Monday, March 28, 2016

முயலும் கேள்வி - Alice in Wonderland



"ஆற்றின் கரையில் எதுவும் செய்யாமல் வெறுமனே சகோதரியோடு உட்கார்ந்திருப்பது ஆலிஸிற்கு சோர்வு தருவதாக இருந்தது. ஒன்றிரண்டு முறை சகோதரி படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை எட்டிப் பார்த்தாள். அதில் படங்களோ, உரையாடல்களோ இல்லை. படங்களும் உரையாடல்களும் இல்லாத புத்தகத்தால் என்ன பிரயோஜனம் என ஆலிஸ் யோசித்தாள்".

நீங்க நினைப்பது சரி. இவள் அதே ஆலிஸ்தான்.


'ஆலிஸின் அற்புத உலகம்' Alice in Wonderland கதை இப்படிதான் ஆரம்பிக்கறது. படிக்கும் பழக்கம் ஏற்படும் ஆரம்பங்களில் எல்லா சிறார்களுக்கும் தோன்றும் கேள்வி - படங்களோ, உரையாடல்களோ இல்லாத புத்தகத்தை இந்த பெரியவர்கள் எப்படி படிக்கிறார்கள்? அதில் என்ன இருக்கும்? - என்பதாக இருக்கிறது.

முயல் வளையில் விழுந்துவிடும் ஆலிஸின் பதட்டத்திலிருந்து கதை விரிகிறது. ஆலிஸின் உலகம் வியப்பும் மர்மமும் நிறைந்த ஒரு மாயக்கனவு. கணித மேதையான லூயிகரோல் 1865ல் குழந்தைகளுக்காக எழுதிய இந்த நாவல் ஒரு ஆச்சரியம் ! கணிதத்தில் பெரும் ஆர்வம் கொண்ட லூயிகரோல் தீர்க்க முடியாத புதிர்கணிதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இக்கதையில் கணிதத்தின் பல சூட்சுமங்களும் தேர்ந்த உரையாடல்களும் வியப்பாக இருக்கிறது.


இந்த உரையாடலை கேளுங்கள்:

ஆலிஸ் "இவர்களோடு சற்று விளையாடலாம்" என நினைத்துக்கொண்டு, சொன்னாள்: "வாருங்கள் நாம் விளையாடலாம். நான் உங்களிடம் சில விடுகதைகள் போடுவேன். நீங்கள் விடை சொல்ல வேண்டும்"

"உனக்கு பதில் தெரியுமா ?" என முயல் கேட்டது.

"நிச்சயமாகத் தெரியும்"

"அப்படியானால் அது எதற்கு ?" முயல் தொடர்ந்து கேட்டது. ஆலிஸ் அவசரமாக பதில் சொன்னாள்.

"குறைந்தபட்சம் நான் சொல்வது உங்களுக்கு தெரிந்த அதே புதிர்தான்"

தொப்பிக்காரன் சொன்னான்: "அது அப்படியல்ல. நீ இப்படியும் சொல்லலாம். நான் தின்பதைப் பார்க்கிறேன். நான் பார்ப்பதைத் தின்கிறேன். இரண்டுமே ஒன்று என்று".

இந்த உரையாடலில் என்ன விஷேசம்..? இது ஆண்டிமெட்டபோல் - antimetabole. வார்த்தைகளை திருப்பி போடுவதால் உருவாகும் ஒருவித வாக்கிய கட்டமைப்பு. கொஞ்சம் விளக்குகிறேன்.

எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் சொல்லுவார், 'நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே, நாட்டிற்காக நீ என்ன செய்தாய் என கேள்?' என்பார். உண்மையாக இதை சொன்னவர் 1961ல் ஜான்.எஃப்.கென்னடி . 

தமிழில் antimetabole என்பதை வார்த்தைகளை திருப்பி போட்டு ஏற்படுத்தும் 'வார்த்தை ஜாலம்' எனலாம். கொஞ்சம் கிட்ட வருகிறது.

'வாழ்வதற்காக உண், உண்பதற்காக வாழாதே' என சாக்ரடிஸ் சொன்னதும் அதே antimetabole தான்.

நம் ஊரில் விசு, டி.ராஜேந்தர் போன்றோர் இதில் விற்பனர்கள்.

இதையே கணிதத்தில் Inverse relationship என்கிறார்கள். 
The semantic value of a sentence A is not the same value of the converse of A.
***

மற்றொரு உதாரணம்.

இதில் செஷாயர் பூனை (Cheshire cat) என்று ஒரு பூனை வருகிறது. சிரித்தபடியே காற்றில் மறைந்து வேடிக்கை காட்டும். செஷாயர் பூனையை நண்பனாக கொள்கிறாள் ஆலிஸ். 'சிரிக்காத பூனைகளைத்தான் அதிகம் பார்த்திருக்கிறேன். இது போலச் சிரிப்பு மட்டுமிருந்து பூனை மறைந்து போய்விடுவதை இப்போதுதான் பார்க்கிறேன். என் வாழ்வில் முதல் முறையாக ' என்கிறாள் ஆலிஸ்.

சிரிப்பு மட்டுமிருந்து பூனை மறைந்து போய்விடுவதை Deep abstraction of concepts என கணிதத்தில் விளங்கலாம். 
Non-Euclidean geometry, abstract algebra தெரிந்தால் இது சுலபம். 
***

ஜியோமெட்ரியோ, அல்ஜிப்ராவோ விளக்க வரவில்லை. நான் சொல்வது இப்படி கதை நெடுக கிடைக்கும் ஆச்சரியங்களை.

மேலோட்டமாகப் படிக்கும்போது குழந்தைகளுக்காக எழுதபட்ட Fairy tale தான். இதில் Philosophy இருக்கிறது. லூயிகரோல் கணிதம் தெரிந்தவர் என்பதால் அதையும் சேர்த்து எழுதியிருக்கிறார்.  ஒரு Fantasy கதையில் இதையெல்லாம் கலந்து கட்டி அடிச்சிருக்கிறார். 

அதனாலேயே படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஓர் அனுவபம் எற்படுகிறது. குழந்தைகளுக்கு ஒன்று, பெரியவர்களுக்கு மற்றொன்று, கணிதம் தெரிந்தால் வேறாகவும் இருக்கிறது. இப்படி இருப்பது என் வரையில் ஸ்பெஷல்.

இந்நூல், உலகின் தலைசிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. பல மொழிகளில் மொழிபெயர்பு செய்யப்பட்டுள்ளது (கிட்டதட்ட 174). தமிழில் விஜயா பதிப்பகம், மற்றும் வம்சி புக்ஸ் வெளியீடாக மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருப்பவர் - எஸ்.ராமகிருஷ்ணன்.

விநோத உலகின் அனுபவங்களை, வார்த்தை வசீகரங்களை, கணித நுட்பங்களை உலகிற்கு சொல்லியபடியே இருக்கிறது. இதுவே திரும்ப திரும்ப உலகெங்கும் மக்கள் படிக்க காரணமாகிறது. இதுதான் இந்நூலின் தனி சிறப்பு. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கும் ஆலிஸின் அற்புத உலகம் திறந்தே இருக்கிறது. 

பின் குறிப்பு: 20-Mar-2014 எழுதிய கட்டுரை, இன்றுதான் நேரம் கிடைத்தது வெளியிட.


"Alice in Wonderland" was a book of that extremely rare kind which will belong to all the generations to come until the language becomes obsolete. 

-by Sir Walter Besant.