Monday, October 20, 2014

கல்கியின் தியாகபூமி - 2014-ல் எப்படி?


சமிபத்தில் கல்கி எழுதிய தியாகபூமி வாசிக்க வாங்கினேன் (ஜீயே பப்ளிகேஷன்). கல்கியின் தியாகபூமி, முதலில் 1938-39ல் ஆனந்த விகடனில் வெளிவந்தது. சரியாக 75 வருஷங்களுக்குப் பின் எழுதுகிறேன். எப்படி இருக்கும்? பார்க்கலாம்...

தியாகபூமி

ஆனந்த விகடனில் ஓவியர் வரைந்த படங்களுக்குப் பதிலாகப் புகைப்படங்களுடன் -- திரைப்படத்துக்கான ஸ்டில் படங்களுடன் -- வெளிவந்திருக்கிறது ‘தியாக பூமி’. கல்கி, இருபது இதழ்களில் தொடராக எழுதியிருக்கிறார். கோடை, மழை, பனி, இளவேனில் ஆகிய 4 பாகங்களாக இருக்கும்.

ஒவ்வொரு அத்தியாத்திற்கும் தலைப்பு வைத்திருக்கிறார். மொத்தம் 69 அத்தியாயம். எவ்வளவு நாள் ஆகிவிட்டது இப்படி வாசித்து.

தியாகபூமி - ஆரம்பத்தில் சரளமாகக் கதைக்குள் இழுத்துவிடுகிறார். நிரம்ப உற்சாகத்துடன் கதை போகும்போது நடுவில் கொஞ்சம் நாடகத்தனத்தோடு சம்பவங்கள் நடந்துவிடுகிறது. பின் traditional ஆக முடிகிறதாகவே எனக்குப் படுகிறது.



தியாகபூமி - கதை

தியாகபூமி பக்கா மசாலா கதை -- சினிமா கதை. அன்றைய Hot topic ஆன தீண்டாமை, மது விலக்கு, பெண்விடுதலை, சுதந்திர போராட்ட பின்புலத்துடன், அப்பழுக்கில்லாத தந்தை, விசுவாச வேலையாள், உச்சு கொட்ட வைக்கும் பெண் குழந்தை, புரட்சி பேசும் பெண் - எல்லாவற்றையும் ஒரு கலக்கு கலக்கி commercial ஆக கொடுத்திருக்கிறார்.

சினிமாவாக எடுக்கப்படும் கதை என்ற விளம்பரம். வாராவாரம் சினிமா ஸ்டில்லோடு தொடர்கதை. அப்புறமென்ன கதை அமோக வெற்றி.

இந்த நாவல் ஒரு யதார்த்தக் குடும்பக்கதை.

அந்தகாலத்து ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் துவங்குகிறது புதினம். தஞ்சாவூர் ஜில்லாவின் குடமுருட்டிப் பாசனத்தில், நெடுங்கரை கிராமத்தில் நடப்பதாகக் கதை. வருஷம் 1918

சம்பு சாஸ்திரியின் மகள் சாவித்திரி. தந்தையுடன் பூஜை, புனஸ்காரங்கள், பஜனை, ஏழை எளியோருக்கு உதவி என்று ஒரு பக்கா கதாநாயகிக்கான அத்தனை குணாதிசயங்களும் கொண்டு வளைய வருகிறாள். அவளது சிற்றன்னை, சிற்றன்னையின் தாயார் என்று இருவரும் சொல்லத் தேவையில்லாமல் சாவித்திரியை அனைத்து விதங்களிலும் படுத்தியெடுக்கிறார்கள்.

மாடர்னான பெண்ணை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் ஸ்ரீதரன், விருப்பமில்லாமல் பட்டிக்காட்டு சாவித்திரியை மணக்க நேர்கிறது. இங்கேயும் சொல்லத் தேவையின்றி வரதட்சணை கேட்டல், தாலிகட்டும் கடைசி நேரத்தில் இன்னமும் உயர்த்திக் கேட்டல் என்ற குணாதிசயங்கள் கொண்ட ஸ்ரீதரனின் அம்மா.

(அந்தக் காலத்திலேயே) நான்குநாள் கல்யாணம், நான்காயிரம் வரதட்சணை எல்லாம் தாண்டிச் சித்தியிடமிருந்து விமோசனம் கிடைத்தது என்று நினைக்கும் சாவித்திரிக்கு தன் புகுந்த ஊரான கல்கத்தாவில் பேரதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. வழக்கமான அல்லல்கள், அவலங்கள், மாமியார் அவஸ்த்தைகள்.

ஊரில் சாஸ்திரி நொடித்துப்போய்ச் சென்னை போய்விடுகிறார்.

விஷயம் தெரியாமல் நிறைகர்ப்பிணியாக கல்கத்தாவிலிருந்து தன்னந்தனியே கிராமத்திற்கு சாவித்திரி வந்தால் அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது. ஊரை வெள்ளம் சூழ்ந்தபோது வேற்று சாதியினருக்கு உதவியதற்காக ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படும் சம்பு சாஸ்திரி மற்றும் குடும்பத்தினர் ஊரைக் காலி செய்து போய்விட்டனர்.

சாவித்திரிக்கு அக்ரஹாரம் அனுமதி மறுக்கிறது. சேரி உதவ வருகிறது. அவளும் சாஸ்திரியை தேடி பட்டணம் செல்ல குழந்தை பிறக்கிறது. குழந்தையை தற்செயலாகப் பார்க்கும் சாஸ்திரியிடம் விட்டுவிட்டு பம்பாய் போய்விடுகிறாள். சம்பு சாஸ்திரி தன் பேத்தி (சாரு) எனத் தெரியாமலேயே அந்தக் குழந்தையை வளர்க்கிறார்.

ஆறேழு வருஷம் கழித்து -- சினிமா போல -- பணக்காரியாக, உமாராணியாகத் திரும்புகிறாள். புரட்சிப் பெண்ணாக, நவநாகரிக மங்கையாக மாறியிருகிறாள் சாவித்திரி. வந்தவுடன் கரெக்டாக சாஸ்திரியைத் தேடி பெண்ணைச் சேர்த்து கொள்கிறாள். 


காலம் கரைகிறது. இதற்குள் கஷ்டபடும் ஸ்ரீதரன் தமிழகம் வந்து உமாராணியை அடையாளம் காண்கிறான். தன்னுடன் மறுபடி சாவித்திரி சேர்ந்து வாழ வேண்டும் என கோர்ட்டுக்குப் போகிறான்.
சாவித்திரி, நான் உனக்கு ஜீவனாம்சம் தருகிறேன், ஆளைவிடு என்கிறாள் (அப்போது விவாகரத்து சட்டம் கிடையாது). ஊரெல்லாம் இதே பேச்சு, பத்திரிக்கையில் வந்து ஒரே பரபரப்பாகிறது.

அப்புறம் சமத்துக் குழந்தையால் எல்லோரும் ஒன்று சேர்ந்து சுபம்!
---

நல்லானும், தீட்ஷிதர் கதாபாத்திரமும் குறிப்பிட்டு சொல்லவேண்டியவை. நல்லான் - சம்பு சாஸ்திரியின் அந்தரங்க உதவியாளன். சம்பு சாஸ்திரியின் சுக துக்கங்கள் அனைத்திலும் கடைசிவரைக் கூட இருப்பவன். தீட்ஷிதர் - வம்பு பேசும் ஒரு காரக்டர். இவர்கள் கதைக்கு துணையாக வந்தாலும் முக்கியமான திருப்பதிற்குக் காரணமானவர்கள்.
---

தியாகபூமி சினிமாவாக 1939-ஆம் ஆண்டு, மே இருபதாம் தேதி அன்றைய கெயிட்டி உட்பட பல தியேட்டர்களில் வெளியானது. கல்கி விகடனில் சினிமா விமர்சனம் என்று எல்லா சினிமாவையும் கிழிகிழி என்று கிழித்துக் கொண்டிருந்த காலம். இவர் கதை எழுதிய சினிமா வந்ததும் எதிர்பார்ப்பு அதிகமாகியது. சினிமாவில் பாபநாசம் சிவன் சம்பு சாஸ்திரியாகவும், எஸ்.டி. சுப்புலட்சுமி சாவித்ரியாகவும் நடித்தனர். சினிமாவில் குழந்தையாக நடித்த பேபி சரோஜா பெரிய ஸ்டார் ஆனார். அந்தக் காலத்தில் அது மிகவும் பாப்புலரான பேர், நிறைய குழந்தைகளுக்கு அப்படி பேர் வைத்தார்கள். பேபி சரோஜா பொம்மை ஒவ்வொரு வீட்டிலும் கொலுவை அலங்கரித்தது. படம் வந்தபோது மூடிபோட்ட பீப்பாய் ஷேப்பில் தூக்குபாத்திரம் 'உமாராணி' தூக்கு எனப்பட்டது.

படம் பெரும் வெற்றி.

பின்னர், தியாகபூமி திரைப்படம் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டது. அதற்குள் 150 நாள் ஓடிவிட்டு இருந்தது. Interesting.
---

கதையம்சத்தில் மட்டுமல்ல; பாத்திரங்களும் வாக்கியங்களின் ஜாலங்களும் நம்மை சொக்க வைக்கிறது.

இந்தப் புதினத்தின் முக்கிய அம்சங்களின் ஒன்று, கல்கி ஒவ்வொரு கதாபாத்திரத்தின் எண்ணங்களையும் அவரவர் பார்வையிலிருந்து சொல்லியிருப்பார்.

எனக்கு படிக்கும் போது பிடித்த பழைய சினிமா பார்பதுபோல் இருந்தது. Formula கதையாக இருந்தாலும் லேசான சரித்திர மதிப்பு, கல்கியின் தமிழ், எழுத்து நடைக்கும், சுவாரஸ்ய்ய கதை போக்கிற்கும் இக்கதையை நிச்சயம் படிக்கலாம். 



பி.கு:
1) B.A.(Tamilology) 'தியாகபூமி' பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
http://www.tamilvu.org/courses/degree/p101/p1013/html/p10134fr.htm
2) மலிவு விலை பதிப்பாக குடும்ப நாவல் ஜீ.அசோகன் வெளியிட்டு இருந்தார். (ஜீயே பப்ளிகேஷன் ரூ.30/- Aug, 2014). 
3) ஜெயமோகன் இதை சிறந்த social romances லிஸ்டில் சேர்க்கிறார். அசோகமித்ரனும் இ.பா.வும் இதை சிபாரிசு செய்திருக்கிறார்கள்.