Wednesday, February 23, 2011

முதல்வரின் உண்மை


இலேசாக தலைவலி..... அதனால் என்ன என்று நான் இருந்திருக்கலாம். இல்லை தைலம் தடவி சாய்ந்திருக்கலாம். இரண்டும் இல்லாமல் இப்படி ஆகிவிட்டதற்கு காரணமும் நானே!

என்ன நடந்தது?


தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் பேச்சை படிக்க நேர்ந்தது. சமீபத்தில் நடைபெற்ற ப.ஜீவானந்தம் அவர்களின் இல்ல மணவிழாவில் கலந்து கொண்டு பேசினார்.

'அரசியல் நாகரிகத்தை தமிழ் நாட்டைத் தவிர வேறு எல்லா இடங்களிலும் பெற்றிருக்கிறார்கள். தமிழ் நாட்டிலே தான் அந்த உறவு மனப்பான்மை, அந்த நேச மனப்பான்மை, அந்த நாகரிகம் இல்லை. .....இன்றைக்கு என்னவோ, அரசியல் நாகரிகம் என்றால் என்ன விலை - எந்தக் கடையிலே விற்கிறது என்று கேட்கின்ற அளவுக்கு - விசாரிக்கின்ற அளவுக்கு நாகரிகம் நலிந்து போய்விட்டது. நசிந்து போய் விட்டது'.
(முரசொலி 8.2.2011) http://bit.ly/dOR82Z

முதல்வர் கூறியது முற்றிலும் உண்மைதான். தமிழகத்தில் அரசியல் நாகரிகம் சற்றும் இல்லாமல் போய்விட்டதோ என சிந்தித்து, ஏற்றுக் கொண்டுவிட வேண்டியதுதான் என பெருமூச்சு விட்டேன்.

ஆனாலும் பாருங்கள் இன்னொன்றும் என் கண்ணில் பட்டது.

அது, சுப்ரமணியம் சாமிக்கு, வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப் பட்டது தொடர்பாக கழக துணைப் பொதுச் செயலாளர், தமிழக சட்ட அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள பதில். பதிலின் ஒரு பகுதியில் இப்படிக் குறிப்பிட்டுள்ளர். அதுவும் அதே தேதியில்....

'சுப்பிரமணியம் சுவாமி என்பவர் யார், அவருடைய குணாதிசயங்கள் என்ன என்பதை இந்திய நாட்டு மக்கள் நன்கறிவார்கள். தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் எல்லாம் தான் ஏதோ மெத்தப் படித்த "மேதாவி" என்பதைப் போலக் காட்டிக் கொள்பவர். அரசியலில் கூடு விட்டு கூடு பாயும் பேர்வழி. நாடு விட்டு நாடு போய் நஞ்சை கொட்டி விட்டு வரும் ஜென்மம். ஒரு கட்சியில் கூட நிலையாக நிற்காத அரசியல் நாடோடி. ஆதாயம் கிடைக்கிறது என்றால், யாருக்கும் பல்லக்கு தூக்கும் வாடகை மனிதர். விளம்பரம் கிடைக்கும் என்றால் மனிதக் கழிவையும் கூட தொடத் துணியும் அற்ப பேர்வழி. பொதுவாகச் சொல்லப் போனால் இந்தியாவில் ஒரு முதிர்ந்த அரசியல் ஜோக்கர் என்று கூறலாம். ஆனால் அவருக்கு தான் ஒரு அறிவாளி, மேதை என்கிற நினைப்பு. அதனால் எதிலும் மூக்கை நுழைக்கலாம் என்கின்ற அரிப்பு.

அந்த அரிப்பின் விளைவுதான்.....' இப்படி நீள்கிறது. http://bit.ly/ebogFS


இப்போது சொல்லுங்கள். தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லை என்று கருணாநிதி அவர்கள் கூறியது எப்பேர்பட்ட உண்மை.

துரைமுருகனுக்கு அவரின் தலைவர் சொன்னது தெரியாது போலிருக்கிறது. இல்லை என்றால் தைரியமாக அதே தேதியில் அந்த அறிக்கையை வெளியிடுவாரோ. இல்லையில்லை.... இருக்காது. பின் ஒரு மந்திரிக்கு, முதல்வர் சொன்னது தெரியாமல், முதல்வரின் பேச்சை கேட்காமல் வேறு என்ன செய்துவிடுவார்.

அது மக்களுக்காக மக்களிடம் சொன்னது என்று கூடவா நமது அமைச்சருக்கு தெரியாமல் போய்விடும். அப்படிதான் இருக்க வேண்டும்.

அதே நேரத்தில், முதல்வரும் இதை அறிந்திருப்பார். அப்படியானால் அமைச்சரின் மீது என்ன நடவடிக்கை வருமோ(!), என்னவாகுமோ என்பதையும் பொறுத்திருந்துதான் நாம் பார்க்கவேண்டும். இதற்காக முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால்? துரைமுருகன் கூறியது நாகரிகமானது என்று (முதல்வர் போல்) ஏற்றுக் கொண்டுவிட்டால் போகிறது !

*****
ஒரு வேளை தைலமே தடவியிக்கலாமோ?
.