Thursday, April 29, 2010

மழலைச்சொல்

நாம் அனைவரும் குழந்தைகள் பேசி கேட்டவர்கள் தாம். ஏன், நாமே குழந்தையாய் இருக்கும் போது நிறைய பேசி இருக்கிறோம். ஆனால், இப்போது போல் பகை வளர்க்க, புறம் பேச, புண்படுத்த, மறைத்து பேச, வீண் புகழ, அல்ல.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. (குறள் 65)

அதாவது, குழந்தை தொட்டுப் பார்த்தால் உடலுக்கு இன்பம். அவர்கள் பேசுவதைக் கேட்டால் காதுக்கு இன்பம். இங்கு ஒரு குழந்தையை ஏன் சாப்பிடவில்லைனு கேட்டதுக்கு விளக்கமா பதில் சொல்லியிருக்காங்க.

குழந்தைகள் உலகின் எந்த மொழியில் பேசினாலும் புரிந்து கொள்கிறார்கள். எல்லாம் தெரிந்துவிட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் நாம் தான் பாவம், வாத்தியார் தேடிக் கொண்டிருக்கிறோம்.

சரி தானே?



குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

Thanks.
(Video Ref: Jayashree)

Tuesday, April 27, 2010

என் 'போன' வாரம்

போன வாரத்தின் அதிர்ஷ்ட நாளின் ஒரு பொழுதில் என் மெயில் பாக்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானது. எனது sent item 'மாத கடைசி' சம்பளகாரனின் பாக்கெட் போலானது. 'காலி'. இதன் விளைவு சற்று தாமதமாகத் தான் தெரிந்தது.


என் அனுமதியின்றி நண்பர்களுக்கு message forward ஆகி போக ஆரம்பித்தது. டெல்லியில் இருக்கும் என் நண்பன் கூப்பிட்டு சொன்ன பிறகுதான், விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. எனது இந்த கையறு நிலையறிந்து எங்கேயும் அரை கம்பத்தில் கொடி பறக்கவிட அரசாங்கம் மறுத்துவிட்டது. மான நஷ்ட வழக்கு தொடரலாமென்று தீர்மானித்து, வக்கீல் நண்பரை தொடர்பு கொண்டேன். யார் மேல் போடுவது என்ற ஒற்றை கேள்வியில் என் net result தெரிந்துவிட்டது. திருவாளர் வைரஸ் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்துவது சாத்தியமில்லை என்பதால், தீர்மானம் கை விடப்பட்டது.

என் நிலை விளக்கி, காணமல் போனதை முடிந்தால் கண்டுபிடித்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டி விரும்பி கையியொப்பம் இட்டு customer care க்கு மெயில் அனுப்பினேன். என் நிலைக்காக அவர்கள் வருந்துவதாகவும், எனக்கு உதவுவதற்காகவே காத்திருப்பதாகவும் மேலும், மிக சரியான விவரங்கள் தந்தால் அவர்கள் ஒத்துழைப்பு தர ஒரு மனதாக தீர்மானித்து விட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள். பதில் மெயிலை பத்திர படுத்திக்கொண்டேன்.

உலகின் முதல் கம்ப்யூட்டர் வைரஸ், கார்னெல் பல்கலைக்கழக மாணவர் மோரிஸால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 2,1988-ம் வருடம் 99 வரியில் எழுதபட்ட சிறிய program. சின்னதாக உள்ளே நுழைந்து ஒவ்வொரு ஃபைல்களாக அழித்து கம்ப் யூட்டரின் செயல்பாட்டையே முடக்கியது மோரிஸின் வைரஸ். முதல் மூன்று நாட்களில் ஆறு ஆயிரம் கம்ப்யூட்டர்கள் காலி. பல்கலை கழகம், இராணுவம், மருத்துவ ஆராய்ச்சி கூடம் என பல இணையதளங்களை ஒரு கை பார்த்தது. மொத்தம் 100 மில்லியன் டாலர் நஷ்டம். ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம். நடு இரவு 34 நிமிடம் கழித்து தான் (நவம்பர் 3,1998) விளைவுகளை உலகம் உணர ஆரம்பித்தது. அந்த வகை வைரஸ்களுக்கு மோரிஸ் வார்ம் என்று பெயர் சூட்டிக் கௌரவித்தார்கள். 'இணையம் எங்கே வீக்காக இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். அதனால்தான் வைரஸை உருவாக்கினேன். மற்றபடி நான் நல்ல பையன்' என்று அறிக்கைவிட்டான் மோரிஸ்.

என் வரையில் இணையத்தில் பாதுக்காப்பாக உலவ:                                        Internet security உள்ள Antivirus காசு கொடுத்து வாங்கிக்கொள்வது. இலவசமாகவும் கிடைக்கிறது. தெரியாதவர்களிடம் இருந்து வரும் மெயிலை திறக்காமலே 'டெலிட்' செய்து விடுவது. நம் பாஸ்வேர்டை ரகசியமாக காப்பது. முக்கியமா மெயிலில் வருகிற எந்த லிங்கையும் கிளிக்காமல் இருப்பது.

இல்லையென்றால் இன்னொரு வழியும் இருக்கிறது. கைகள் ரெண்டும் மேல் தூக்கியவாறு, கை ஒட்டியபடி கிழக்கு முகம் பார்த்து, வலது பக்கம் மூன்று முறையும், இடது பக்கம் மூன்று முறையும் சுற்ற வேண்டும்.

சுத்தினால் இழந்தது மீண்டு வருமா?

புண்ணியம் வரலாம்.

Monday, April 19, 2010

சினிமாதான் ஆனால் '...' சினிமா


ஒர் ஈரானிய படம்கூட பார்த்தது இல்லை என்பவரா. அப்படின்னா நான் பேச வந்தது உங்ககூட தான். (தலைப்பில் விடுபட்ட வார்த்தை 'நல்ல')

சிறுவயதில் தூர்தர்ஷனில் மதியங்களில், பின்னிரவுகளில் வேற்றுமொழி படம் சப்டைட்டிலோடு பார்திருப்போம். சன் டிவியெல்லாம் நம்மை தொடாத காலத்தில், இந்தி நிகழ்ச்சி முடிந்த பிறகு மாலை நேரங்களில் கொஞ்சம் தமிழ் காட்டுவார்கள். நான் எண்பதுகளில் பிறந்த ஆசாமி. ராமாயணம், மஹாபாரதத்தை அக்கம்பக்கத்து வீடுகளில் பார்த்ததுண்டு. அப்போது எங்கள் வீட்டில் டி.வி. இல்லை.

இந்தி முதல் ஒரிய மொழி வரை, புரியாவிட்டாலும் அந்த படங்களின் கதைப்போக்கும் நடிப்பும் பார்த்து ரசித்ததுண்டு. அந்தளவிற்கு மட்டுமே என் அனுபவமிருந்தது. திருச்சியில் படிக்கும்போதுதான் பிற மொழி படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னைக்கு வந்த பின் சற்று விசாலமாச்சு.

தீபாவளிக்கும் பொங்கலுக்கும் கூட்டத்தில் முண்டியடித்து திரையரங்களில் நாம் பார்த்த படங்கள் எல்லாம் வேறு சாதி. ஒரு ரசிகனாக நம் படங்கள் ஏற்படுத்தியிருக்கும் அபிப்பிராயங்கள் நமக்கு நன்றாக தெரியும். ஆனால், ஈரானிய படங்களில் பல்டியடிக்கற ஹீரோ இல்லை; உரசிக் காதலிக்கிற ஹீரோயின் இல்லை; அவர்களை துரத்துகிற வில்லன் இல்லை; காமெடியன் இல்லை; குரூப் டான்ஸ் இல்லை; சண்டை இல்லை; செண்டிமென்ட் இல்லை; பாட்டும் இல்லை.

எந்தவொரு மூன்றாம் உலகநாடும் இதுவரை பெற்றிராத அளவுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல விருதுகளை ஈரானிய திரைப்படங்கள் பெற்று வருகின்றன. அப்படி என்னதான் ஈரானிய படங்களில் இருக்கிறது?

ஈரானிய நாடு, இஸ்லாமிய நாடு; அதற்கான கலை, இலக்கியம், திரைப்படம் போன்றவற்றிலும் கட்டுப்பாடுகள் உண்டு. பெண்களை திரையில் காட்டும்போது தலைமுதல் கால் வரை மறைக்கப்பட்ட உடைகளில் மட்டுமே திரையில் காட்ட முடியும், காதல் காட்சிகளோ பாலுணர்ச்சி சம்பந்தபட்ட காட்சிகளோ கட்டாயமாக திரைப்படத்தில் இடம்பெற முடியாது. காதல் காட்சியிருந்தாலும் கூட தொடக்கக்கால தமிழ் திரைப்படங்களில் இருந்தது போல இருவரும் தொடாமல்தான் நடிப்பார்கள். இவ்வளவு கட்டுப்பாடுகள். இருந்தும் அற்புதமான படங்களை உலகிற்கு அளித்து வருகிறார்கள். மிகச்சிறிய முடிச்சைபோட்டு அவிழ்ப்பதுதான் அவர்களுடைய படங்களின் கதைப்போக்காக இருக்கிறது.

ஒவ்வொரு படத்திலும் வாழ்க்கையின் உயிர்ப்பு, நாட்டின் கலாச்சாரம் இருக்கிறது. ஒரு படத்தைப் பார்த்ததும் மனதுக்குள் ஏற்படும் அந்த உணர்வே ஒரு புது அனுபவமாக இருந்தது. அந்த படங்களை பார்த்த பிறகு, நம் நிலையில் ஏதோ உயர்கிறது. ரசனை, நிச்சயம் மாறுகிறது. ரசனை மாறினால் வாழ்க்கையில் எல்லாமே மாறுகிறது.

பொதுவாக உலகப் படங்கள் என்றதும் புரியுமா? போரடிக்குமா? சொல்லுறத பார்த்தா டாக்குமென்ட்ரி போல இருக்க போகுது என்று சந்தேகிப்பீர்கள். காமெடி இல்லையாம், சண்டை இல்லையாம், குறைந்தபட்சம் ஒரு பாட்டுகூட இல்லாமா ஒரு படமா? அட போங்கப்பா.....

உங்களுக்கு என்னுடைய எளிமையான பதில் 'அவற்றை பாருங்கள்' என்பதுதான்.

முதல் முறை பார்க்கும்போதே நமக்கு பிடிக்கும். நானும் இப்படி யாரோ வழிகாட்டி, கை பிடித்துதான் பார்க்க ஆர்வமானேன். நாளைக்கு உங்கள் கைபிடிக்கவும் யாரோ காத்திருக்கிறார்கள்.

நல்ல திரைப்படம் தனது முதல் காட்சியிலிருந்தே கதை சொல்லத்துவங்கி விடுகிறது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் - 'சொர்க்கத்தின் குழந்தைகள்' Children of Heaven இயக்கம்: மஜீத் மஜிதி. தங்கையின் காலணிகளை தைக்கக் கொடுக்கப்போன இடத்தில் தவறவிட்டு விட்டு அண்ணனும் தங்கையும் ஒரே காலணிகளை பயன்படுத்தி, புதிய காலணிக்காக......  

இப்படி ஒன்றரை மணிநேரம் ஓடக்கூடியது இந்த திரைப்படம்.  (கதைச் சொல்லும் உத்தேசமில்லை எனக்கு)

பொருந்தாத காலணிகள் நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் தம்மை அறிவிக்கின்றன. பொதுவாக காலணிகள் வழியில் அறுந்துவிடும்போதும், தொலைந்துபோகும் போதும் நமக்கு ஏற்படும் மன உணர்வுகள் நுணுக்கமானவை.

'உங்கள் காலணிகள் சரியாகப் பொருந்தும்போது அதை மறந்துவிடுகிறீர்கள்' என்று ஒரு ஜென் பழமொழி சொல்கிறது. Children of Heaven ஒரு முறை பார்த்துவிட்டு சொல்லுங்க.

உங்களை கை நீட்டி அழைக்கிறேன், விரல் பிடிக்க தயாரா?

.

Saturday, April 17, 2010

தடை எதற்கு

சர்ச்சையின் இன்னொரு அவதாரமாகவே ஆகிவிட்டது யூலிப் பாலிசிகள்!
இதுவும் போன வார கூத்துதான்.

ஒருபக்கம் இந்தவகையான பாலிசிகள் இன்ஷூரன்ஸா அல்லது முதலீடா என்ற பட்டிமன்றங்கள், இன்னொரு பக்கம் பங்குச் சந்தை சார்ந்த இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது லாபமா, இல்லையா என்ற வாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன...

இதற்கிடையில் யூலிப் பாலிசிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்று செபி, ஐ.ஆர்.டி.ஏ. இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அடுத்தகட்டமாக நீதிமன்றத்தின் படிகளை ஏறப் போகிறது. இந்த இரு நிறுவனங்களில் யார் சொல்வது சரி என்பது குறித்து விவாதமே தேவையில்லை. காரணம்.....

காரணம் பார்பதற்கு முன்பு புதியவர்களுக்காக ULIP, SEBI, IRDA அப்படின்னா என்னவென்று சுருக்கமாக பார்த்துவிடலாம்.

SEBI -'செபி' என்பது பங்கு சந்தை சார்ந்த அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஓர் அமைப்பு. IRDA - 'ஐ.ஆர்.டி.ஏ.' இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு வாரியம். ULIP - 'யூலிப்' என்பது ஒரு வகையான இன்ஷூரன்ஸ் திட்டம் தான். இதில் செலுத்தும் தொகை பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இந்தியாவுக்கு யூலிப் பாலிசிகள் வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இரு ரெகுலேட்டர்களும் நிதியமைச்சகத்தின் கீழ்தான் வருகின்றன. அறிமுகம் போதும்.


யூலிப் பாலிசிக்காக ஐ.ஆர்.டி.ஏ-விடம் அனுமதி வாங்கிய இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், அவற்றை பங்குச் சந்தையில் முதலீடு செய்தபோதும் செபியிடம் எந்த அனுமதியையும் வாங்கவில்லை. இதுநாள்வரை அமைதியாக இருந்துவிட்டு இப்போது விழித்து தாம்தூம் என்று குதித்தபடி தடை சொல்லியிருக்கிறது செபி. ஆனால் ஐ.ஆர்.டி.ஏ. தன்னுடைய உரிமையை பங்குபோட்டுக் கொள்ள விரும்பவில்லை! யூலிப் பாலிசிகளுக்கு செபியின் அனுமதி தேவையில்லை என்று ஐ.ஆர்.டி.ஏ. கருத்து தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்னையில் தலையிட்டு முடிவு சொல்ல விரும்பாத மத்திய அரசாங்கம், உங்களில் யார் சொல்வது சரி என்பதை நீதிமன்றத்துக்குச் சென்று முடிவு செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டது.

இனி காரணம், யூலிப் பாலிசிகளில் மக்கள் போடும் பணத்தில் 80% - 90% பங்கு மற்றும் நிதிச் சந்தையில்தான் முதலீடு செய்யப்படுகிறது என்கிறபோது, தங்களைக் கட்டுப்படுத்த செபிக்கு அதிகாரமே இல்லை என்று இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் எப்படிச் சொல்ல முடியும்? யூலிப் பாலிசிகள் நல்ல இன்ஷூரன்ஸ் திட்டம் அல்ல என்பதே நிதி வல்லுனர்களின் கருத்து; சிறப்பான முதலீட்டுக் கருவியும் அல்ல. இந்த உண்மை தெரியாத சாதாரண மக்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை அதில் கொண்டு போய் கொட்டி, குறைந்த லாபத்தையே கண்டிருக்கிறார்கள்.

இப்போது, யூலிப் பாலிசிகளை விற்க 14 இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மீது செபி விதித்திருந்த தடை தற்காலிகமாக நீங்கியிருக்கிறது. இந்தத் தடை நீக்கம் மட்டும் வராமல் போயிருந்தால் இந்த 14 இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் பங்குச் சந்தையில் போட்ட 75 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக திரும்ப எடுத்துவிடலாம் என்று நினைத்ததாம்.

அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் சந்தை மிகப் பெரிய சரிவை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கும். இப்போதைக்கு அந்த பயம் இல்லை என்றாலும், இது தலைக்கு மேல் தொங்கும் கத்தி மாதிரிதான்.

அரசாங்கத்துக்குத் தேவை யூலிப் பாலிசிகள் மூலம் பங்குச் சந்தைக்கு வரும் பல ஆயிரம் கோடி ரூபாய்தான். அதனால் மக்களுக்கு என்ன நன்மை என்பது பற்றி அது கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. பொறுத்திருந்து பார்போம்.

இரு சம்பவங்கள் - சானியா மிர்ஸா

போனா வாரம் நம்மை கடந்து சென்ற இரு சர்ச்சைகுரிய சம்பவங்கள். முதலாவது சானியா மிர்ஸா திருமணம், இரண்டாவது யூலிப் பாலிசிகளை விற்க 14 இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மீது செபி விதித்திருந்த தடை. முதலாவது, சொந்த விஷயம் பொது பிரச்சனையானது. இரண்டாவது, பொது பிரச்சனை நமக்கான சொந்த விஷயம்.

சானியா மிர்ஸாவின் புகைப்படத்தை எரித்ததாக மதுரையில் 20 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமிய அமைப்பு ஒன்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. விஸ்வ இந்து பரிஷத் தும் மற்றும் பல இந்து பரிவார அமைப்புகளும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தியிருக்கின்றன. சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரே, தன்னுடைய பத்திரிகையில் சானியாவை தாக்கி கடுமையான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். 'ஒரு பாகிஸ்தானியரை திருமணம் செய்துகொள்ளும் சானியா, இனிமேல் எப்படி இந்தியாவுக்காக விளையாடுவார்?' என்ற கேள்விகளை இந்துத்துவ அமைப்புகள் எழுப்பிக் கொண்டிருக்கின்றன.

சானியா மிர்ஸா இந்தியாவுக்கு புகழ் தேடித் தந்த ஒரு விளையாட்டு வீராங்கனை. தனது 18 வயதிலேயே விளையாட்டுக்கான இந்தியாவின் மிக உயரிய விருதாக மதிக்கப்படும் அர்ஜுனா விருதையும், 17 வயதிலேயே சர்வதேச கவனத்தைப் பெற்றார். மிகவும் சோர்ந்து கிடந்த இந்தியாவின் விளையாட்டுத் துறையை அவரது வருகை ஊக்கம் பெற வைத்தது. உலக அளவில் அமெரிக்க மற்றும் ரஷ்யப் பெண்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவை சேர்ந்த சானியா நுழைந்து கலக்கியது நமக்கு பெருமையைத் தந்தது.

சானியாவின் வெற்றி அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது மட்டுமின்றி, சர்ச்சைகளையும் கொண்டு வந்தது.குட்டைப் பாவாடை அணிந்துகொண்டு விளையாடுவது மத விரோதம் என்று சிலர் கண்டனம் தெரிவிக்க, அதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பல இடங்களில் ஆர்ப் பாட்டங்கள் நடத்தப்பட்டன. வேறு வழியின்றி அவர் வேறுவிதமான உடையை அணிந்தார். அவர் அமர்ந்திருந்தபோது எதிரே இருந்த தேசியக் கொடியை அவமதிக்கும் விதமாக கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார் என்று அவர்மீது குற்றம் சாட்டினர். அவர் தனது தேசபக்தியை கண்ணீர் மல்கவெளிப்படுத்திய பிறகே... சர்ச்சைகள் கொஞ்சம் நின்றது.

சானியா இந்தியராக மட்டுமே பார்க்கப்பட்டிருந்தால் இவ்வளவு சர்ச்சைகள் எழுந்திருக்காது. அவரை ஒரு பெண்ணாகவும், அதுவும் சிறுபான்மை மதத்தைச் சார்ந்த ஒருவராகவும் பார்க்கின்ற காரணத்தினால்தான் இந்தப் பிரச்னைகள் எல்லாம் எழுந்துள்ளன. இந்தியாவில் விளையாட்டுத் துறை வளர்ச்சி அடையாததற்கு இத்தகைய பிற்போக்குத்தனமான பார்வையும் ஒரு காரணம். இந்தியர்கள் தமது தேச பக்தியை வெளிப்படுத்திக்கொள்ள எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது, மத்திய அரசால் கொண்டு வரப்படும் அணுசக்தி நஷ்டஈடு மசோதா இந்திய இறையாண்மைக்கே எதிரான ஒன்றாகும். நமது நாட்டை அமெரிக்க தனியார் நிறுவனங்களின் நலன்களுக்காக அடகு வைக்கிற முயற்சி இது. ஆனால், இந்தியாவின் அரசியல்வாதிகள் அல்லது சங் பரிவாரங்களோ இந்த மசோதாவை எதிர்த்து வீதிகளில் இறங்கிப் போராட முன்வரவில்லை. சானியாவுக்கு எதிராக முஷ்டியை உயர்த்திக்கொண்டு நிற்கும் அரசியல் தலைவர்கள் இந்த மசோதாவைப் பற்றி வாய் திறக்கவில்லை. இதற்கு முன்பு அமெரிக்காவோடு அணுஆயுத ஒப்பந்தம் செய்ததைப் பற்றியும் இந்த பரிவாரங்கள் தூங்கிக் கொண்டுதான் இருந்தன. இந்தியாவின் அதிகபட்ச தேசபக்தி தங்களிடம்தான் இருக்கிறது என்று உரிமை கொண்டாடும் இவர்கள், இந்திய இறையாண்மை பாதிக்கப்பட்ட நேரங்களில் எங்கே போயிருந்தார்கள்?

மாலிக்கை திருமணம் செய்துகொண்டால் சானியா பாகிஸ்தானிய பிரஜையாக மாறிவிடுவார் என்று இந்துத்துவவாதிகள் கூறுகின்றனர். ஆனால், திருமணத்துக்குப் பிறகு தாங்கள் துபாய்க்கு குடியேறப்போவதாக மாலிக்கும், சானியாவும் கூறியுள்ளனர்.பாகிஸ்தானியரை மணந்துகொண்ட ஒரு பெண் எப்படி இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று தமது குதர்க்கவாதத்தை அவை எழுப்புகின்றன.

இதுவும்கூட புதிய விஷயமல்ல... ஒரு நாட்டில் பிறந்தவர் இன்னொரு நாட்டுக்காக விளையாடுவது என்பது நீண்ட காலமாகவே வழக்கத்தில் இருந்து வருகிற ஒன்றுதான். கிரிக்கெட்டிலும், டென்னிஸிலும் அப்படி ஏராளமான முன்னுதாரணங்கள் இருக்கின்றன. ஒருவேளை துபாய்க்குச் சென்று அங்கே அந்த நாட்டின் பிரஜையாக சானியா மாறிவிட்டாலும்கூட அவர் விரும்பினால் நமது அரசும் ஒப்புக்கொண்டால் அவர் இந்தியாவுக்காக விளையாடுவதில் சிக்கல் எதுவும் இருக்கப்போவதில்லை.

எதற்காக இந்தப் பிரச்னை குறித்து இவ்வளவு சர்ச்சைகள் கிளப்பப்படுகின்றன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 'இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தேசப்பற்று இல்லாதவர்கள். அவர்கள் பாகிஸ்தானைத்தான் எப்போதும் தமது தாய் நாடாகக் கருதி வருகிறார்கள்' என்று சொல்லவே சில அமைப்புகள் விரும்புகின்றன. அதற்கு ஒரு சிறுவாய்ப்பு கிடைத்தாலும் அவர்கள் நழுவ விடுவதில்லை.

பெரும் சர்ச்சைக்குப் பின் கடந்த 12-04-2010-ம் தேதி ஷோயப் மாலிக்-சானியா மிர்சா திருமணம் நடைபெற்றது. "எங்களது திருமணம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தன. இந்த சர்ச்சைகளால் எங்களுக்கு எவ்வித பாதிப்பு எற்படவில்லை. திருமணதுக்கு முன் ஏற்பட்ட அனைத்து பிரச்னைகளையும் மறந்து விட்டேன். பாகிஸ்தானியரை திருமணம் செய்யவில்லை; என் மனதை கவர்ந்தவரை திருமணம் செய்துள்ளேன்." என்று முத்தாய்பாக சொல்லியுள்ளார். அதுதான் சானியா மிர்சா.

நமது வாழ்துக்கள் எப்போதும் உண்டு.

Wednesday, April 14, 2010

புத்தகம் வாங்கிய பட்டியல் தொடர்ச்சி

33 வது புத்தக சந்தையில் வாங்கிய புத்தகங்களின் விவர தொடர்ச்சி.....


பகுதி 2
1.குட்டி இளவரசன் -அந்த்வான் து செந்த்~எக்சுபெரி -பிரெஞ்சிலிருந்து தமிழில் வெ.ஸ்ரீராம்,ச.மதனகல்யாணி, க்ரியா ரூ.100
இருநூறுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்பு

2. நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது -ஹாருகி முரகாமி, வம்சி புக்ஸ் ரூ.80
நவீன ஜப்பானியச் சிறுகதைகள்.

3. சிறுவர் சினிமா -விஸ்வாமித்திரன், வம்சி புக்ஸ் ரூ.80
சிறந்த உலகத் திரைப்படங்கள்.

4. இறுதி சுவாசம் -லூயி புனுவல் தமிழில்: சா. தேவதாஸ் வம்சி புக்ஸ் ரூ.200
உலகபுகழ் பெற்ற திரைப்பட இயக்குனரான லூயி புனுவலின் வாழ்க்கை மற்றும் திரைப்பட அனுபவங்கள் பற்றியது.

5. யுவான்சுவாங்க் -சந்தியா பதிப்பகம் ரூ.140
உலகபுகழ் பெற்ற யுவான்சுவாங்க் பயணக்குறிப்புகள் தமிழில் வெளியாகிவுள்ளது.
பௌத்த கால இந்தியாவை பற்றிய சித்திரங்களை இதில் இருந்து துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது.



பகுதி 3

1. ஸ்ரீரங்கம் டு சிவாஜி -ரஞ்சன், குமுதம் பு(து)த்தகம், ரூ.80
 சுஜாதாவின் கதை

2. எப்போதும் பெண் -சுஜாதா, உயிர்மை பதிப்பகம், ரூ. 110

3.குருவிகள் பறந்து விட்டன பூனை உட்கார்ந்திருக்கிறது -ஜே. மாதவராஜ், வம்சி புக்ஸ் ரூ.50

4.மரப்பாச்சியின் சில ஆடைகள் -தொகுப்பு. ஜே. மாதவராஜ், வம்சி புக்ஸ் ரூ.60
(இது வலையுலகில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு)

5. திருவாசகம் உரையுடன் -உரையாசிரியர் புலியூர்க் கேசிகன், வானதி பதிப்பகம் ரூ.100

6. பாரதியார் சரித்திரம் -செல்லம்மா, வ.உ.சி நூலகம், ரூ.50
இந்த அறிய நூலை நமக்கு அளித்திருக்கிறார் அவரது வாழ்க்கை துணைவி

7. நெம்பர் 40 ரெட்டைத் தெரு -இரா. முருகன், கிழக்கு பதிப்பகம் ரூ.125

8. மஹாபாரதம் பேசுகிறது -சோ, அல்லயன்ஸ் ரூ.600 (இரண்டு பாகங்கள்)

33 வது புத்தக சந்தை


இந்த புத்தக கண்காட்சிக்கு போயிருந்த போது மனசுக்கு ரொம்ப மகிழ்சியா இருந்தது. இங்கு எத்தனை பேர் வந்தாங்க, எவ்வளவு புத்தகம் விற்பனை ஆச்சு அப்படிங்கற விவரம் எல்லாம் தினசரி பத்திரிக்கையில வந்துகிட்டே இருந்தது. இந்த புள்ளிவிவர கணக்குகளை விட நிறைய பேர் ஆர்வமா வந்தது திருப்தியா இருந்தது. 

என் பங்குக்கு நண்பர்களை (வற்புறுத்தி) அழைச்சுட்டு வந்திருந்தேன். புத்தகம் படிக்கும் வழக்கம் இருப்பவர்கள் நான் கூப்பிட்டதும் வர தயாராயிருந்தனர். ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், ஆர்வம் இருந்து படிக்க நேரம் இல்லைனு சொல்றவங்களை வரவச்சு சில புத்தகங்களை பரிந்துரைச்சேன். புத்தகம் படிக்காதவர்களை கூட்டிட்டு போய் அங்க இருக்கற சூழ்நிலையை காண்பிச்சேன்.

ஒரு ஆர்வத்தையும் சின்ன சபலத்தை உண்டு பண்ணி அடுத்தடுத்து இங்க வந்தா போதும் ஏதோ ஒரு தூண்டில் விழுந்து விடும்.

இந்த முறை அம்மாவும் தங்கையும் கூட்டிட்டு போயிருந்தேன். நடிகர் கமல் ஹாசனை பார்த்து பரவசபட்டார்கள். 
நான் என்னென்ன வாங்கினேன்னு கேட்ட நண்பர்களுக்கு, இதோ அந்த விவரம்....

 பகுதி 1 
1.உப பாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன், விஜயா பதிப்பகம், ரூ. 200
2.சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா, உயிர்மை பதிப்பகம், ரூ. 200
3.கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன், அன்னம் வெளியிடு ரூ.80, காலச்சுவடு பதிப்பகம் ரூ.150
4.சினிமாவுக்கு போகலாம் வாங்க! -முனைவர் கு.ஞானசம்பந்தன், விஜயா பதிப்பகம், ரூ. 75
5.இரவில் நான் உன் குதிரை (சில தேசங்களின் சில சிறுகதைகள்) -கட்டுரை - காலச்சுவடு  பதிப்பகம் ரூ.125
6.கிராமியக் கதைகள் - கி. ராஜநாராயணன், அகரம் வெளியிடு ரூ.70
7.புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம் - சுந்தரம் ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம் ரூ.80
8.அண்ணாவின் குட்டிக் கதைகள் - அறிஞர் அண்ணா, செல்லப்பா பதிப்பகம் ரூ.25
9.நகைச்சுவை -திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள், குகஸ்ரீ வாரியர் பதிப்பகம் ரூ.22
10.அவ்வையார் பாடல்கள் (தமிழ் உரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும்) -பேராசிரியர்  சு.ந.சொக்கலிங்கம், வானதி பதிப்பகம் ரூ.40
11.எளிய தமிழ் இலக்கணம் -டாக்டர் வை. தட்சிணாமூர்த்தி, திருவரசு புத்தக நிலையம் ரூ.50
12.பட்டினத்தார் பாடல்கள் -விளக்கவுரை திரு.வி.க. கங்கை புத்தக நிலையம் ரூ.70

Saturday, April 10, 2010

நான் படித்த பாடல்

நான் இன்று படித்த சிறுவர் பாடல் ஒன்று படிக்க சுவாரஸ்சியமா இருந்தது. இந்த மாதிரி படிச்சு நிறைய நாள் ஆச்சு.

சிறுவர் பாடலெல்லாம் எளிமையாவும் ஓசை நயத்துடன் இருக்கனும்கறது பொது விதி. குழந்தைகளுக்கு எழுதுவது என்பது சொல்வது போல் அத்தனை சுலபம் அல்ல. பயிற்சியும், கற்பனை வளமும், சொற்களை கையாளும் லாவகமும் கைவர பெற்றால் தான் ஒரு நல்ல பாட்டு வெளிவரும்.

குழந்தைகளின் எளிய மனதில் பதிய சொற்சிக்கனமும், முன்பு சொன்னது போல் ஓசை நயம் முக்கியம். ஆதாரம் - சுயமுயற்சி செஞ்சா நான் சொன்னது எவ்வளவு தூரம் உண்மைனு தெரிஞ்சுக்கலாம்.

இப்ப அந்த பாட்டு.