Sunday, August 29, 2010

ட்விட்டர் - ஓர் பார்வை



அறிமுகம்

ட்விட்டர் - இந்த வார்த்தை இணைய உலகத்தில் மிக பிரபலம் அடைந்திருக்கிறது. இந்த நாளில் இணையத்தின் சூப்பர் ஸ்டாராகத் தொடர்வது - சந்தேகம் இன்றி டிவிட்டர் (www.twitter.com).

புறாவிடு தூதாகத் தொடங்கிய தகவல் தொடர்பு, கடிதம், தந்தி, ஃபேக்ஸ், இ-மெயில் என முன்னேறி இப்போது சிட்டுகுருவியில் வந்து நிற்கிறது. எழுச்சியும், வீரியமும் கிடைக்க சிட்டுகுருவிகளை (!) லேகியத்திற்காக வம்பிழுத்துக் கொண்டிருந்த நமக்கு - இது புதுசு. பகலில் கண் சிமிட்டும் வெளிச்ச மத்தாப்பாய் - பல தொழில்நுட்ப நண்பர்களுக்கே தெரிந்தும் தெரியாமலும் இருக்கிறது. ஆதலால், டிவிட்டர் என்றால் என்னவென்று முதலில் பார்த்துவிடலாம். இது வேற வகை 'சிட்டுகுருவி'.

"நமது கருத்தை, சொல்ல விரும்புவதைச் சிக்கன வார்த்தைகளில் இணையத்தில் தெரிவிப்பது".

நறுக்கென்று 140 எழுத்துக்களில் "இப்போது என்ன செய்கிறீர்கள் ?" என்பதை ட்விட்டரில் தட்டினால் அதை ஆயிரக்கணக்கானவர்களுக்கு நொடிகளில் கொண்டுசேர்க்கும் இந்த இணைய தொழில் நுட்பத்தை பல பிரபலங்கள் பயன்படுத்துகிறார்கள். தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி கண்ட பிரபலம் பராக் ஒபாமா!

அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது துணை அதிபர் வேட்பாளரை அறிமுகப்படுத்துவது அங்கே மிகப் பெரிய மீடியா நிகழ்வு. 'செனட்டர் ஜோ ஃபைடனை துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கிறேன்!' என ட்விட்டிவிட்டு சில மணி நேரங்களுக்குப் பின்தான் மீடியாவுக்கே அறிவித்தார் ஒபாமா. (நம் ஊரில் சினிமா பிரபலங்கள்தான் உள்ளனர்!.)

டிவிட்டரில் யார் வேண்டுமானாலும், எவருடைய டிவிட்டர் பக்கத்தையும் படிக்கலாம். இதில் இரண்டு விஷயம். 1.நீங்கள் படிக்கும் பக்கத்தின் சொந்தக்காரர் உங்களுக்குத் தேவையான தகவல்களை டிவிட்டியபடி இருந்தால், நீங்கள் அவரைப் பின்பற்றலாம் (Following). நீங்கள் பின்பற்றுபவரின் டிவிட்டுகள் உங்களது டிவிட்டர் பக்கத்தில் பிரசுரமாகும். 2.உங்களை யாராவது பின்பற்றினால் (Followers) அவர்களது டிவிட்டர் பக்கங்களில் உங்களது டிவிட்டுகள் பிரசுரமாகும். பை தி வே, Twitting என்பது வினைச்சொல்லாகவும், Tweet என்பது பொருட்சொல்லாகவும் பயன்படுத்தப் படுகிறது. Tweet என்றால் 'குட்டியான தகவல் பிட்' என்றால், Twitting என்பது மேற்படி பிட்டுகளை அனுப்புவது.

சரி, ஓரளவிற்கு புரிந்திருக்கும். இனி....

*****
கண நேர இணையம்
பாயின்ட் A-யில் இருந்து பாயின்ட் B-க்குத் தகவலைக் கொண்டு சேர்த்த தொழில் நுட்பங்களை ஒதுக்கிவிட்டு, சமநேரத்தில் (real time) அப்டேட் செய்ய முடிகிற தொழில் நுட்பங்களுக்குத்தான் இனி எதிர்காலம் என்கிறார்கள். (நன்றி அண்டன்). ஓவர்நைட் சக்சஸ் ஆன டிவிட்டர் இதற்கு நல்ல உதாரணம்.

எப்படி...? புரியும்படி பார்க்கலாம். அதற்கு முன் ஒரு குட்டியூண்டு Flash back.

இணையத்தை இரு மாபெரும் யுகங்களாகப் பிரிக்கிறார்கள். முதல் யுகமான இணையம் 1.0-ல் தகவல்கள் (data) வலைத்தளப் பக்கங்களில் கொடுக்கப்பட, நீங்கள் அவற்றைப் படித்துத் தகவல்களை எடுத்துக்கொண்டீர்கள் (Static). கிடைத்த தகவலை வைத்து எதிர்க் கேள்வி கேட்பதோ, பின்னூட்டம் இடுவதோ, கலந்துரையாடுவதோ சாத்தியமில்லை. கிட்டத்தட்ட நூலகம் சென்று புத்தகம் படிப்பது போன்ற ஒரு சாதாரண மீடியாவாகவே இருந்த இணையம் 2001-ல் புது வடிவம் எடுக்க ஆரம்பித்தது.

இணையம் 2.0 என அழைக்கப்படும் இந்தப் புதிய யுகம், எல்லோரையும் ஒருங்கிணைக்க ஆரம்பித்தது. வலைப்பதிவுக் கலாசாரம் தொடங்கப்பட்டது; விக்கிகள் முளைத்தன; மின்னல் வேகத்தில் பின்னூட்டங்கள் இடப்பட்டன; (Dynamic). சமூக நெட்வொர்க்கிங் தளங்களில் படங்களும், வீடியோக்களும் அப்லோட் செய்யப்பட்டு நண்பர்களுடன் பகிரப்பட்டன. கீ-போர்டு தட்டுவதையும் தாண்டி அலைபேசியிலிருந்து நொடிக்கு நொடி ட்விட்டத் தொடங்கினர்.

Flash back ஒவர். இதில், முன்பு சொன்ன கண நேர இணையம் (Real Time Web) எங்கே, எப்படி வருகிறது ?

சொல்கிறேன்.

தேடல் இயந்திர (Google, Yahoo) நிறுவனங்களுக்கும், சமூக வலைதள நிறுவனங்களுக்கும் (Facebook,etc) ஆதார சுருதி விளம்பரங்கள்தான். ஆனால், இந்த இரண்டு தரப்பினரும் பின்பற்றும் டெக்னிக்குகள் வித்தியாசமானவை.

தேடல் இயந்திரங்களின் மிகப் பெரிய சவால், லேட்டஸ்டான தகவல்களைத் தேடல் முடிவுகளில் முதல் பக்கத்தில் கொண்டுவருவது. கூகுளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு, கூகுள் சாதாரண வலைதளங்களைவிட, வலைப்பதிவுப் (Blogs) பக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தெரிய வரும். வலைதளங்களைவிட வலைப்பதிவர்கள் தகவல்களை வேகமாகப் பிரசுரிக்க முடியும் என்பதால் இந்த முக்கியத்துவம். திறம்பட வேகமாகத் தொகுக்கும் திறன் மட்டுமல்லாது, பொருத்தமான தளங்களை ஒரு தேடல் தளம் அடையாளம் காட்டுவது பயனீட்டாளர்களுக்கும் முக்கியம். அவர்களுக்குப் பொருத்தமான (Targeted Advertisements) விளம்பரங்களை அளிக்க விரும்பும் விளம்பர ஸ்பான்சர்களுக்கும் முக்கியம்.

ஆனால், சமூக வலைதள நிறுவனங்களில் (Social Network) இருந்து பயனீட்டாளர்களும், விளம்பரதாரர்களும் எதிர்பார்ப்பது சற்றே வித்தியாசமானது. தனது நட்பு வட்டாரத்தின் (Social graph) செயல்பாடுகளை உடனுக்குடன், தெரிந்துகொள்வதை பயனீட்டாளர் விரும்புகிறார் என்றால், இந்த நட்பு வட்டாரத்தின் மத்தியில் நடக்கும் உரையாடல்களையும், பரிமாறிக்கொள்ளப்படும் புகைப்படம், வீடியோக்களையும் புரிந்துகொண்டு, அதற்குத் தகுந்த பொருத்தமான விளம்பரங்களைக் காட்ட விளம்பரதாரர் விரும்புகிறார்.

ஓர் எளிய உதாரணம்...,

'இன்னும் இரண்டு வாரத்தில் விடுமுறைக்கு லண்டன் செல்கிறேன்!' என்று நட்புவட்டத்துக்கு நீங்கள் ஃபேஸ்புக்கில் எழுதிவைத்தால், லண்டனில் வாழும் உங்கள் நண்பர்கள் சில ஆலோசனைகளைக் கொடுக்கக்கூடும். அது உங்களுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கும். ஆனால், விளம்பரதாரர்களுக்கோ, உங்களது வலைப்பக்கத்தில் லண்டனில் தங்கும் விடுதி, வாடகை கார் போன்றவற்றின் விளம்பரங்களைக் காட்டுவது பயனுள்ளது. ஆக, நடைபெறும் தகவல் பரிமாற்றத்தை எவ்வளவு விறுவிறுப்பாக கிரகித்துக்கொள்ள முடியுமோ, அந்த சமூகத் தளங்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். அதனால்தான், ஃபேஸ்புக் நிறுவனம் இந்தத் தளத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

பல லட்சம் பேர் இப்படித் தங்கள் மனதில் இருப்பதை எழுதியபடி இருப்பதைக் கிரகித்தால், மக்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் வெளிப்படும். என்ன விஷயங்கள் முக்கியமாகக் கருதப்படுகிறது என்ற உண்மை வெளிப்படும். இதில், கண நேர இணையத்தின் நோக்கம், நட்பு வட்டாரத்தின் உரையாடல் மட்டுமல்ல... இணையத்தின் பயனீட்டாளர் எவருடைய தகவல்களையும், அந்த நொடிப் பொழுதில் தேடித் தர முடிகிற இந்த Concept தான் டிவிட்டரின் Secret of Success !. கண நேர இணையத்தில் இருக்கும் தகவல்கள் ரொம்பவே முக்கியம். உதாரணமாக, திரைப்படம் ஒன்றை ரிலீஸ் செய்த அன்றே, அந்தப் படம் வெற்றியடையுமா, தோல்வி அடையுமா என்பதை டிவிட்டுகளைத் தேடிக் கண்டறிய முடியும்.

நான் சொல்ல வந்தது இதைத்தான். இதன் சாத்தியங்கள் யோசித்தால், ஆச்சரியங்களைக் கொடுக்கும். பல மில்லியன் டாலரையே கொடுத்திருக்கிறது - கொட்டிக் கொண்டும் இருக்கிறது !.

*****
என் ட்விட்டர் முகவரி @JSurendhar

சில ட்விட்டர் சுவாரஸ்யங்களும்,



மேலும் அறிய
 
 
 

சில வலைத்தள சேவைகள்

பிரபலமான டிவிட்டர் உரலிகளைத் தொகுத்து அளிக்கும் தளம்: www.tweetmeme.com
டிவிட்டரில் உங்களைப் பின்பற்ற (followers) ஆட்களைப் பிடிக்க வேண்டுமா? மல்டி லெவல் மார்க்கெட்டிங் ஸ்டைலில் உதவுகிறது - www.twitproquo.com/

*****

கடைசியாக ஒர் வார்த்தை, இந்தக் களத்தில் குதித்திருக்கிறது கூகுளும்தான். கூகுள் வெளியிட்டிருக்கும் கண நேர இணையத்தின் பெயர் பஸ்ஸ் (http://www.google.com/buzz/).

இன்னென்றும் இருக்கிறது.

அதன் பெயர் "டம்ளர்" !.