Wednesday, February 16, 2011

கவிதை தருணங்கள்




கவிஞர் சொன்னது போல் 'நான் கவிஞனுமில்லை.... நல்ல ரசிகனுமில்லை....' இரு கைகளையும் முதலிலேயே தூக்கிவிடுகிறேன். ஆனாலும் கவிதைப் பற்றி பேச ஆசை.

காதலர் தின பிப்ரவரி, மூச்சு முட்ட தமிழகம் முழுவதும் ஆடி வெள்ளம் போல பொங்கி ஓடுகிறது கவிதை. இதில் விஷயமே, நம் எல்லோருக்கும் கவிதை வருகிறது. கவிதை உள்ளம் அபரிதமாக இருக்கிறது. சென்னை தொட்டு நாகர்கோவில், கன்னியாகுமரி தெருகோடி வரை அத்தனை பேர்களுக்கும் 'கவிதை' சரளம்.

இளைஞர்கள் எந்நேரமும் ஆய்தமாயிருக்கிறார்கள். கைகடிகாரம், காங்கிரீட் வீடுகள், கற்பு, ஏழை, காகா, மழை, முத்தம், யுத்தம், மறதி, துக்கம் என எதுவும் கருப்பொருள் ஆகிவிடுகிறது. குழந்தையோ, பிரசவமோ அவர்களுக்கு சுலபம்.

கவிதை வளர காரணிகளாக வாரம்தோறும் பத்திரிக்கைகள் பத்து ரூபாய் முதல் சன்மானம் கொடுத்து வளர்த்துவிடுகிறது. முதல் மீசை மழித்த கையோடு ஆசை முளைக்க - பால் பயிண்ட் பேனா பிடிக்கிறார்கள். கால் பக்க காகிதம் போதுமானதாக இருக்கிறது. ரோட்டோரம் இயற்கை அழைப்புக்கு ஒதுங்குவதில் உள்ள தயக்கமின்மையே கவிதையிலும் சகஜமாய் வருகிறது. நான் கவிஞர்களை பழிக்கவில்லை. அந்த அளவுக்கு இயல்பாய் தயாராய் இருக்கிறார்கள் என்கிறேன். இது ஒரு ஆரம்ப நிலை.

அடுத்து, சொந்த காசைப் போட்டு அல்லது மனைவியின் நகை என ஒன்றிரண்டு புத்தகம் வரை வந்துவிடுகிறார்கள். சினிமாவில் சங்கமம் ஆவது இலக்கு. இது மத்திய நிலை.

வேலை கிடைக்காதவர்கள் தாடி வளர்த்து கொஞ்சம் கஞ்சா குடித்து தலை கலைந்த இண்டெலக்சுவல், கவிதை படிப்பார்கள் இல்லை வடிப்பார்கள். உபத்திரம் இல்லை. கவிதை எழுதி, புரட்சி பேசி, சமூகம் சாடி கன்னோ (gun), திவிரவாதமோ கையில் எடுக்காதவரை ஒரு பிரச்சனையும் இல்லை. இப்போது இந்த நிலை கிடையாது. எஞ்சியவர்கள் சினிமாவின் கதவு தட்டி காத்திருக்கிறார்கள்.

என் வரையில் மிக அதிகமாய் எழுதப்பட்ட டாப் ஃபைவ் சங்கதிகள்: காதலும் சோகமும், சுயமுன்னேற்றம், தொழிலாளிகள், இயற்கை காட்சிகள், மற்றும் பெண். திகட்டத் திகட்ட எழுதியாகிவிட்டது. தடை உத்தரவு வாங்கி தருபவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் பரிசு! தர காத்திருக்கிறேன்.

*****

தமிழர்கள் தொல்காப்பிய காலத்திலிருந்தே எல்லாவற்றையும் கவிதையில்தான் சொல்லி வந்தார்கள். ஆச்சரியமான சங்கப் பாடல்களை விட்டு விட்டால் எல்லாவற்றையும் விருத்தங்களிலும் வெண்பாக்களிலும் பொருத்திக் கொண்டிருந்தார்கள். கவிதை என்பது எழுத்து தமிழின் சிகர வடிவமாக இருந்தது. உரைநடை பேச்சில்தான் இருந்தது. இலக்கியத்தில் உரை நடை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்ததே தவிர, தனித்து வளர அச்சியந்திரமும் ஆங்கிலேயர்களும் வர வேண்டியிருந்தது.

ஆனால் கவிதை ஏறக்குறைய இரண்டாயிர வருஷ சரித்திரம். நம் முன்னோர்கள் எண்ணற்ற கவிதைகளும் வடிங்களும் கொண்டு எழுதியிருக்கிறார்கள். மொழி ஆளுமை தேவையும் மரபு கட்டுபாடும் இருந்ததால் சென்ற நூற்றாண்டு வரை கவி எழுதுபவர்கள் எண்ணிக்கை மிக குறைவு. கட்டுப்பட்டு இருந்தது.

பாரதி சற்றே எளிமைப்படுத்தினார். இருந்தும் மரபிலிருந்து அதிகம் விலகவில்லை. தேசிய விஷயங்களைப் பற்றி நேரிசை வெண்பாக்களும் விருத்தங்களும் எழுதினார்.

ஆனாலும், புதுகவிதையின் முன்னோடி பாரதி இல்லை. முப்பது-நாற்பதுகளில் நா.பிச்சமூர்த்தி, கு.ப.ரா போன்ற ஆதாரமான சிறுகதை எழுத்தாளர்கள் சிறுகதை அளவுக்கு நீட்ட முடியாத விஷயங்களை, யாப்பைப் பற்றி கவலைப்படாமல் நேரடியாக எழுதிப் பார்த்தார்கள். புதுமைப்பித்தன் நேரிசை வெண்பாவில் எழுதினார். இந்த முயற்சிகள் எல்லாம் கூட அன்று அவர்களுக்குள்ளேயேதான் இருந்தது.

ஐம்பதுகளில்தான் சி.சு.செல்லப்பா, சி.மணி போன்றோர்கள் புதுகவிதையை யாப்பில் இருந்து ஒரு புரட்சி போல இந்த பக்கம் கொண்டு வந்தவர்கள்.

*****

அதன்பின் பளிச்சென வெளிச்சம் பாய்ச்சி, ஒளி வெள்ளம். புது கவிதை புறப்பட தொடங்கிவிட்டது. பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், போன்றோர் ஏழைகளுக்காக, பாட்டாளி மக்களுக்காக பாடியதில் மரபின் சிரமத்தை குறைத்தனர். மேத்தாவின் கண்ணீர்ப்பூக்கள், மீராவின் ஊசிகள், கனவுகள் கற்பனைகள் காகிதங்கள், அப்துல் ரகுமானின் பால்வீதி போன்ற கவிதைத் தொகுப்புகள் எல்லாம் 'கமர்சியல் ஹிட்'. கலாப்பிரியா, வண்ணதாசன், ஞானக்கூத்தன், ஆத்மநாம், விக்கிரமாதித்தன்.... என தனி படை நடைப் போட்டது.

வாலி, வைரமுத்துகள் எல்லாம் சினிமாவில் ஒதுங்கி அவ்வப்போது புதுகவிதை வளர்த்தார்கள். கண்ணதாசன் குறிப்பிட தகுந்த இடத்தில் இருந்தார். 'இயேசு காவியம்' மரபில் எழுதினார். 'தூங்கும் குழந்தையை' புதுகவிதையில் வைத்தார். இத்தனை எளிமை படுத்தி விஷயம் சுலபம் ஆனவுடன் பலபேர் வாத்சல்யத்துடன் கவிதை துணைப் பிடித்தனர்.

விளைவு - கவிதை! முன்பு சொன்னது போல் கவிதை வெள்ளம்.
கவிதையும் கழிசடைகளும் கலந்துவிட்டன.

இதில் நல்ல கவிதை எது?

'நல்ல' என்பதில்தான் நமக்கு கருத்து பேதம். எது கவிதை, எது கவிதையல்ல - இனம் பிரித்துவிட்டால் போதும், முடிந்தது வேலை. பிரிப்பதில் சிரமம். முயற்சித்து பார்கலாம்.

நல்ல கவிதையில் ஈடுபாடு வருவது கொஞ்சம் கஷ்டம். ஆரம்பத்தில் புரியாது. பழக பழக வரும். யாப்பு வகைகள் தெரியாமல் மரபில் நுழையாதீர்கள். எதுகை என்றால் என்ன? மோனை என்றால் என்ன? எழுத்து, சீர், அடி, பாட்டு என பள்ளியில் வருவது போலவேதான். அவசரப்பட்டு ஒதுக்கிவிடாதீர்கள். உரை வைத்து படியுங்கள். மிக மிக சுவாரஸ்யமானது. பரிட்சை பயம் இல்லாமல் படித்தால் 'கடி'க்காது.

குறள், புறநானூறு தவறவே விடாதீர்கள். Must. முடிந்தால் குறுந்தொகை. என்னிடம் குட்டி பட்டியல் இருக்கிறது. நம் இலக்கியங்கள், அதிர்ஷடமான கனத்தை கொடுக்க இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கிறது. நிஜ அதிர்ஷடம்.


மரபின் பரிச்சயம் வந்தவுடன் புதுகவிதைக்கு நகருங்கள். இங்கு யாப்பு பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. புது கவிதையில் எழுதப்பட்ட வரிகளைவிட எழுதாத வரிகளைத் கண்டுபிடிக்க வேண்டும். கவிதை புரியவில்லை என்றால் பரவாயில்லை, கவலைப்படாதீர்கள். அவரவர் தளங்களில் இருந்து மெல்ல மெல்ல உயரலாம். புதுகவிதையின் சௌகரியம் இது.

நல்ல கவிதை அடையாளம் கண்டுபிடிக்க சுலப வழிகள்:

1. மரபில் நல்ல கவிதைகள் அனைத்தும் வந்துவிட்டன. இலக்கியங்களை உரையுடன் படியுங்கள். சீர், தளை எல்லாம் கவிதானுபவத்தை பாதிக்கும்.  பாதித்தால் நீக்கிவிடுங்கள்.

2. எந்த கவிதையிலும் 'ஓ', 'அட', எல்லாவற்றுக்கும் ஆச்சரிய குறி என எழுதியிருந்தால் ஒதுக்கிவிடுங்கள். கவிதைக்கு இந்த 'அட', 'ஓ'வெல்லாம் தேவையில்லை. வெளிப்படையாகத் தேவையில்லை.

3. வர்ணனைகள். அருமையான வர்ணனைகளுக்கு பாரதிதாசன் உத்திரவாதம். பெண், இயற்கை... என்றால் நகம் வெட்டி, முடி திருத்த போய்விடுங்கள். உபயோகமான வேலை நிறைய இருக்கிறது.

4. நல்ல கவிதை என்பது அரிதான மலர் போல. நல்ல கவிதையை ஒப்புக்கொள்வதில் அவசரப்படாதீர்கள். நீங்கள் நினைத்ததைச் சொல்லி வியக்க வைக்கும். உங்கள் மனசை 'ஏதோ' செய்யும். அந்த 'ஏதோ' உங்களுக்கு மட்டும் தெரிந்ததாய் கூட இருக்கலாம். Seize the moment. நல்ல கவிதை என்பது ஒருவிதமான சொந்த உன்னதம்.



5. வாழ்த்து கவிதை, அரசியல் தலைவரை, அடுத்த வீட்டு பெண்ணை சொல்வதெல்லாம் கவிதை இல்லை. சினிமாவில், எதிர்பாராத வரிகளை கவிதை என்று குழப்பிக் கொள்ளும் வாய்பிருக்கிறது. நல்ல கவிதை வரிகள் வந்துவிடுவது மிக மிக தற்செயலே. மற்றது -மாயைகள்.

6. நல்ல கவிதைக்கு பாஷை கிடையாது. காலம் கிடையாது. கவிஞன் தனக்கு கிடைத்த உன்னத கணத்தை உங்களுக்கும் வார்த்தைகளால் அளிக்கிறான். பாசாங்கு இல்லை. Robert Frost எழுதிய Stopping by woods on a snowy Evening உதாரணம்.

7. கவிதை என்பது தனிப்பட்ட அனுபவம். நல்ல கவிதையில் எல்லாவற்றிலும் பொதுவான அம்சமாக 'உண்மை' என்பது இருக்கிறது.

8. புத்திசாலிதனமான வரிகள் கவிதை கிடையாது. குழம்பாதீர்கள். 'பெண் கேட்டு வந்தார்கள், நாய் குரைத்தது.... கொள்ளையர் என்று அதற்கும் தெரிந்துவிட்டது'. வரிகளில் மயங்காதீர்கள்.

9. நல்ல கவிதைகளைப் படியுங்கள். தேடிப் பிடியுங்கள். நம்மைவிட சிறப்பாக ஒருவர் எழுதியிருக்க கூடும். நிறைய படியுங்கள். நல்ல கவிதைகளை கண்டுக்கொள்ள தெரிந்தவுடன், எழுதி பார்க்கும் ஆசை போய்விடும். அசாத்திய துணிச்சல் வராது.

அப்படி கைவிட்டவன் தான் நான்!


ஒரு ஸ்பானிஷ் கவிதை

நான் இறந்து போனாலும்
என் பால்கனி
திறந்தே இருக்கட்டும்

அதோ அந்தச் சிறுவன்
ஆரஞ்சுப் பழங்களைச்
சுவைத்துக் கொண்டிருக்கிறான்.
(என் மாடத்திலிருந்து
என்னால் அவனைப் பார்க்க முடியும்.)


அதோ அந்த விவசாயி
கோதுமை அறுவடையில்
ஆழ்ந்து போயிருக்கிறார்.

நான் இறந்து போனாலும்
என் பால்கனி
திறந்தே இருக்கட்டும்.
                                                   - லோர்கா

*****

ஏன் என்று உங்களிடம் தேடுங்கள். கவிதையை கொஞ்சம் யோசியுங்கள்.
 
வாழ்த்துகள்!

.