Monday, May 24, 2010

'தென்றல்' புரட்டியது


இந்த கவிதை புரிகிறதா பாருங்கள்...

அது என்ன

ஆரம்பத்தில்
அது என்னவென்றே தெரியவில்லை
இரண்டாய், மூன்றாய், நான்காய்.,
பல்கிப் பெருகியது
கடைசியில் பார்த்தால்
அது நான் என்று சொன்னார்கள்.
கடவுளே!
**********

இரண்டு வாரங்களுக்கு முன்பு லேண்ட் மார்க் சென்றிருந்தேன்.

தமிழ் புத்தகங்களின் வரிசைகளை வேறு பக்கம் மாற்றி வைத்திருந்தார்கள். மொத்தமாக பார்க்கும் போது தமிழ் புத்தகங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவே எனக்கு தோன்றும். இப்பொழுதும் அப்படியே.

அந்த வாரத்தின் அல்லது மாதத்தின் அதிகம் விற்பனையான (Best Sellers), புதிய வரவுகள் (New Arrivals) என பட்டியலிட்டு வைத்திருப்பார்கள். எத்தனை முறை தடவி, புரட்டி, கலைத்து நேரம் கடத்தினாலும் விரோதமாய் பார்க்கமாட்டார்கள். பொறுமையாய் தேடலாம்.

ஒத்துழைக்கும் ஊழியர்கள், ரூம் ஃப்ரெஷ்னர், உறுத்தாத மெல்லிய சங்கீதம், ஏசியின் குளு குளு என சுகானுபவம் கொடுக்க முயல்கிறார்கள்.

புத்தகம், மியூசிக், படங்கள், பெண்கள், குழந்தைகள், வீட்டு அலுவலக உபயோகங்கள் என செக் ஷன் வாரியா பிரிந்திருக்கும். பார் கோட் முறையில் விலையை வருடி உடனடியாக பில் கொடுப்பார்கள். கட்டிய பிறகு காசில்லாமல் புன்னகைத்துவிட்டு வெளி வர வழி கேட்டால் காட்டுவார்கள். தமிழ் நாட்டின் மற்ற சிறு நகரங்களிலும் யாராவது franchise எடுக்கலாம். (குறிச்சுக்கோங்கப்பா !).

ஒரு முறை வந்தவர்கள் நிச்சயம் மறு முறை வருவார்கள், வர வேண்டும். அதில் அடங்கியிருக்கிறது அவர்களின் 'சக்ஸஸ் ஃபார்முலா'.


எதேச்சையாக தேடிய போது கண்ட 'நீல இறகு' புத்தகம் - எழுதியது தென்றல். இயற்கையோடும் வாழ்வின் எளிய அழகுகளோடும் தன்னைப் பிணைத்துக் கொள்பவை தென்றலின் கவிதைகள் என்கிறது பின் அட்டை. உண்மைதான். உதாரணம் -

ஓர் அடி முட்டாள்
அயோக்கியன்
அதி புத்திசாலி
ஒரு ஞானி
நால்வரும் குளத்தில் குதித்தனர்
ஒரே மாதிரிதான்
வட்ட வட்டமாக வந்தது.

இதை சற்றே பார்ப்போம். 
ஞானி முட்டாள் என்பதெல்லாம் நமக்குள் தான். மனிதர்களுக்குள். இயற்கைக்கு நாம் அனைவரும் சமம். ஒன்றுதான். கெட்டவன் மேதாவி என்ற பாகுபாடெல்லாம் இல்லை. பேதம் கிடையாது. யார் குதித்தாலும் ஒரே மாதிரிதான். நீ பெரியவன் என்பதால் எதுவும் மாறிவிடுவதில்லை. 

அட.....! ஆமாம் என்று நீங்கள் ஆமோதித்தால் கவிதை உங்களிடம் கை குலுக்கியாகிவிட்டது. 

விஷயம் அவ்வளவுதான்.

கிட்டதட்ட ஜென்னிற்கு அருகில் வரும் இந்த கவிதையே எனக்கு போதுமானதாக இருந்தது. வாங்கி வந்துவிட்டேன்.


முதலில் சொன்னதற்கான விளக்கம்: குழந்தையாய் மாறிய நுட்பம் விளக்கும் கவிதை.


(உயிர்மை பதிப்பகம், அபிராமபுரம், சென்னை - 18, 044-24993448)