Sunday, May 30, 2010

ஐந்து நட்சத்திர 'தயிர் சாதம்'


இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட போனதில்லை. சமிபத்தில் ஐந்து நட்சத்திர விடுதி செல்லும் வாய்ப்பு கிட்டியது, நண்பன் ரூபத்தில்.

பார்ட்டி என்றாலே இரவுதான். நான் போய் சேர்ந்தபோது மெல்லிசை நிகழ்ச்சிகள் முடிந்திருந்தன. எனக்கு முன்பே நண்பர் அங்கு காத்திருந்தார். சரியான நேரத்திற்கு வந்திருப்பதாகவும் இனிமேல் தான் 'மற்ற சங்கதிகள்' என்றபடி நிகழ்ச்சி நடந்த மைய பகுதியை அடைந்தோம்.

மூன்று ஹால்கள் பிரிக்கப்பட்டிருந்தன. மெல்லிசை நிகழ்ச்சிகள் காண இருந்த இடம். கண் சிமிட்டும் கலர் கலர் வெளிச்சத்தில், அதிரும் இசைக்கிடையில் நடனமாட ஒரு இடம். சாப்பிடும் இடம்.

மிக மிக நவீன உடையில் யுவதிகளும் இளைஞர்களும் மற்றும் பிரபலங்கள் வந்திருந்தவர்களாலும் நிரம்பி இருந்தது. சொல்லி வைத்தார் போல் அத்தனை பெண்களும் ஒல்லியாக சிவப்பாக. ஆங்கிலமும் இந்தியும் உருதும் தமிழும் பேசிக்கொண்டிருந்தார்கள். இளைஞர்கள் இடுப்புக்கு கீழ் இறங்கிய ஜீன்ஸும், ஷேவிங்கில் இருந்து பாதி தாடியிலும் வந்திருந்தார்கள். குளித்து தலை துவட்டியவுடன்  வந்தவர்களுள் (!)  ஒருவன் மட்டும் கூம்பு வடிவில் தலை வாரியிருந்தான். பெரும்பாலானோர் முடி வெட்டவும், தலை வாரவும் மறுத்திருந்தனர். தெரிந்த கடைகள் விடுமுறை விட்டிருக்கலாம். மற்றபடி நாகரிகமாக நடந்துக் கொண்டனர்.

Soft drinks ஆக ஆப்பிள் ஜுஸ் ஆரஞ்ச் ஜுஸ் மற்றும் பியர் வகைகள் ஒரு புறம். Hot drinks ஆக Scotch whisky rum என மற்றொறு புறம் விநியோகிக்கப்பட்டது. இடையிடையே சேவகர்கள் snacks-ஐ கையில் ஏந்தி நடந்தார்கள். கையில் கோப்பையுடன் இருப்பதே கௌரவமென அறிவுறுத்தப்பட்டு, Soft drinks-ஐ நிரப்பிக் கொண்டேன்.

ஷாம்பெய்ன் குலுக்கி நுரை தெளித்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டார்கள். ஹை ஹீல்ஸில் தத்தி தத்தி வந்து நிஜ நடனமாடினார்கள். நாசூக்காய் கைபிடித்து அழைத்து வந்தவன் அழகாய் இருந்தான். வேறொறுவன் மைக் பிடித்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தான்.

ஆண்களும் பெண்களும்  கட்டியே அன்பை வெளிப்படுத்தினார்கள். விடை பெறும்போது அணைத்து முத்தமிட்டார்கள். அணைத்து முத்தமிட்டதில் மனதளவில் தொந்திரவுக்கு உள்ளானர் சிலர். நாம் உட்பட.

வந்திருந்த பெண்களையும் சூழல்லையும் பார்த்ததில் ஒன்று நிச்சயம். இது வேறு உலகம். இவர்கள் வெயிலில் அலைபவர்கள் அல்ல, கடைகளில் பேரம் பேச மாட்டார்கள், poor என்பதன் அர்த்தம் மட்டும் தெரியும், நாகரிகமாய் நடந்துக் கொள்ளவும் பழகவும் சிறு வயதிலே பழக்கப்பட்டவர்கள். ஏக சிக்கனமாய் உடையணிந்திருந்தாலும் ஆண்களை எங்கே நிறுத்துவது என்று கற்றவர்கள். நிறுத்தும் பெண்களிடமும் நெருக்கம் காட்டத் தெரிந்தவர்கள். ஆங்கிலத்தில் சிரிப்பவர்கள், நகம் வெட்டவும் முடி திருத்தவும் சில நூறுகளில் காரியத்தை முடிப்பவர்கள். வாசனையாய் இருப்பார்கள். நிச்சயம் படித்தவர்கள்.

தமிழ் தெரியுமா என்று கேட்டால் 'தமிழில் எத்தனை poem படிச்சிருக்கேன் தெரியுமா. ஜுஜு கூட சொல்லும்' என்பார்கள். ஜுஜு என்பது அவர்கள் வளர்க்கும் நாயா அல்லது பாய் ஃப்ரெண்ட்டா என்று குழம்பக் கூடாது.

******

தட்டு நிறைய வகை வகையான உணவுகள். ஆடு, கோழி, பிரியாணி - நான் வெஜ் வகையறா. ஃப்ரூட் சாலட், ஐஸ் கிரீம், குலோப் ஜாமுன், வெஜ் உணவு என வெரைட்டி விருந்து. ஏற்கனவே நிறைந்திருந்ததில், தயிர் சாதம் வைத்துக்கொண்டேன். அருமையான ருசி. சாப்பிட்ட விருந்து பிளேட் கணக்கு. உண்மையாய் என்று தெரியவில்லை, ஒரு பிளேட்டின் விலை சற்றேறகுறைய நாலு இலக்கத்தில் சொன்னார்கள்.

தயிர் சாதத்தை தங்கம் போல பாவித்தேன். ஒரு கிராம் தங்கத்தின் விலைக்கு கூப்பிடும் தூரத்தில் இருந்தது. பய பக்தியுடன் கீழே வைத்துவிட்டேன்.

Rest Room-ல் டி வி வைத்திருக்கிறார்கள். சிறிய சைஸ். ஆறு பேர் நிற்கும் இடத்தில் இரண்டு டிவி. டிவியில் 'ஷேர் மார்க்கெட் அலசலில் கருத்து சொல்லிக்கொண்டிருந்தார்' நிபுணர் ஒருவர்.

அண்டா குடித்துவிட்டு இயற்கை அழைத்தவர்களுக்கு 'செய்தி' மழை. auto flush வசதி. சுடு தண்ணீர் பைப், சாதா தண்ணீர் பைப், கை கழுவ, முகம் கழுவ, கையை காய வைக்க, ஷு துடைக்க, முகம் பார்க்க என ஒளிரும் டெக்னாலஜி வெளிச்சத்தில் பணம் ஜொலித்தது.

'உள்ளே' கழுவுவதற்கு பதிலாக டிஷ்யு பேப்பரை வைத்திருக்கிறார்கள். இத்தாலி மேக். அதன் நோக்கம் தவிர்த்து, கை மட்டும் துடைத்துக் கொண்டேன். நல்லவேளை!

******

நண்பர் கேட்டார், 'எப்படிபா இருந்தது?'

'பெரிய மனிதர்கள் அடிக்கடி வந்து போகும் இடம், ஒரு சொம்பு வாங்கி வைத்திருக்கலாம்'.