80

4. சுவை சுவையாய் சமையல் குறிப்புகள் - கோமதி சந்திரசேகரன், ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ். ரூ.75

5. விண்வெளிக்கு ஒரு புற்வழிச்சாலை World Science Fiction, உலக விஞ்ஞானச் சிறுகதைகள். தொகுப்பும் மொழிபெயர்ப்பும் - இரா. நடராசன். பாரதி புத்தகாலயம். ரூ.30

6. உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி - S.R. Vas & Anita S.R. Vas, PUSTAK MAHAL ரூ.88

7. திசை எட்டும் மொழியாக்கக் காலாண்டிதழ் (ஜனவரி - டிசம்பர் 2010) - ரூ.160

8. திசை எட்டும் மொழியாக்கக் காலாண்டிதழ் (ஜுலை - செப்டம்பர் 2008) - ரூ.30

9. மௌனி படைப்புகள். முழுத் தொகுப்பு -தொகுப்பாசிரியர் சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம். ரூ.200

10. தமிழ் நாட்டுப் பழமொழிகள் (4000) - முல்லை பில். முத்தையா, முல்லை பதிப்பகம். ரூ.70

*****
ரசித்த ட்விட்டர் ganesukumar@twitter.com :

உடம்புக்கு எந்த நோவுன்னாலும் முதலில் நெத்தியில் விபூதி வைத்துவிடும் அப்பத்தாவிடம் நாத்திகம் பேச மனம் வருவதில்லை.

*****