Thursday, November 13, 2014

'வெண்முரசு' விழா


ஜெயஸ்ரீயிடம் மட்டும் சொல்லியிருந்தேன். 

அம்மா, அப்பா, மஹதி, ஜெயஸ்ரீ அழைத்துக்கொண்டேன். எங்கே செல்கிறோம் என்பதை சொல்லவில்லை. ஜெயமோகனின் 'வெண்முரசு' நாவல் வெளியீட்டு விழா என்பது அவர்களுக்கு புதுமையாக இருக்கும். இது இலக்கியம் சார்ந்த நிகழ்வு என்பதால் ஒத்துழைப்பு எப்படி இருக்குமோ? கிளம்பி பாதி வழியில்தான் சொன்னேன்.

ஆரம்பம்
எழும்பூர் மியூசியம் தியேட்டர் வளாகத்துக்குச் செல்லும் வழியில் பாதைகள் அடைக்கப்பட்டிருந்தன. காவலர்கள் வண்டியை வழி மாற்றி அனுப்பிக்கொண்டிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடக்கும் நாள். வேறு வழியில் வளாகத்தை அடைந்தோம்.

மாலை 5.15க்கு, விருந்தினர்களை வரிசையாக அழைத்தனர். 'காக்கைச் சிறகினிலே' பாடலுடன் விழா தொடங்கியது.


போக்குவரத்துச் சிக்கல் காரணமாக இளையராஜா மட்டும் வந்து சேர்ந்திருக்கவில்லை. அசோகமித்திரனுக்கு நடுநாயகமான இடம். அவருடைய இரு பக்கங்களிலும் கமல், இளையராஜா. இளையராஜா பக்கம் பிரபஞ்சன், நாஞ்சில்நாடன். கமல் பக்கம் ஜெயமோகன், பி.ஏ.கிருஷணன். 

கூட்டம் நிரம்பி இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த காலியிருக்கைகளும் நிரம்பிக்கொண்டுயிருந்தன. அம்மாவை ஒரு இருக்கையில் அமர வைத்தேன். நாங்கள் தரையில் அமர்ந்து கொண்டோம், விழாமேடைக்கு நேர் எதிர்.

இது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் விழா. பிரம்மாண்டமாகவும், இலக்கிய அனுபவம் அளிக்கும்படியாகவும் இருந்தது. நிகழ்ச்சி விஜய் டிவியில் வெளிவருமென்பதால் அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. விழாவுக்கான அரங்கம் இலக்கிய நிகழ்ச்சிகள் என்று பார்க்கையில் பெரியதென்றாலும் கமல், இளையராஜா கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு சிறியதே! கணிசமானவர்கள் நின்றுகொண்டுதான் பார்த்தார்கள். 

எதற்காக இந்த விழா?

இந்த கேள்விக்கான தன்னிலை விளக்கமாக ஜெயமோகன் எழுதியதில் வெண்முரசு விழா ஏன்? எனக்கு உடன்பாடு என்பதே இவ்விழாவிற்கு நான் குடும்பத்தோடு செல்லக்காரணம்.
"இம்மாதிரியான பெருமுயற்சிகள், நம் தமிழ்ப்பண்பாட்டுச்சூழலால் உதாசீனப்படுத்தப்பட்டு பாதியிலேயே நின்று விடும். சோர்வும் தனிமையுமே அவற்றை செய்தவர்களுக்கு எஞ்சும். காரணம், நம் வாசகர்களும் சரி, ஊடகங்களும் சரி இயல்பாக இத்தகைய பெரு முயற்சிகளை கவனிப்பவர்கள் அல்ல, ஆதரிப்பவர்களும் அல்ல என்பதே".

வெண்முரசு
ராஜாஜியில் தொடங்கி சோ வரை பலரும் வியாசரை அடிப்படையாக வைத்து எழுதியிருக்கிறார்கள். எழுதியும் வருகிறார்கள். 300 முதல் 3000 பக்கங்கள் இவை இருக்கும்.

நான் சோ எழுதிய மகாபாரதத்தை தவிர வேறு படித்ததில்லை!

தினம் ஓர் அத்தியாயமென தொடர்ந்து பத்தாண்டுகள் மகாபாரதம் எழுதும் கற்பனைக்கெட்டாத மகத்தான இலக்கை வகுத்துக் கொண்டு இந்தாண்டின் முதல் நாளிலிருந்து எழுதி வருகிறார் ஜெயமோகன், 'வெண்முரசு' என பெயரிடப்பட்டிருக்கும் அத்தொகுப்பு, சுமார் 35,000 பக்கங்களுடன் 40 நாவல்களாக வருமெனத் தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தொடங்கிய 10 மாதங்களுக்குள் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் என 4000 பக்கங்கள் கொண்ட 4 நாவல்களை எழுதிவிட்டார்.

பாகங்கள்
காடு எரியுதுன்னு வைச்சுப்போம். அதுக்கு முதல் பொறின்னு ஒண்ணு இருக்கும் இல்லையா? அது மாதிரி குருக்ஷத்திரப் போரோட முதல் பொறிதான் முதற்கனல். அம்பை முதன்முதலில் சிந்தின கண்ணீர்த் துளிதான் இந்த பாகம்.

மழைக்காக தவளை எப்படி பிரார்த்தனை நடத்துதோ அப்படி குருக்ஷத்திர போரை உள்ளூர விரும்பின, அதுக்காக பிரார்த்தனை செய்த பெண்களைப் பத்தி சொல்கிறது மழைப்பாடல்.

மூன்றாம் பாகமான வண்ணக்கடல், புறக்கணிக்கப்பட்டவர்களைப் பத்தி உரக்கப் பேசுது. ஏகலைவன், துரோணர், கர்ணன்னு பாரதத்துல ஒதுக்கப்பட்ட மாந்தர்கள் நிறைய இருக்காங்க. இவங்க இந்த பாகத்துல சங்கமிச்சிருப்பாங்க.

அடுத்து நீலம். தன்னளவிலேயே தனித்த நாவல். ராதையோட கண் வழியே கிருஷ்ணனோட இளமை பருவத்தை அணுகறது. இதுல ஒரு சுவாரஸ்யம் இருக்கு.

இந்த நான்கையும் தனித்தனி புத்தகமாக 'நற்றினை பதிப்பகம்' வெளியிட்டிருக்கு.

5வது பிரயாகை. இன்னும் புத்தகமாக வெளிவரவில்லை. தொடரா இணையத்தில் வந்துகொண்டிருக்கிறது.

கங்கைல கலக்குற 5 நதிகளை பிரயாகைன்னு சொல்வாங்க. அப்படி பாஞ்சாலி என்கிற திரௌபதியோட பிறப்பை அவங்களோட ஆளுமையை வளர்த்தெடுத்த நிகழ்ச்சிகளை சொல்லுறது இதுல பதிவாகிறது.


பேசும் போது
பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் பேசுகையில், "வியாசர் பறந்த வானில், ஈயாக அல்ல, பருந்தாக ஜெயமோகன் இந்த நாவல் மூலமாக பறந்திருக்கிறார்" என்றார்.

"வெண்முரசின் சொல் நயத்தை மெச்சும் வகையில் அதன் சொற்களை எல்லாம் தொகுத்து ஒர் அகராதி வெளியிட வேண்டும்" என்றார் நாஞ்சில்நாடன்.

அசோகமித்ரன் பேசும் போது, "இன்றைய கணினி தொழில்நுட்பம் இல்லாவிட்டால், இப்படியொரு நாவல் முயற்சி சாத்தியமா என்று தெரியவில்லை. கையால் எழுதுவது என்பது மிகவும் அலுப்பு தருகிற விஷயம். கணினி தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி இந்த நாவலை ஜெயமோகன் எழுதுவது, பெரிய மகத்தான முயற்சி" என்றார்.

நீலம் தொகுப்பை முழுவதும் படித்துவிட்டு வந்திருந்த பிரபஞ்சன், அதிலிருந்து சில பகுதிகளைப் படித்துக் காட்டி, "இது எந்த பாரதத்திலும் இல்லை. இது போன்ற புது சிந்தனைகள்தான் எழுத்தாளனுக்குத் தேவை. ஜெயமோகனின் இந்த முயற்சி எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. அவரால் 3 லட்சம் பக்கங்கள்கூட எழுதமுடியும். 
மகாபாரதத்தை காலத்திற்கேற்ப, புதுமையாக எழுதி வருகிறார். இது உலக பேரிலக்கியமாக மலர வேண்டும்" என்றார்.

நிகழ்ச்சிக்கு நடுவில் பல ஆண்டுகளாக, மகாபாரதம் பிரசங்கம் செய்யும் மஹாபாரதக் கலைஞர்கள் ஐவர் விழாமேடையில் கௌரவிக்கப்பட்டனர்.

ஓவியர் சண்முகவேல், இணையத்தில் பாரத மொழிபெயர்ப்பைச் செய்துவரும் அருட்செல்வப்பேரரசன், ஜெமோகனின் மனைவி அருண்மொழி அவர்கள் அனைவரும் மேடையில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இசையுடனே ஆரம்பித்து பேசத் தொடங்கிய இளையராஜா, "மக்களுக்கு புத்தெழுச்சி கொடுக்காத எந்தக் கலையும் நாட்டில் இருப்பது வீண். அவரின் இந்தப் படைப்புக்கு இசையமைக்க நேர்ந்தால் அவர் எழுதும் வேகத்துக்கு என்னால் இசையமைக்க முடியுமா எனத் தெரியவில்லை. இதனை எழுதுவதன் மூலம், திரைத்துறையில் நானும், கமல்ஹாசனும் செய்ய முடியாததை எழுத்து துறையில் ஜெயமோகன் சாதித்துக் காட்டி உள்ளார்" என்றார்.

கமல்ஹாசன் பேசும் போது - "பைபிளை மிஞ்சும் அளவுக்கு 3000 ஆண்டுகளுக்கு மேலாக பேசப்படும் உலகின் மிகப்பெரிய இலக்கிய படைப்பாக உள்ள மகாபாரதத்தை நாவல் வடிவில் எழுதும் ஜெயமேகனின் முயற்சி மிகவும் தைரியமானது. கடினமான தமது முயற்சியின் மூலம் ஜெயமோகன் பேராசை மிக்கவராக தெரிகிறார்.


மனிதர்கள் எல்லோரும் கதைகளால் பின்னப்பட்டவர்கள். நீங்கள், நாம் எல்லோருமே கதை கேட்பவர்கள். நமக்கு மதம் தேவையோ, இல்லையோ, அந்த மதங்கள் தருகிற, அந்த மதங்களுக்குள் இருக்கிற கதைகள் நமக்கு தேவை. இசை வடிவத்தில் சொல்வதுதான் வேதங்கள். அதனால் சுருதி என்கிறோம். மகாபாரதத்தை ஜெயமோகன் நாவலாக எழுத, இளையராஜா அதை இசையாக தர, நான் கேட்டு கொண்டே இருப்பேன். வேறெதுவும் தேவையில்லை. இவ்வளவு பிரம்மாண்டமான நாவலை நான் இன்னும் படிக்கவில்லை. நம் காலத்தில் வணங்கத்தக்க படைப்பாளனாக இந்த மகாபாரத நாவல் வரிசை வழியாக ஜெயமோகன் நமக்கு கிடைத்திருக்கிறார்’’ என்றார்.

ஜெயமோகன் தனது ஏற்புரையில், "இந்த நாவல் முயற்சி எனது 25 ஆண்டு கால கனவு" என்றார்.

கவர்ந்த அம்சம்
  • கமல் பேசி முடித்தவுடன் கூட்டம் நகரவில்லை. ஜெயமோகனின் பேச்சை ரசித்துவிட்டுதான் கலைந்தார்கள். Like! 
  • தொழில்நுட்ப வடிவத்துக்கு முதன்மை கொடுத்து உருவாக்குவதால் முன்னெப்போதும் இருந்திராத வகையில் பல லட்சம் வாசகர்களைச் சென்றடையும் - சாத்தியமிருக்கிறது. Technology integration. 
  • அரசோ, பல்கலை கழகமோ, கல்வியமைப்புகளோ இத்தகைய முயற்சிகளுக்கு உதவாத இன்றைய சூழலில், வெண்முரசு நூல்வரிசை மேலும் பரவலாகச் சென்றடைய கமல் செய்யும் இந்த உதவி ஓர் அரசாங்கத்தின் உதவிக்கு நிகரானது. Fame - Popularity.
  • தனிப்பட்ட முறையில் வெண்முரசு நாவலுக்காக வரைந்த ஓவியங்களின் அழகை சிலாகிக்காமல் இருக்கவே முடியாது. Excitement!

உலகின் மிகப் பெரிய நாவலாக வளர்ந்துகொண்டிருக்கும் ‘வெண்முரசை’ நாம் ஒவ்வொருவரும் வரவேற்க வேண்டும்.


***
என் பேச்சை கேட்டு கூட வந்த அப்பா அம்மா, தீர்ந்ததும் ஒவ்வொரு மிட்டாய் கொடுத்து சத்தம் போடாதே என கெஞ்ச வைத்து பின் தூங்கிப்போன மஹதி, பொறுமையோடு இருந்த ஜெயஸ்ரீக்கும் Thanks. 

மறுபடியும் ஓர் இலக்கிய விழாவிற்கு "வா" என்றால் இவர்கள் என்ன சொல்வார்கள்? கேள்வியை நான் கேட்கப்போவதில்லை.
***

துளிகள்
மனுஷயபுத்திரன் மக்களோடு அமர்ந்திருந்தார், பின் வரிசையில்.
*
பாலகுமாரன் தனது மனைவியோடு வந்திருந்தார் என கேள்விபட்டும் பார்க்க முடியவில்லை.
*

நடுத்தர வயதில் இருந்தார் அந்த பெண்மணி.
"ஏங்க நீலம் ஒன்னு தாங்க, எவ்வளவு?"
"முதற்கணல்தான் 1st பாகம்ங்க".
"மூன்று பாகமும் ஏற்கனவே படித்துவிட்டேன்" - புன்னகை.
ஓ...

புன்னகை.
*

"ஏங்க இந்த புக்குக்கு discount கிடைக்குமா..?"
"அதெல்லாம்...இல்லைங்க."
"மொத்த நாலு பாகமும் எவ்வளவு?"
"செம்பதிப்பா?"
"அப்படின்னா...?"
"செம்பதிப்புனா படமிருக்கும், இதுனா சாதா. Text, எழுத்து மட்டும் தான். படம் கிடையாது"
"செம்பதிப்பு எவ்வளவு?"
"மூவாயிரத்தி......"
***


Additional:
சண்முகவேல் - ஓவியரின் வலைதளம்.
இதுதமிழ் - விழா பிரபலங்கள் முழு பேச்சும்.
தினமணிதமிழ் இந்துமாலைமலர் - விழா குறித்த நாளிதழ் செய்திகள்.
குங்குமம் பேட்டி
வெண்முரசு - இணையத்தில் இலவசமாக படிக்க.
.

Monday, October 20, 2014

கல்கியின் தியாகபூமி - 2014-ல் எப்படி?


சமிபத்தில் கல்கி எழுதிய தியாகபூமி வாசிக்க வாங்கினேன் (ஜீயே பப்ளிகேஷன்). கல்கியின் தியாகபூமி, முதலில் 1938-39ல் ஆனந்த விகடனில் வெளிவந்தது. சரியாக 75 வருஷங்களுக்குப் பின் எழுதுகிறேன். எப்படி இருக்கும்? பார்க்கலாம்...

தியாகபூமி

ஆனந்த விகடனில் ஓவியர் வரைந்த படங்களுக்குப் பதிலாகப் புகைப்படங்களுடன் -- திரைப்படத்துக்கான ஸ்டில் படங்களுடன் -- வெளிவந்திருக்கிறது ‘தியாக பூமி’. கல்கி, இருபது இதழ்களில் தொடராக எழுதியிருக்கிறார். கோடை, மழை, பனி, இளவேனில் ஆகிய 4 பாகங்களாக இருக்கும்.

ஒவ்வொரு அத்தியாத்திற்கும் தலைப்பு வைத்திருக்கிறார். மொத்தம் 69 அத்தியாயம். எவ்வளவு நாள் ஆகிவிட்டது இப்படி வாசித்து.

தியாகபூமி - ஆரம்பத்தில் சரளமாகக் கதைக்குள் இழுத்துவிடுகிறார். நிரம்ப உற்சாகத்துடன் கதை போகும்போது நடுவில் கொஞ்சம் நாடகத்தனத்தோடு சம்பவங்கள் நடந்துவிடுகிறது. பின் traditional ஆக முடிகிறதாகவே எனக்குப் படுகிறது.



தியாகபூமி - கதை

தியாகபூமி பக்கா மசாலா கதை -- சினிமா கதை. அன்றைய Hot topic ஆன தீண்டாமை, மது விலக்கு, பெண்விடுதலை, சுதந்திர போராட்ட பின்புலத்துடன், அப்பழுக்கில்லாத தந்தை, விசுவாச வேலையாள், உச்சு கொட்ட வைக்கும் பெண் குழந்தை, புரட்சி பேசும் பெண் - எல்லாவற்றையும் ஒரு கலக்கு கலக்கி commercial ஆக கொடுத்திருக்கிறார்.

சினிமாவாக எடுக்கப்படும் கதை என்ற விளம்பரம். வாராவாரம் சினிமா ஸ்டில்லோடு தொடர்கதை. அப்புறமென்ன கதை அமோக வெற்றி.

இந்த நாவல் ஒரு யதார்த்தக் குடும்பக்கதை.

அந்தகாலத்து ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் துவங்குகிறது புதினம். தஞ்சாவூர் ஜில்லாவின் குடமுருட்டிப் பாசனத்தில், நெடுங்கரை கிராமத்தில் நடப்பதாகக் கதை. வருஷம் 1918

சம்பு சாஸ்திரியின் மகள் சாவித்திரி. தந்தையுடன் பூஜை, புனஸ்காரங்கள், பஜனை, ஏழை எளியோருக்கு உதவி என்று ஒரு பக்கா கதாநாயகிக்கான அத்தனை குணாதிசயங்களும் கொண்டு வளைய வருகிறாள். அவளது சிற்றன்னை, சிற்றன்னையின் தாயார் என்று இருவரும் சொல்லத் தேவையில்லாமல் சாவித்திரியை அனைத்து விதங்களிலும் படுத்தியெடுக்கிறார்கள்.

மாடர்னான பெண்ணை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் ஸ்ரீதரன், விருப்பமில்லாமல் பட்டிக்காட்டு சாவித்திரியை மணக்க நேர்கிறது. இங்கேயும் சொல்லத் தேவையின்றி வரதட்சணை கேட்டல், தாலிகட்டும் கடைசி நேரத்தில் இன்னமும் உயர்த்திக் கேட்டல் என்ற குணாதிசயங்கள் கொண்ட ஸ்ரீதரனின் அம்மா.

(அந்தக் காலத்திலேயே) நான்குநாள் கல்யாணம், நான்காயிரம் வரதட்சணை எல்லாம் தாண்டிச் சித்தியிடமிருந்து விமோசனம் கிடைத்தது என்று நினைக்கும் சாவித்திரிக்கு தன் புகுந்த ஊரான கல்கத்தாவில் பேரதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. வழக்கமான அல்லல்கள், அவலங்கள், மாமியார் அவஸ்த்தைகள்.

ஊரில் சாஸ்திரி நொடித்துப்போய்ச் சென்னை போய்விடுகிறார்.

விஷயம் தெரியாமல் நிறைகர்ப்பிணியாக கல்கத்தாவிலிருந்து தன்னந்தனியே கிராமத்திற்கு சாவித்திரி வந்தால் அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது. ஊரை வெள்ளம் சூழ்ந்தபோது வேற்று சாதியினருக்கு உதவியதற்காக ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படும் சம்பு சாஸ்திரி மற்றும் குடும்பத்தினர் ஊரைக் காலி செய்து போய்விட்டனர்.

சாவித்திரிக்கு அக்ரஹாரம் அனுமதி மறுக்கிறது. சேரி உதவ வருகிறது. அவளும் சாஸ்திரியை தேடி பட்டணம் செல்ல குழந்தை பிறக்கிறது. குழந்தையை தற்செயலாகப் பார்க்கும் சாஸ்திரியிடம் விட்டுவிட்டு பம்பாய் போய்விடுகிறாள். சம்பு சாஸ்திரி தன் பேத்தி (சாரு) எனத் தெரியாமலேயே அந்தக் குழந்தையை வளர்க்கிறார்.

ஆறேழு வருஷம் கழித்து -- சினிமா போல -- பணக்காரியாக, உமாராணியாகத் திரும்புகிறாள். புரட்சிப் பெண்ணாக, நவநாகரிக மங்கையாக மாறியிருகிறாள் சாவித்திரி. வந்தவுடன் கரெக்டாக சாஸ்திரியைத் தேடி பெண்ணைச் சேர்த்து கொள்கிறாள். 


காலம் கரைகிறது. இதற்குள் கஷ்டபடும் ஸ்ரீதரன் தமிழகம் வந்து உமாராணியை அடையாளம் காண்கிறான். தன்னுடன் மறுபடி சாவித்திரி சேர்ந்து வாழ வேண்டும் என கோர்ட்டுக்குப் போகிறான்.
சாவித்திரி, நான் உனக்கு ஜீவனாம்சம் தருகிறேன், ஆளைவிடு என்கிறாள் (அப்போது விவாகரத்து சட்டம் கிடையாது). ஊரெல்லாம் இதே பேச்சு, பத்திரிக்கையில் வந்து ஒரே பரபரப்பாகிறது.

அப்புறம் சமத்துக் குழந்தையால் எல்லோரும் ஒன்று சேர்ந்து சுபம்!
---

நல்லானும், தீட்ஷிதர் கதாபாத்திரமும் குறிப்பிட்டு சொல்லவேண்டியவை. நல்லான் - சம்பு சாஸ்திரியின் அந்தரங்க உதவியாளன். சம்பு சாஸ்திரியின் சுக துக்கங்கள் அனைத்திலும் கடைசிவரைக் கூட இருப்பவன். தீட்ஷிதர் - வம்பு பேசும் ஒரு காரக்டர். இவர்கள் கதைக்கு துணையாக வந்தாலும் முக்கியமான திருப்பதிற்குக் காரணமானவர்கள்.
---

தியாகபூமி சினிமாவாக 1939-ஆம் ஆண்டு, மே இருபதாம் தேதி அன்றைய கெயிட்டி உட்பட பல தியேட்டர்களில் வெளியானது. கல்கி விகடனில் சினிமா விமர்சனம் என்று எல்லா சினிமாவையும் கிழிகிழி என்று கிழித்துக் கொண்டிருந்த காலம். இவர் கதை எழுதிய சினிமா வந்ததும் எதிர்பார்ப்பு அதிகமாகியது. சினிமாவில் பாபநாசம் சிவன் சம்பு சாஸ்திரியாகவும், எஸ்.டி. சுப்புலட்சுமி சாவித்ரியாகவும் நடித்தனர். சினிமாவில் குழந்தையாக நடித்த பேபி சரோஜா பெரிய ஸ்டார் ஆனார். அந்தக் காலத்தில் அது மிகவும் பாப்புலரான பேர், நிறைய குழந்தைகளுக்கு அப்படி பேர் வைத்தார்கள். பேபி சரோஜா பொம்மை ஒவ்வொரு வீட்டிலும் கொலுவை அலங்கரித்தது. படம் வந்தபோது மூடிபோட்ட பீப்பாய் ஷேப்பில் தூக்குபாத்திரம் 'உமாராணி' தூக்கு எனப்பட்டது.

படம் பெரும் வெற்றி.

பின்னர், தியாகபூமி திரைப்படம் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டது. அதற்குள் 150 நாள் ஓடிவிட்டு இருந்தது. Interesting.
---

கதையம்சத்தில் மட்டுமல்ல; பாத்திரங்களும் வாக்கியங்களின் ஜாலங்களும் நம்மை சொக்க வைக்கிறது.

இந்தப் புதினத்தின் முக்கிய அம்சங்களின் ஒன்று, கல்கி ஒவ்வொரு கதாபாத்திரத்தின் எண்ணங்களையும் அவரவர் பார்வையிலிருந்து சொல்லியிருப்பார்.

எனக்கு படிக்கும் போது பிடித்த பழைய சினிமா பார்பதுபோல் இருந்தது. Formula கதையாக இருந்தாலும் லேசான சரித்திர மதிப்பு, கல்கியின் தமிழ், எழுத்து நடைக்கும், சுவாரஸ்ய்ய கதை போக்கிற்கும் இக்கதையை நிச்சயம் படிக்கலாம். 



பி.கு:
1) B.A.(Tamilology) 'தியாகபூமி' பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
http://www.tamilvu.org/courses/degree/p101/p1013/html/p10134fr.htm
2) மலிவு விலை பதிப்பாக குடும்ப நாவல் ஜீ.அசோகன் வெளியிட்டு இருந்தார். (ஜீயே பப்ளிகேஷன் ரூ.30/- Aug, 2014). 
3) ஜெயமோகன் இதை சிறந்த social romances லிஸ்டில் சேர்க்கிறார். அசோகமித்ரனும் இ.பா.வும் இதை சிபாரிசு செய்திருக்கிறார்கள்.

Saturday, May 10, 2014

தமிழ் நாட்டிற் சினிமா


நீங்கள் சினிமா விமர்சனம் எழுதுவதில்லையா? என கேட்கிறவர்களுக்கு எழுதியிருக்கேனே எனச் சொல்வதை நிறுத்திவிட்டேன். பழகிக்கொண்டேன்.

இப்போதெல்லாம் சினிமா நல்லா இருந்த 140 வார்த்தைகளுக்குள் வாட்ஸ்அப் அல்லது டிவிட்டி விடுகிறேன். விஸ்தாரமாக சொல்வதில்லை. விடாபிடியாக திருட்டு ஸிடியில் பார்க்காமல் தியேட்டரில் மட்டும் பார்க்கிறேன். அப்படியிருக்கும் இன்னும் சிலரும் வழக்கொழிந்து விடாமல் இருக்க வேண்டுமே என்றுதான் கவலையாக இருக்கிறது, நிற்க. 

சினிமா விமர்சனம் எழுதும், சொல்லும் விமர்சகர் மேல் எனக்கொரு விசனமுண்டு. இப்போது விமர்சகர் எனத் தனியாக யாரும் இருப்பதில்லை. படம் பார்க்கும் அனைவரும் ரஸிகனாக, பொ போக்க மட்டும் வருவதில்லை, அவர்கள் உள் இருக்கும் விமர்சகனையும் உயிர்போடு வைத்து அழைத்து வருகிறார்கள். இதற்கு தகவல் தொடர்பு விரிந்ததும், நமது ரசனை உயர்ந்ததும்-தாழ்ந்ததும் ஒரு சமூக காரணம். போகட்டும்.

பொதுவாக நமது சினிமா, இப்போது எப்படி இருக்கிறது? 

எப்போதும் இருக்கும் கேள்வி,  எது ஜெயிக்கும்? இதற்கான பதில் கண்டிபிடித்துவிட்டால் Patent rights வாங்க தயார், நீ நான் என.



எல்லா எழுத்தாளர்களும் பிரியப்பட்டு சினிமா விமர்சனம் செய்திருக்கிறார்கள். அனைத்துப் பத்திரிக்கைகளும் - குமுதம், விகடன், தினத்தந்தி என அவர்கள் ஓரிருப்பக்கம் ஒதுக்கி பாராட்ட குட்ட செய்தார்கள், செய்கிறார்கள். விகடனில் மார்க் வாங்குவது விஷேசம்.

கல்கி அந்த காலத்திலேயே சர்வ தேசிய பிலிம் திருவிழாவுக்காகச் சென்னையில் காட்டப்பட்ட வெளிநாட்டு படங்களைப் பார்திருக்கிறார். ஒப்பிட்டு சொல்லியிருகிறார். 'மனிதன் எப்படி உயர்கிறான்?' ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். (கல்கி கட்டுரைகள் தொகுதி-1, மணிவாசகர் பதிப்பகம்). அதில்  'சம்சாரம்' என மகத்தான வெற்றி பெற்ற படத்தை அவரது நடையில் எழுதியிருப்பார் (கழுவி, கழுவி ஊத்தியிருப்பார்!).

"பத்துப் படங்களுக்கு ஒரு படம் வீதமாவது நம் நாட்டையும் நாட்டு மக்களையும் உயர்த்தக் கூடிய முறையில் நம் ஸினிமா முதலாளிகள் உயர்தரப் படமாக எடுக்கக் கூடாதா? வெளிநாடுகளில் காட்டிப் புகழ்பெறக் கூடிய படமா எடுக்கக் கூடாதா?" . ஆனால் நல்ல படங்களை அவர் பாராட்டத் தவறியதில்லை. உதாரணம், நல்லதம்பி, சந்திரலேகா, வேலைக்காரி, வாழ்க்கை - போன்ற படங்களுக்கான இவரது விமர்சனம்.

புதுமைபித்தன் சினிமாவிலே இருந்திருக்கிறார். கல்கியிடம் இருந்த ஏக்கம் சுஜாதவிடமும் இருந்தது. இப்போது நிறைய எழுத்தாளர்கள் சினிமாவில் இருப்பது மகிழ்ச்சி.

விளக்கமாக சொல்லும் விமர்சனமும் ஒரு கலை, வரவேற்க கூடியதே. அதில் விற்பனர்கள் பார்த்துக் கொள்வார்கள். நமது பொறுப்பு நல்ல சினிமா எடுப்பதும், ரசிப்பதும்.

***

இதில் கவிதை செய்திருப்பவர் பாரதிதாசன் என்பது நம்மில் சிலர் தெரிந்திருக்கலாம். சினிமா விமர்சனத்தை கவிதையில் சொன்னதில் இவர்தாம் முன்னோடி. எளிமையாக, படித்ததும் புரியும். 56 வரியில் சொன்ன கவிதை அப்படியே இதோ...

உருவினையும் ஒலியினையும் ஒன்றாகச் சேர்த்தே
  ஒளிபெருகத் திரையினிலே படங்காட்டும் கலையைத்
திருவிளைக்கும் நல்லறிஞர், ஐரோப்பி யர்கள்
  தெரிந்துவெளி யாக்குகின்றார் எனக்கேட்ட நாளில்
'இருவிழியால் அதுகாணும் நாள் எந்த நாளோ,
  என்நாடும் அக்கலையில் இறங்குநாள் எந்நாள்
இருள் கிழித்துத் தமிழ்நாடாம் நிலவுதனை, உலகின்
  எதிர்வைக்கும் நாள் எந்நாள்' என்றுபல நினைத்தேன்.

ஒலியுருவப்படம் ஊரில் காட்டுவதாய்க் கேட்டேன்;
  ஒடினேன்;ஒடியுட்கார்ந் தேன் இரவில் ஒருநாள்
புலிவாழும் காட்டினிலே ஆங்கிலப்பெண் ஒருத்தி,
  புருஷர்சக வாசமிலாப் புதுப்பருவ மங்கை
மலர்க்குலத்தின் அழகினிலே வண்டுவிழி போக்கி
  வசமிழந்த படியிருந்தாள்! பின்பக்கம் ஒருவன்
எலிபிடிக்கும் பூனைபோல் வந்தந்த மங்கை
  எழில் முதுகிற் கைவைத்தான்! புதுமை ஒன்றுகண்டேன்.

உளமுற்ற கூச்சந்தான் ஒளிவிழியில் மின்ன,
  உயிர் அதிர்ந்த காரணத்தால் உடல் அதிர்ந்து நின்றே,
தெளிபுனலின் தாமரைமேற் காற்றடித்தபோது
  சிதறுகின்ற இதழ்போல செவ்விதழ் துடித்துச்
சுளைவாயால் நீயார்என் றனல்விழியாற் கேட்டாள்
  சொல்பதில்நீ என்றதவள் சுட்டுவிரல் ஈட்டி!
களங்கமிலாக் காட்சி, அதில்இயற்கை யெழில்கண்டேன்!
  கதைமுடிவில் 'படம்' என்ற நினைவுவந்த தன்றே!

எந்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்,
  எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
ஒன்றேனும் தமிழர்நடை யுடைபா வனைகள்
  உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர் உள்ளதில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதா யில்லை!
  ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவா யில்லை!
ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவா யில்லை
  ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதா யில்லை!

வடநாட்டார் போன்ற உடை, வடநாட்டார் மெட்டு!
  மாந்தமிழர் நடுவினிலே தெலுங்கு கீர்த் தனங்கள்!
வடமொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில ப்ரசங்கம்!
  வாய்க்கு வரா இந்துஸ்தான்! ஆபாச நடனம்!
அடையும் இவை அத்தனையும் கழித்துப் பார்க்குங்கால்,
  அத்திம்பேர் அம்மாமி எனுந் தமிழ்தான் மீதம்!
கடவுளர்கள், அட்டைமுடி, காகிதப் பூஞ்சோலை
  கண்ணாடி முத்துவடம் கண்கொள்ளாக் காட்சி

பரமசிவன் அருள்புரிய வந்துவந்து போவார்!
  பதிவிரதைக் கின்னல்வரும் பழையபடி தீரும்!
சிரமமொடு தாளமெண்ணிப் போட்டியிலே பாட்டுச்
  சிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து
வரும் காதல்! அவ்விதமே துன்பம் வரும், போகும்!
  மகரிஷிகள் கோயில்குளம் - இவைகள் கதாசாரம்.
இரக்கமுற்ற படமுதலாளிக் கெல்லாம் இதனால்
  ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!

படக்கலைதான் வாராதா எனனினைத்த நெஞ்சம்
  பாழ்படுத்தும் முதலாளி வர்க்கத்தின் செயலால்,
படக்கலையாம் சனியொழிந்தால் போதுமென எண்ணும்!
  பயன்விளைக்கும் விதத்தினிலே பலசெல்வர் கூடி
இடக்ககற்றிச் சுயநலத்தைச் சிறிதேனும் நீக்கி
  இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப்
படமெடுத்தால் செந்தமிழ் நாடென்னும் இளமயிலும்
  படமெடுத்தாடும்; தமிழர் பங்கமெலாம் போமே!

***

56 வரிகளானாலும் பிற்பாடு படிக்கலாம் என வந்துவிட்ட அன்பர்களுக்கும், படித்தவர்களுக்கும் சேர்த்தே நான் சொல்ல விரும்புவது இதைத்தான் - விமர்சனம் வைப்பது முறைமை, ஒரு கலை. அதில் மெனக்கெடல் உண்டு. கவனம் தேவை. அதை விட ரஸிப்பது எளிமையானது. இயல்பாக வருவது.  

வாருங்கள்... திறந்த மனதுடன் ரசிக்கலாம், (முடிந்தால்) ஆக்கலாம், பின் விமர்சிக்கலாம். அடுத்தடுத்த படிநிலையும் இதுதான்!