Saturday, April 17, 2010

தடை எதற்கு

சர்ச்சையின் இன்னொரு அவதாரமாகவே ஆகிவிட்டது யூலிப் பாலிசிகள்!
இதுவும் போன வார கூத்துதான்.

ஒருபக்கம் இந்தவகையான பாலிசிகள் இன்ஷூரன்ஸா அல்லது முதலீடா என்ற பட்டிமன்றங்கள், இன்னொரு பக்கம் பங்குச் சந்தை சார்ந்த இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது லாபமா, இல்லையா என்ற வாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன...

இதற்கிடையில் யூலிப் பாலிசிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்று செபி, ஐ.ஆர்.டி.ஏ. இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அடுத்தகட்டமாக நீதிமன்றத்தின் படிகளை ஏறப் போகிறது. இந்த இரு நிறுவனங்களில் யார் சொல்வது சரி என்பது குறித்து விவாதமே தேவையில்லை. காரணம்.....

காரணம் பார்பதற்கு முன்பு புதியவர்களுக்காக ULIP, SEBI, IRDA அப்படின்னா என்னவென்று சுருக்கமாக பார்த்துவிடலாம்.

SEBI -'செபி' என்பது பங்கு சந்தை சார்ந்த அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஓர் அமைப்பு. IRDA - 'ஐ.ஆர்.டி.ஏ.' இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு வாரியம். ULIP - 'யூலிப்' என்பது ஒரு வகையான இன்ஷூரன்ஸ் திட்டம் தான். இதில் செலுத்தும் தொகை பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இந்தியாவுக்கு யூலிப் பாலிசிகள் வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இரு ரெகுலேட்டர்களும் நிதியமைச்சகத்தின் கீழ்தான் வருகின்றன. அறிமுகம் போதும்.


யூலிப் பாலிசிக்காக ஐ.ஆர்.டி.ஏ-விடம் அனுமதி வாங்கிய இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், அவற்றை பங்குச் சந்தையில் முதலீடு செய்தபோதும் செபியிடம் எந்த அனுமதியையும் வாங்கவில்லை. இதுநாள்வரை அமைதியாக இருந்துவிட்டு இப்போது விழித்து தாம்தூம் என்று குதித்தபடி தடை சொல்லியிருக்கிறது செபி. ஆனால் ஐ.ஆர்.டி.ஏ. தன்னுடைய உரிமையை பங்குபோட்டுக் கொள்ள விரும்பவில்லை! யூலிப் பாலிசிகளுக்கு செபியின் அனுமதி தேவையில்லை என்று ஐ.ஆர்.டி.ஏ. கருத்து தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்னையில் தலையிட்டு முடிவு சொல்ல விரும்பாத மத்திய அரசாங்கம், உங்களில் யார் சொல்வது சரி என்பதை நீதிமன்றத்துக்குச் சென்று முடிவு செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டது.

இனி காரணம், யூலிப் பாலிசிகளில் மக்கள் போடும் பணத்தில் 80% - 90% பங்கு மற்றும் நிதிச் சந்தையில்தான் முதலீடு செய்யப்படுகிறது என்கிறபோது, தங்களைக் கட்டுப்படுத்த செபிக்கு அதிகாரமே இல்லை என்று இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் எப்படிச் சொல்ல முடியும்? யூலிப் பாலிசிகள் நல்ல இன்ஷூரன்ஸ் திட்டம் அல்ல என்பதே நிதி வல்லுனர்களின் கருத்து; சிறப்பான முதலீட்டுக் கருவியும் அல்ல. இந்த உண்மை தெரியாத சாதாரண மக்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை அதில் கொண்டு போய் கொட்டி, குறைந்த லாபத்தையே கண்டிருக்கிறார்கள்.

இப்போது, யூலிப் பாலிசிகளை விற்க 14 இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மீது செபி விதித்திருந்த தடை தற்காலிகமாக நீங்கியிருக்கிறது. இந்தத் தடை நீக்கம் மட்டும் வராமல் போயிருந்தால் இந்த 14 இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் பங்குச் சந்தையில் போட்ட 75 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக திரும்ப எடுத்துவிடலாம் என்று நினைத்ததாம்.

அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் சந்தை மிகப் பெரிய சரிவை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கும். இப்போதைக்கு அந்த பயம் இல்லை என்றாலும், இது தலைக்கு மேல் தொங்கும் கத்தி மாதிரிதான்.

அரசாங்கத்துக்குத் தேவை யூலிப் பாலிசிகள் மூலம் பங்குச் சந்தைக்கு வரும் பல ஆயிரம் கோடி ரூபாய்தான். அதனால் மக்களுக்கு என்ன நன்மை என்பது பற்றி அது கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. பொறுத்திருந்து பார்போம்.

இரு சம்பவங்கள் - சானியா மிர்ஸா

போனா வாரம் நம்மை கடந்து சென்ற இரு சர்ச்சைகுரிய சம்பவங்கள். முதலாவது சானியா மிர்ஸா திருமணம், இரண்டாவது யூலிப் பாலிசிகளை விற்க 14 இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மீது செபி விதித்திருந்த தடை. முதலாவது, சொந்த விஷயம் பொது பிரச்சனையானது. இரண்டாவது, பொது பிரச்சனை நமக்கான சொந்த விஷயம்.

சானியா மிர்ஸாவின் புகைப்படத்தை எரித்ததாக மதுரையில் 20 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமிய அமைப்பு ஒன்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. விஸ்வ இந்து பரிஷத் தும் மற்றும் பல இந்து பரிவார அமைப்புகளும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தியிருக்கின்றன. சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரே, தன்னுடைய பத்திரிகையில் சானியாவை தாக்கி கடுமையான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். 'ஒரு பாகிஸ்தானியரை திருமணம் செய்துகொள்ளும் சானியா, இனிமேல் எப்படி இந்தியாவுக்காக விளையாடுவார்?' என்ற கேள்விகளை இந்துத்துவ அமைப்புகள் எழுப்பிக் கொண்டிருக்கின்றன.

சானியா மிர்ஸா இந்தியாவுக்கு புகழ் தேடித் தந்த ஒரு விளையாட்டு வீராங்கனை. தனது 18 வயதிலேயே விளையாட்டுக்கான இந்தியாவின் மிக உயரிய விருதாக மதிக்கப்படும் அர்ஜுனா விருதையும், 17 வயதிலேயே சர்வதேச கவனத்தைப் பெற்றார். மிகவும் சோர்ந்து கிடந்த இந்தியாவின் விளையாட்டுத் துறையை அவரது வருகை ஊக்கம் பெற வைத்தது. உலக அளவில் அமெரிக்க மற்றும் ரஷ்யப் பெண்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவை சேர்ந்த சானியா நுழைந்து கலக்கியது நமக்கு பெருமையைத் தந்தது.

சானியாவின் வெற்றி அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது மட்டுமின்றி, சர்ச்சைகளையும் கொண்டு வந்தது.குட்டைப் பாவாடை அணிந்துகொண்டு விளையாடுவது மத விரோதம் என்று சிலர் கண்டனம் தெரிவிக்க, அதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பல இடங்களில் ஆர்ப் பாட்டங்கள் நடத்தப்பட்டன. வேறு வழியின்றி அவர் வேறுவிதமான உடையை அணிந்தார். அவர் அமர்ந்திருந்தபோது எதிரே இருந்த தேசியக் கொடியை அவமதிக்கும் விதமாக கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார் என்று அவர்மீது குற்றம் சாட்டினர். அவர் தனது தேசபக்தியை கண்ணீர் மல்கவெளிப்படுத்திய பிறகே... சர்ச்சைகள் கொஞ்சம் நின்றது.

சானியா இந்தியராக மட்டுமே பார்க்கப்பட்டிருந்தால் இவ்வளவு சர்ச்சைகள் எழுந்திருக்காது. அவரை ஒரு பெண்ணாகவும், அதுவும் சிறுபான்மை மதத்தைச் சார்ந்த ஒருவராகவும் பார்க்கின்ற காரணத்தினால்தான் இந்தப் பிரச்னைகள் எல்லாம் எழுந்துள்ளன. இந்தியாவில் விளையாட்டுத் துறை வளர்ச்சி அடையாததற்கு இத்தகைய பிற்போக்குத்தனமான பார்வையும் ஒரு காரணம். இந்தியர்கள் தமது தேச பக்தியை வெளிப்படுத்திக்கொள்ள எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது, மத்திய அரசால் கொண்டு வரப்படும் அணுசக்தி நஷ்டஈடு மசோதா இந்திய இறையாண்மைக்கே எதிரான ஒன்றாகும். நமது நாட்டை அமெரிக்க தனியார் நிறுவனங்களின் நலன்களுக்காக அடகு வைக்கிற முயற்சி இது. ஆனால், இந்தியாவின் அரசியல்வாதிகள் அல்லது சங் பரிவாரங்களோ இந்த மசோதாவை எதிர்த்து வீதிகளில் இறங்கிப் போராட முன்வரவில்லை. சானியாவுக்கு எதிராக முஷ்டியை உயர்த்திக்கொண்டு நிற்கும் அரசியல் தலைவர்கள் இந்த மசோதாவைப் பற்றி வாய் திறக்கவில்லை. இதற்கு முன்பு அமெரிக்காவோடு அணுஆயுத ஒப்பந்தம் செய்ததைப் பற்றியும் இந்த பரிவாரங்கள் தூங்கிக் கொண்டுதான் இருந்தன. இந்தியாவின் அதிகபட்ச தேசபக்தி தங்களிடம்தான் இருக்கிறது என்று உரிமை கொண்டாடும் இவர்கள், இந்திய இறையாண்மை பாதிக்கப்பட்ட நேரங்களில் எங்கே போயிருந்தார்கள்?

மாலிக்கை திருமணம் செய்துகொண்டால் சானியா பாகிஸ்தானிய பிரஜையாக மாறிவிடுவார் என்று இந்துத்துவவாதிகள் கூறுகின்றனர். ஆனால், திருமணத்துக்குப் பிறகு தாங்கள் துபாய்க்கு குடியேறப்போவதாக மாலிக்கும், சானியாவும் கூறியுள்ளனர்.பாகிஸ்தானியரை மணந்துகொண்ட ஒரு பெண் எப்படி இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று தமது குதர்க்கவாதத்தை அவை எழுப்புகின்றன.

இதுவும்கூட புதிய விஷயமல்ல... ஒரு நாட்டில் பிறந்தவர் இன்னொரு நாட்டுக்காக விளையாடுவது என்பது நீண்ட காலமாகவே வழக்கத்தில் இருந்து வருகிற ஒன்றுதான். கிரிக்கெட்டிலும், டென்னிஸிலும் அப்படி ஏராளமான முன்னுதாரணங்கள் இருக்கின்றன. ஒருவேளை துபாய்க்குச் சென்று அங்கே அந்த நாட்டின் பிரஜையாக சானியா மாறிவிட்டாலும்கூட அவர் விரும்பினால் நமது அரசும் ஒப்புக்கொண்டால் அவர் இந்தியாவுக்காக விளையாடுவதில் சிக்கல் எதுவும் இருக்கப்போவதில்லை.

எதற்காக இந்தப் பிரச்னை குறித்து இவ்வளவு சர்ச்சைகள் கிளப்பப்படுகின்றன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 'இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தேசப்பற்று இல்லாதவர்கள். அவர்கள் பாகிஸ்தானைத்தான் எப்போதும் தமது தாய் நாடாகக் கருதி வருகிறார்கள்' என்று சொல்லவே சில அமைப்புகள் விரும்புகின்றன. அதற்கு ஒரு சிறுவாய்ப்பு கிடைத்தாலும் அவர்கள் நழுவ விடுவதில்லை.

பெரும் சர்ச்சைக்குப் பின் கடந்த 12-04-2010-ம் தேதி ஷோயப் மாலிக்-சானியா மிர்சா திருமணம் நடைபெற்றது. "எங்களது திருமணம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தன. இந்த சர்ச்சைகளால் எங்களுக்கு எவ்வித பாதிப்பு எற்படவில்லை. திருமணதுக்கு முன் ஏற்பட்ட அனைத்து பிரச்னைகளையும் மறந்து விட்டேன். பாகிஸ்தானியரை திருமணம் செய்யவில்லை; என் மனதை கவர்ந்தவரை திருமணம் செய்துள்ளேன்." என்று முத்தாய்பாக சொல்லியுள்ளார். அதுதான் சானியா மிர்சா.

நமது வாழ்துக்கள் எப்போதும் உண்டு.