Sunday, May 9, 2010

ஒரு கவிதை, ஒரு கதை, ஒரு நிஜம்

அவசரங்களில் நாம் கடந்துவிட்ட எத்தனையோ மனிதர் போல்தான் இவர் இருக்கிறார்.

'புத்தம் சரணம் கச்சாமி' என
பூசை செய்து வணங்கிவிட்டு
ரத்தம் மரணம் துச்சாதனம் செய்யவா
நித்தம் அவனை வணங்குகின்றாய்
நெஞ்சு வெடிக்குதடா ஈழா

என்பதுதான் 1983-ல் நடந்த ஈழப் படுகொலையை குறித்த, பிரசுரமான முதல் கவிதை.

இவரது பேட்டியை சமீபத்தில் படித்தேன். இனிய உதயத்தில் வந்திருக்கிறது.

நவீன தமிழ்க்கவிதையில் கவனத்தில் கொள்ளத்தக்க பல கவிதைகளுக்குச் சொந்தக்காரர் பால்நிலவன். மரபுக் கவிதையில் ஆரம்பித்த இவரது கவிதை பயணம். ஒரு கட்டத்தில் சிறுகதையில் முழுமையாக மையம் கொண்டது.

 இவரது கதை ஒன்று, 'கோவில் ஜமுக்காளம்'.

"ஊருக்குப் பொதுவாக உள்ள கோவில் ஜமுக்காளத்தை எல்லார் வீட்டு விசேஷத்திற்கும் மாட்டுவண்டியில் எடுத்துச் செல்லும் மண்ணாங்கட்டி, அடுத்தவாரம் நடைபெற இருக்கும் தன் வீட்டு விசேஷத்திற்கு வீட்டில் தங்கையும் அம்மாவும் கேட்கச் சென்னார்களே என்று கேட்கிறான். அவன் இப்படி கேட்டதை அறிந்து அந்தப் பண்ணையார் கோவில் திருவிழாவில் ஊர் மக்கள் மத்தியில் திட்டி வேலையை விட்டே துரத்திவிடுகிறார். திருவிழா இரவன்று, அந்த கோவிலில் நடைபெறும் பாட்டு கச்சேரி கேட்க வசதியாக கோவில் ஜமுக்காளம் விரிப்பட்டு மக்கள் அமர்கிறார்கள். அதில் அமர விரும்பிய ஒரு ஏழைச் சிறுவனையும் கோயில் குருக்கள் அடித்து விரட்டுகிறார்கள். பிறகு மடித்து வைக்காமலேயே கலைந்த வாக்கில் ஓரமாக எடுத்துப் போட்டுவிட்டு எல்லோரும் போய்விடுகிறார்கள்.

கோவில் ஜமுக்காளம்தான் தன் வேதனையான இந்தக் கதையைச் சொல்லி வருகிறது. உழைக்கும் வர்க்கம் உட்காரத் தகுதியற்ற எனக்கெதற்கு இந்த வாழ்வு என ஏங்கித் தவிக்க, திருவிழா வளாகத்தில் நடைபெறும் வாணவேடிக்கையிலிருந்து வந்து விழுந்த பட்டாசு ஒன்றின் நெருப்புப் பட்டு, 'இதோ நான் சந்தோஷமாகச் சாம்பலாகிறேன்' என அக்கதை முடியும்."

அடிப்படையில் இவர் ஒரு நிலச்சுவாந்தார் குடும்பத்தில் பிறந்தவர். இந்த அடிப்படையில் கதையைப் பார்க்கும் போது, நம்மை வேறு தளத்திற்கு கூட்டிச் சென்று யோசிக்க வைக்கிறார்.

இவரது மூன்று சிறுகதை தொகுப்புக்களும்; 'ரயில் வரும் வரை' (2003) என்ற கவிதைத் தொகுப்பும் வெளியாகி உள்ளன. விழுப்புரம் மாவடத்தில் 21 வயது கிராம வாழ்க்கைக்குப் பிறகு, வேலை நிமித்தமாக சென்னையில் வசித்து வருபவர்.

வாழ்க்கை துரத்தியதில், 1995 ஆகஸ்டிலிருந்து 2003 நவம்பர் வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி என் பி எஸ் சி) அலுவலகத்தில் எட்டரை ஆண்டுகள் தினக்கூலியாகப் பணியாற்றினார். நாள் ஒன்றுக்கு 51 ரூபாய் என்று மாதத்தில் 22 நாள்தான் வேலை இருக்கும்.
அதிலும் பொங்கல், பூசை என்று விடுமுறைகள் வரிசையாக வந்துவிட்டால் 18, 19 நாட்கள்தான். இது கிராம வாழ்க்கையில் அல்ல. அறை வாடகை கொடுக்கவும், சரியாகச் சாப்பிடவும் முடியாமல் அல்லாடும் மாநகர வாழ்க்கையில்தான்.

தமிழக அரசின் துறை ஒன்றில், தட்டச்சர் பணியும் செய்திருக்கிறார். 1990 முதல் 1993 வரை மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வேலை பறிக்கப்பட்டது. பணி நீக்க உத்தரவிற்குப் பின்னால் இவர் எழுதிய 'தட்டச்சு நிமிடங்கள்' கதை காரணமாக இருந்தது. சென்னை தலைமை அலுவலகச் சூழல் பற்றியது.
இந்த வருத்ததில் அடிக்கடி உடல் நலம் குன்றி சில மாதங்களில் மாரடைப்பில் அம்மாவின் மரணம். பொதுவாக பெற்ற தாயின் இயற்கையான மரணத்தையே எந்த உயிராலும் தாங்க முடியாது. செல்ல மகனின் நிலை கண்டு அம்மாவின் மரணம் இருந்தால்.... சட்டென்று வீழ்ந்த ஸ்தல விருட்சம்போல் வாழ்க்கைப் பாதை சிதறுண்டு போனது.

இப்போது அருமை நண்பர்களால், பல்வேறு ஊடகங்களில் பணியாற்றுகிறார். உலக சினிமா, மொழிபெயர்ப்பு என உற்ச்சாகமாக இயங்கி வருகிறார்.

அவசரங்களில் நாம் கடந்துவிட்ட எத்தனையோ மனிதர் போல்தான் இவர் இருக்கிறார்.

இனி, அப்படி கடந்துவிடாதீர்கள்.