Sunday, May 30, 2010

ஐந்து நட்சத்திர 'தயிர் சாதம்'


இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட போனதில்லை. சமிபத்தில் ஐந்து நட்சத்திர விடுதி செல்லும் வாய்ப்பு கிட்டியது, நண்பன் ரூபத்தில்.

பார்ட்டி என்றாலே இரவுதான். நான் போய் சேர்ந்தபோது மெல்லிசை நிகழ்ச்சிகள் முடிந்திருந்தன. எனக்கு முன்பே நண்பர் அங்கு காத்திருந்தார். சரியான நேரத்திற்கு வந்திருப்பதாகவும் இனிமேல் தான் 'மற்ற சங்கதிகள்' என்றபடி நிகழ்ச்சி நடந்த மைய பகுதியை அடைந்தோம்.

மூன்று ஹால்கள் பிரிக்கப்பட்டிருந்தன. மெல்லிசை நிகழ்ச்சிகள் காண இருந்த இடம். கண் சிமிட்டும் கலர் கலர் வெளிச்சத்தில், அதிரும் இசைக்கிடையில் நடனமாட ஒரு இடம். சாப்பிடும் இடம்.

மிக மிக நவீன உடையில் யுவதிகளும் இளைஞர்களும் மற்றும் பிரபலங்கள் வந்திருந்தவர்களாலும் நிரம்பி இருந்தது. சொல்லி வைத்தார் போல் அத்தனை பெண்களும் ஒல்லியாக சிவப்பாக. ஆங்கிலமும் இந்தியும் உருதும் தமிழும் பேசிக்கொண்டிருந்தார்கள். இளைஞர்கள் இடுப்புக்கு கீழ் இறங்கிய ஜீன்ஸும், ஷேவிங்கில் இருந்து பாதி தாடியிலும் வந்திருந்தார்கள். குளித்து தலை துவட்டியவுடன்  வந்தவர்களுள் (!)  ஒருவன் மட்டும் கூம்பு வடிவில் தலை வாரியிருந்தான். பெரும்பாலானோர் முடி வெட்டவும், தலை வாரவும் மறுத்திருந்தனர். தெரிந்த கடைகள் விடுமுறை விட்டிருக்கலாம். மற்றபடி நாகரிகமாக நடந்துக் கொண்டனர்.

Soft drinks ஆக ஆப்பிள் ஜுஸ் ஆரஞ்ச் ஜுஸ் மற்றும் பியர் வகைகள் ஒரு புறம். Hot drinks ஆக Scotch whisky rum என மற்றொறு புறம் விநியோகிக்கப்பட்டது. இடையிடையே சேவகர்கள் snacks-ஐ கையில் ஏந்தி நடந்தார்கள். கையில் கோப்பையுடன் இருப்பதே கௌரவமென அறிவுறுத்தப்பட்டு, Soft drinks-ஐ நிரப்பிக் கொண்டேன்.

ஷாம்பெய்ன் குலுக்கி நுரை தெளித்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டார்கள். ஹை ஹீல்ஸில் தத்தி தத்தி வந்து நிஜ நடனமாடினார்கள். நாசூக்காய் கைபிடித்து அழைத்து வந்தவன் அழகாய் இருந்தான். வேறொறுவன் மைக் பிடித்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தான்.

ஆண்களும் பெண்களும்  கட்டியே அன்பை வெளிப்படுத்தினார்கள். விடை பெறும்போது அணைத்து முத்தமிட்டார்கள். அணைத்து முத்தமிட்டதில் மனதளவில் தொந்திரவுக்கு உள்ளானர் சிலர். நாம் உட்பட.

வந்திருந்த பெண்களையும் சூழல்லையும் பார்த்ததில் ஒன்று நிச்சயம். இது வேறு உலகம். இவர்கள் வெயிலில் அலைபவர்கள் அல்ல, கடைகளில் பேரம் பேச மாட்டார்கள், poor என்பதன் அர்த்தம் மட்டும் தெரியும், நாகரிகமாய் நடந்துக் கொள்ளவும் பழகவும் சிறு வயதிலே பழக்கப்பட்டவர்கள். ஏக சிக்கனமாய் உடையணிந்திருந்தாலும் ஆண்களை எங்கே நிறுத்துவது என்று கற்றவர்கள். நிறுத்தும் பெண்களிடமும் நெருக்கம் காட்டத் தெரிந்தவர்கள். ஆங்கிலத்தில் சிரிப்பவர்கள், நகம் வெட்டவும் முடி திருத்தவும் சில நூறுகளில் காரியத்தை முடிப்பவர்கள். வாசனையாய் இருப்பார்கள். நிச்சயம் படித்தவர்கள்.

தமிழ் தெரியுமா என்று கேட்டால் 'தமிழில் எத்தனை poem படிச்சிருக்கேன் தெரியுமா. ஜுஜு கூட சொல்லும்' என்பார்கள். ஜுஜு என்பது அவர்கள் வளர்க்கும் நாயா அல்லது பாய் ஃப்ரெண்ட்டா என்று குழம்பக் கூடாது.

******

தட்டு நிறைய வகை வகையான உணவுகள். ஆடு, கோழி, பிரியாணி - நான் வெஜ் வகையறா. ஃப்ரூட் சாலட், ஐஸ் கிரீம், குலோப் ஜாமுன், வெஜ் உணவு என வெரைட்டி விருந்து. ஏற்கனவே நிறைந்திருந்ததில், தயிர் சாதம் வைத்துக்கொண்டேன். அருமையான ருசி. சாப்பிட்ட விருந்து பிளேட் கணக்கு. உண்மையாய் என்று தெரியவில்லை, ஒரு பிளேட்டின் விலை சற்றேறகுறைய நாலு இலக்கத்தில் சொன்னார்கள்.

தயிர் சாதத்தை தங்கம் போல பாவித்தேன். ஒரு கிராம் தங்கத்தின் விலைக்கு கூப்பிடும் தூரத்தில் இருந்தது. பய பக்தியுடன் கீழே வைத்துவிட்டேன்.

Rest Room-ல் டி வி வைத்திருக்கிறார்கள். சிறிய சைஸ். ஆறு பேர் நிற்கும் இடத்தில் இரண்டு டிவி. டிவியில் 'ஷேர் மார்க்கெட் அலசலில் கருத்து சொல்லிக்கொண்டிருந்தார்' நிபுணர் ஒருவர்.

அண்டா குடித்துவிட்டு இயற்கை அழைத்தவர்களுக்கு 'செய்தி' மழை. auto flush வசதி. சுடு தண்ணீர் பைப், சாதா தண்ணீர் பைப், கை கழுவ, முகம் கழுவ, கையை காய வைக்க, ஷு துடைக்க, முகம் பார்க்க என ஒளிரும் டெக்னாலஜி வெளிச்சத்தில் பணம் ஜொலித்தது.

'உள்ளே' கழுவுவதற்கு பதிலாக டிஷ்யு பேப்பரை வைத்திருக்கிறார்கள். இத்தாலி மேக். அதன் நோக்கம் தவிர்த்து, கை மட்டும் துடைத்துக் கொண்டேன். நல்லவேளை!

******

நண்பர் கேட்டார், 'எப்படிபா இருந்தது?'

'பெரிய மனிதர்கள் அடிக்கடி வந்து போகும் இடம், ஒரு சொம்பு வாங்கி வைத்திருக்கலாம்'.

Wednesday, May 26, 2010

ஆஸ்திரேலிய திரைப்படவிழா (2010)




ஆஸ்திரேலிய திரைப்படவிழா - மே 26 முதல் மே 31 வரை 6 நாள்களுக்கு திரைப்பட விழா நடைபெறுகிறது. சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்தியப்பட வர்த்தகசபையில். 

சர்வதேச அளவில் பரவலான பாராட்டுகளைப் பெற்ற  'லுக் போத் வேஸ்', 'த டிஷ்', 'டென் கேனோஸ்', 'ரேடியன்ஸ்', 'லேன் டனா' உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.

Monday, May 24, 2010

'தென்றல்' புரட்டியது


இந்த கவிதை புரிகிறதா பாருங்கள்...

அது என்ன

ஆரம்பத்தில்
அது என்னவென்றே தெரியவில்லை
இரண்டாய், மூன்றாய், நான்காய்.,
பல்கிப் பெருகியது
கடைசியில் பார்த்தால்
அது நான் என்று சொன்னார்கள்.
கடவுளே!
**********

இரண்டு வாரங்களுக்கு முன்பு லேண்ட் மார்க் சென்றிருந்தேன்.

தமிழ் புத்தகங்களின் வரிசைகளை வேறு பக்கம் மாற்றி வைத்திருந்தார்கள். மொத்தமாக பார்க்கும் போது தமிழ் புத்தகங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவே எனக்கு தோன்றும். இப்பொழுதும் அப்படியே.

அந்த வாரத்தின் அல்லது மாதத்தின் அதிகம் விற்பனையான (Best Sellers), புதிய வரவுகள் (New Arrivals) என பட்டியலிட்டு வைத்திருப்பார்கள். எத்தனை முறை தடவி, புரட்டி, கலைத்து நேரம் கடத்தினாலும் விரோதமாய் பார்க்கமாட்டார்கள். பொறுமையாய் தேடலாம்.

ஒத்துழைக்கும் ஊழியர்கள், ரூம் ஃப்ரெஷ்னர், உறுத்தாத மெல்லிய சங்கீதம், ஏசியின் குளு குளு என சுகானுபவம் கொடுக்க முயல்கிறார்கள்.

புத்தகம், மியூசிக், படங்கள், பெண்கள், குழந்தைகள், வீட்டு அலுவலக உபயோகங்கள் என செக் ஷன் வாரியா பிரிந்திருக்கும். பார் கோட் முறையில் விலையை வருடி உடனடியாக பில் கொடுப்பார்கள். கட்டிய பிறகு காசில்லாமல் புன்னகைத்துவிட்டு வெளி வர வழி கேட்டால் காட்டுவார்கள். தமிழ் நாட்டின் மற்ற சிறு நகரங்களிலும் யாராவது franchise எடுக்கலாம். (குறிச்சுக்கோங்கப்பா !).

ஒரு முறை வந்தவர்கள் நிச்சயம் மறு முறை வருவார்கள், வர வேண்டும். அதில் அடங்கியிருக்கிறது அவர்களின் 'சக்ஸஸ் ஃபார்முலா'.


எதேச்சையாக தேடிய போது கண்ட 'நீல இறகு' புத்தகம் - எழுதியது தென்றல். இயற்கையோடும் வாழ்வின் எளிய அழகுகளோடும் தன்னைப் பிணைத்துக் கொள்பவை தென்றலின் கவிதைகள் என்கிறது பின் அட்டை. உண்மைதான். உதாரணம் -

ஓர் அடி முட்டாள்
அயோக்கியன்
அதி புத்திசாலி
ஒரு ஞானி
நால்வரும் குளத்தில் குதித்தனர்
ஒரே மாதிரிதான்
வட்ட வட்டமாக வந்தது.

இதை சற்றே பார்ப்போம். 
ஞானி முட்டாள் என்பதெல்லாம் நமக்குள் தான். மனிதர்களுக்குள். இயற்கைக்கு நாம் அனைவரும் சமம். ஒன்றுதான். கெட்டவன் மேதாவி என்ற பாகுபாடெல்லாம் இல்லை. பேதம் கிடையாது. யார் குதித்தாலும் ஒரே மாதிரிதான். நீ பெரியவன் என்பதால் எதுவும் மாறிவிடுவதில்லை. 

அட.....! ஆமாம் என்று நீங்கள் ஆமோதித்தால் கவிதை உங்களிடம் கை குலுக்கியாகிவிட்டது. 

விஷயம் அவ்வளவுதான்.

கிட்டதட்ட ஜென்னிற்கு அருகில் வரும் இந்த கவிதையே எனக்கு போதுமானதாக இருந்தது. வாங்கி வந்துவிட்டேன்.


முதலில் சொன்னதற்கான விளக்கம்: குழந்தையாய் மாறிய நுட்பம் விளக்கும் கவிதை.


(உயிர்மை பதிப்பகம், அபிராமபுரம், சென்னை - 18, 044-24993448)

Saturday, May 22, 2010

'அன்புடன்' எழுதியவர்கள்


அனுராதா ரமணன் மறைந்துவிட்டார்.

மலர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 10 நாட்களுக்கும் மேலாக இருந்திருக்கிறார். எத்தனையோ சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள் எழுதிப் புகழ் பெற்றவர்.
 

நான் இவரது எழுத்துக்களை படித்தது வார இதழ்களில். தனி நபர்களின் பிரச்சனைகளுக்கு நடைமுறை சாத்தியங்களில் பதில் அளிப்பார். சில வினோத பிரச்சனைகளை பார்த்து நான் மலைத்தது உண்டு. அதற்கு இவரது பாணியில் தெளிவான பதில் இருக்கும். வாரமலரில் வந்துகொண்டிருக்கும்  'அன்புடன் அந்தரங்கம்' பெண்களிடம் அவ்வளவு பிரசித்தம்.

இவரது பல நாவல்கள் திரைப்படமாக வந்திருக்கிறது. 20-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். தன்னால் முடிந்த உதவிகளை அடுத்தவருக்குச் செய்து வந்த அவர், இறந்த பிறகும் தன் கண்களைத் தானமாக வழங்கி, இருவருக்கு ஒளியூட்டியிருக்கிறார்.

இவரது ரசிகர் ஒருவர் இப்படி பகிர்ந்திருக்கிறார். பார்க்க அற்புதமனுஷி அனுராத ரமணன் க்ளிக்கவும்.
 
************
 
28.4.2010 அன்று எழுதப்பட்ட இந்தக் கடிதம் தமிழ்நாட்டின் எல்லாப் பத்திரிகைகளாலும் நிராகரிக்கப்பட்டு மலையாள வாரப் பத்திரிகையான கலா கௌமுதியில் கவர் ஸ்டோரியாக வெளிவந்துள்ளது.
 
 
 

ஏ.ஆர். ரஹ்மானுக்கு சாரு நிவேதிதா எழுதியது. உங்கள் கருத்தென்ன?  படித்துவிட்டு சொல்லவும்.

Thursday, May 20, 2010

மழை

கோடையில் திடீர் மழை. மழைக்கு இதமாய் கவிதை(கள்).....


                                                
            
                                          அவன் எப்போதும்
                                          இங்கே தான் இருப்பான்.
                                          எத்தனையோ ஆண்டுகளாய்
                                          கடந்து போகிறேன் அவனை.
                                          கண்கள் சந்திக்கும்போது
                                          அரைப் புன்னகையைப்
                                          பகிர்ந்து கொண்டிருக்கிறோம்
                                          அவன் இல்லாது போன
                                          தினத்திலிருந்து எல்லோரையும்
                                          கேட்கிறேன், அவன் யாரென்று.

                                                                                       -கனிமொழி

Wednesday, May 19, 2010

மோதிரக்கையால் குட்டுப்பட்ட ரஹ்மான்


போன சனி கிழமை செந்தமிழ் மாநாட்டு மைய பாடல் அடங்கிய குறுந்தகட்டை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். அதை தூர்தர்ஷனில் லைவ்வாக போட்டார்கள்.

'என் ரேடியோ நிகழ்ச்சிகளுக்கு அப்போது டி.ஆர்.பாப்பாதான் இசையமைத்துக் கொண்டிருந்தார்.​ ஒரு ஒளிப்பதிவுக்காக சென்றிருந்த போது ஒன்பது வயது சிறுவன் கீ போர்டு பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்தான். ​ 'இவன் யார்' என்றதும் டி.ஆர்.​ பாப்பா 'இந்த பையன்தான் உங்கள் பாட்டுக்கு இசையமைக்கப் போகிறார்' என்றார்.

​'உலக அளவில் என் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.​ இவனை போய் என் பாடலுக்கு இசையமைக்க வைத்திருக்கிறாய்' என்றேன்.​ பின் அந்த சிறுவனிடம் நெருங்கி 'என் பாடல்களையெல்லாம் கேட்டிருக்கியா' என்றேன்.​ 'உங்கள் பாடல்கள் அனைத்தும் எனக்கு அத்துப்படி' என்றான்.​ உடனே 'உலகம் பிறந்தது எனக்காக....​ ஓடும் நதிகளும் எனக்காக....' என நான் பாட எம்.எஸ்.வி.​ செய்யாத விஷயங்களையெல்லாம் அவன் கீ போர்டில் செய்து என்னை பிரமிக்க வைத்து விட்டான்.​

அன்று என் விரலில் கிடந்த வைர மோதிரத்தால் அவன் தலையில் குட்டு வைத்தேன்.​ அந்த குட்டுதான் இப்போது ரஹ்மானை இவ்வளவு உயரத்தில் வைத்திருக்கிறது'.​

'அதை அவர் பேசும்போது குறிப்பிட்டிருக்க வேண்டும், நன்றி மறக்கக் கூடாது'.

தன் கடந்த கால நினைவுகளை இப்படி பகிர்ந்துக் கொண்டார் பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்.

முதல்வர் முன்னிலையில் பொதுவாக சிரித்து வைத்தார் ரஹ்மான்.

டி.எம்.எஸ் பாடுவதில் வல்லவர். மேடை பேச்சில் அல்ல. இந்த மாதிரி சந்தர்பங்களில் எழுதி வைத்து படித்து விடுவது சிறந்தது. முன்னரே பிழை திருத்த வழியாவது உள்ளது.

                                                                *******

அப்புறம் தூர்தர்ஷனுக்கு ஒரு வார்த்தை, துல்லியமான ஒளிப்பதிவு. அதில் குறையில்லை. எடிட்டிங்கில் இன்னும் கவனம் தேவை. ஒவ்வொருவராக வந்து பரிசு வாங்கும் போதும் அவர்களை காட்டாமல் சம்பந்தம் இல்லாமல் ஜனங்களை காட்டிக் கொண்டிருந்தார்கள். அப்பப்போ, கேமர நிலைக் கொள்ளமல் ஆடுகிறது. இந்த சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்திவிட்டால் மட்டும் போதாது.

யானை பலம் உள்ள மீடியாவை கையில் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். தயிர் சாதம் மட்டும் வைப்பேன் என்றால் எப்படி. உங்களுக்கு பின்னாடி வந்தவங்க எல்லாம் கியர் மாற்றி போய் கொண்டிருக்கிறார்கள். ரூபாய் வாங்கிக்கொண்டு ஆசிர்வதித்தது போதும். விலங்கை அவிழ்த்து விடுங்கள். வயசான பாகன்கள் ஓய்வெடுக்கட்டும். யானையின் பலம் அம்பாரி சுமப்பதும் பிச்சை எடுப்பதில் மட்டும் இல்லை.

2010 லும் சன்னோ, சாதா டிவியோ நுழையாத கிராமங்கள் உள்ளன.

நம்புங்கள்.

இன்னமும் தூர்தர்சன் மட்டும் பார்க்கும் குடும்பங்களை எனக்கு தெரியும்.

இருந்தும் எங்கோ பிழை, யார் யாரெல்லாமோ காரணம். எதுவெல்லாமோ தடை. எவ்வளவு சக்தி வாய்ந்த மீடியா. ம்ம்..... ஆதங்கமாக இருக்கிறது.

Saturday, May 15, 2010

விஜய் 50 நம் பார்வை

விஜய்யின் 50 வது படம் வெளிவந்தது அனைவருக்கும் தெரியும்.

படம் ரிலீஸ் ஆன இரவு தீவிர ரசிகனிடம் போன் போட்டு அபிப்ராயம் கேட்டேன்.

"எங்க தலைவரோட அடுத்த படத்தை பார்க்கதானே போறிங்க, அப்ப பாருங்க சும்மா கல்லக்குவாரு".

"டேய்.. நான் இன்னைக்கு ரிலீஸ்ஸான படத்தை பத்திக் கேக்குறேன்?"

"அதான் சொல்றோமில்ல.. அடுத்த படத்துல பாருங்கன்னு..."

"புரிஞ்சுருச்சு"

"எங்க தலைவரு என்ன சொன்னாரு, எந்த எக்ஸ்பொக்டேஷனும் இல்லாம வாங்கனு தானே, அப்புறம் ஏன் அவரை ஓவரா சொல்லறீங்க"

"நான் ஒன்னும் சொல்லலையேடா"

"அவரு ஃபார்முலா படி நடிச்சுட்டு வாராரு.. அப்படிதான் இருக்கும்"

"எப்படி?"

"உங்களுக்கெல்லாம் சொன்னா புரியாதுங்க, போய் பார்த்தான் தெரியும்"

"இல்ல இப்பவே புரியுது"
                                                          *****

அப்புறம், விகடன்ல 'விஜய்க்கு பகிரங்கக் கடிதம்' வருகிற அளவுக்கு விஷயம் ஆகிப் போச்சு.

அந்த கடிதத்தோட சாரம்சம்.

'விஷ்ணு', 'ரசிகன்', 'கோயம்புத்தூர் மாப்ளே' போன்ற படங்கள் மக்கள் மத்தியில் உங்களைப்பற்றி உருவாக்கி வைத்திருந்த எண்ணங்களைச் சட்டென்று மாற்றிப்போட்டது 'பூவே உனக்காக'. நீங்கள் நடித்த 'காதலுக்கு மரியாதை' மக்கள் மத்தியில் உங்களுக்கு மரியாதையான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. 'பிரியமுடன்' படத்தில் ஆன்ட்டி ஹீரோவாக சவாலான வேடத்தையும் சாதித்துக் காட்டினீர்கள். 'லவ் டுடே' படத்தில் பாசமுள்ள மகனாக மிரட்டி எடுத்தீர்கள். 'துள்ளாத மனமும் துள்ளும்', 'குஷி' போன்ற படங்கள் மூலம் பலதரப்பட்ட வயதினரும் உங்கள் ரசிகர்கள் ஆனார்கள்.

'ஃப்ரெண்ட்ஸ்' படத்தில் நீங்கள் பட்டையைக் கிளப்பிய காமெடியை இன்றும் சேனல்களில் பார்க்கும்போது சிரிப்பு பொத்துக்கொள்ளும். ஆனால், திடீரென்று 'பத்ரி' தொடங்கி 'புதிய கீதை' வரை தடம் மாறினீர்கள். தொடர் தோல்விகள். ஆனாலும், 'திருமலை' உங்கள் திருப்புமுனைதாங்ணா!

பல்லு விளக்குவதற்குக்கூட பஞ்ச் டயலாக் பேசுவது, காத்துல பறந்து கரணம் அடிப்பது, அம்புட்டுத்தான்... ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துவிட்டீர்கள்!

உங்கள் நினைப்பு சரிதான். நீங்கள் அடித்த 'கில்லி', நடித்த 'திருப்பாச்சி', வெடித்த 'சிவகாசி' எல்லாமே வசூலில் சாதனை படைத்தன. அதில் இருந்துதான் படம் ஹிட் அடிக்க 'பஞ்ச் டயலாக்கும், பான்பராக் ரவியுமே போதும்' என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். இங்கு இருந்துதான் உங்களையும் அறியாமல் எங்களை ஏமாற்ற ஆரம்பித்தீர்கள். இந்த இடத்தில் 'கில்லி'யைப்பற்றி இன்னும் சொல்ல வேண்டும். அதில் ஆக்ஷன், காமெடி, காதல் எல்லாமே பக்காவாக இருந்தது. 'அப்படிப் போடு... போடு' என்று தமிழ்நாடே ஆடித் தீர்த்தது. அநேகமாக நீங்கள் நடித்து எல்லோருக்கும் பிடித்த கடைசிப் படம் என்ற அந்தஸ்து தற்போது வரை 'கில்லி' வசம்தான்.

நீங்கள் நடிக்க வந்தபோதும், அதற்குப் பின்பும் வந்த விக்ரம், சூர்யா, தனுஷ், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி என்று பலரும் வித்தியாசமான கதைகளில், வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துத் தங்கள் திறமையை நிரூபித்தனர். ஆனால், நீங்கள் குறைந்தபட்சம் ஹேர் ஸ்டைலைக்கூட மாற்ற ரெடியாக இல்லை. (சத்தியமாச் சொல்றேண்ணா... 'வேட்டைக்காரன்' போஸ்டருக்கும் 'சுறா' போஸ்டருக்கும் அனுஷ்கா, தமன்னாவை வைத்துத்தான் நான் வித்தியாசம் கண்டுபிடிக்கிறேன்!) இந்தப் பிடிவாதம் கெட்டப்பில் மட்டும்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், கதையைக்கூட மாற்ற மாட்டேன் என்று அடம்பிடித்தால் எப்படிங்ணா?

விஜய் படம் என்றாலே, சடை முடி வில்லன்கள், பஞ்ச் டயலாக், ஸ்லோ மோஷனில் நடப்பது, பில்ட்-அப் கொடுப்பது என்று ஆகிவிட்டதே.

உங்களைப்பற்றியும், உங்கள் படங்களைப்பற்றியும் கிண்டல் அடித்து எஸ்.எம்.எஸ்கள் கொட்டிக் குவிகின்றன என்பது உங்களுக்கும் தெரியும்.

உங்க படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள் இருந்தாலும், மத்தவங்க உங்களைத்தான் பெரிய வில்லன்னு சொல்றாங்க!

இப்படி ஒரு ரசிகனோட பார்வைல ஆதங்கத்தை கொட்டுற மாதிரி இருக்கும்.

இதுக்கும் மேல தனியா என்னனு விமர்சனம் வேற சொல்ல? அட்லீஸ்ட் அடுத்த படத்துல நாம் விமர்சனம் சொல்ற அளவுக்காவது நடிச்சா சரி.

Sunday, May 9, 2010

ஒரு கவிதை, ஒரு கதை, ஒரு நிஜம்

அவசரங்களில் நாம் கடந்துவிட்ட எத்தனையோ மனிதர் போல்தான் இவர் இருக்கிறார்.

'புத்தம் சரணம் கச்சாமி' என
பூசை செய்து வணங்கிவிட்டு
ரத்தம் மரணம் துச்சாதனம் செய்யவா
நித்தம் அவனை வணங்குகின்றாய்
நெஞ்சு வெடிக்குதடா ஈழா

என்பதுதான் 1983-ல் நடந்த ஈழப் படுகொலையை குறித்த, பிரசுரமான முதல் கவிதை.

இவரது பேட்டியை சமீபத்தில் படித்தேன். இனிய உதயத்தில் வந்திருக்கிறது.

நவீன தமிழ்க்கவிதையில் கவனத்தில் கொள்ளத்தக்க பல கவிதைகளுக்குச் சொந்தக்காரர் பால்நிலவன். மரபுக் கவிதையில் ஆரம்பித்த இவரது கவிதை பயணம். ஒரு கட்டத்தில் சிறுகதையில் முழுமையாக மையம் கொண்டது.

 இவரது கதை ஒன்று, 'கோவில் ஜமுக்காளம்'.

"ஊருக்குப் பொதுவாக உள்ள கோவில் ஜமுக்காளத்தை எல்லார் வீட்டு விசேஷத்திற்கும் மாட்டுவண்டியில் எடுத்துச் செல்லும் மண்ணாங்கட்டி, அடுத்தவாரம் நடைபெற இருக்கும் தன் வீட்டு விசேஷத்திற்கு வீட்டில் தங்கையும் அம்மாவும் கேட்கச் சென்னார்களே என்று கேட்கிறான். அவன் இப்படி கேட்டதை அறிந்து அந்தப் பண்ணையார் கோவில் திருவிழாவில் ஊர் மக்கள் மத்தியில் திட்டி வேலையை விட்டே துரத்திவிடுகிறார். திருவிழா இரவன்று, அந்த கோவிலில் நடைபெறும் பாட்டு கச்சேரி கேட்க வசதியாக கோவில் ஜமுக்காளம் விரிப்பட்டு மக்கள் அமர்கிறார்கள். அதில் அமர விரும்பிய ஒரு ஏழைச் சிறுவனையும் கோயில் குருக்கள் அடித்து விரட்டுகிறார்கள். பிறகு மடித்து வைக்காமலேயே கலைந்த வாக்கில் ஓரமாக எடுத்துப் போட்டுவிட்டு எல்லோரும் போய்விடுகிறார்கள்.

கோவில் ஜமுக்காளம்தான் தன் வேதனையான இந்தக் கதையைச் சொல்லி வருகிறது. உழைக்கும் வர்க்கம் உட்காரத் தகுதியற்ற எனக்கெதற்கு இந்த வாழ்வு என ஏங்கித் தவிக்க, திருவிழா வளாகத்தில் நடைபெறும் வாணவேடிக்கையிலிருந்து வந்து விழுந்த பட்டாசு ஒன்றின் நெருப்புப் பட்டு, 'இதோ நான் சந்தோஷமாகச் சாம்பலாகிறேன்' என அக்கதை முடியும்."

அடிப்படையில் இவர் ஒரு நிலச்சுவாந்தார் குடும்பத்தில் பிறந்தவர். இந்த அடிப்படையில் கதையைப் பார்க்கும் போது, நம்மை வேறு தளத்திற்கு கூட்டிச் சென்று யோசிக்க வைக்கிறார்.

இவரது மூன்று சிறுகதை தொகுப்புக்களும்; 'ரயில் வரும் வரை' (2003) என்ற கவிதைத் தொகுப்பும் வெளியாகி உள்ளன. விழுப்புரம் மாவடத்தில் 21 வயது கிராம வாழ்க்கைக்குப் பிறகு, வேலை நிமித்தமாக சென்னையில் வசித்து வருபவர்.

வாழ்க்கை துரத்தியதில், 1995 ஆகஸ்டிலிருந்து 2003 நவம்பர் வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி என் பி எஸ் சி) அலுவலகத்தில் எட்டரை ஆண்டுகள் தினக்கூலியாகப் பணியாற்றினார். நாள் ஒன்றுக்கு 51 ரூபாய் என்று மாதத்தில் 22 நாள்தான் வேலை இருக்கும்.
அதிலும் பொங்கல், பூசை என்று விடுமுறைகள் வரிசையாக வந்துவிட்டால் 18, 19 நாட்கள்தான். இது கிராம வாழ்க்கையில் அல்ல. அறை வாடகை கொடுக்கவும், சரியாகச் சாப்பிடவும் முடியாமல் அல்லாடும் மாநகர வாழ்க்கையில்தான்.

தமிழக அரசின் துறை ஒன்றில், தட்டச்சர் பணியும் செய்திருக்கிறார். 1990 முதல் 1993 வரை மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வேலை பறிக்கப்பட்டது. பணி நீக்க உத்தரவிற்குப் பின்னால் இவர் எழுதிய 'தட்டச்சு நிமிடங்கள்' கதை காரணமாக இருந்தது. சென்னை தலைமை அலுவலகச் சூழல் பற்றியது.
இந்த வருத்ததில் அடிக்கடி உடல் நலம் குன்றி சில மாதங்களில் மாரடைப்பில் அம்மாவின் மரணம். பொதுவாக பெற்ற தாயின் இயற்கையான மரணத்தையே எந்த உயிராலும் தாங்க முடியாது. செல்ல மகனின் நிலை கண்டு அம்மாவின் மரணம் இருந்தால்.... சட்டென்று வீழ்ந்த ஸ்தல விருட்சம்போல் வாழ்க்கைப் பாதை சிதறுண்டு போனது.

இப்போது அருமை நண்பர்களால், பல்வேறு ஊடகங்களில் பணியாற்றுகிறார். உலக சினிமா, மொழிபெயர்ப்பு என உற்ச்சாகமாக இயங்கி வருகிறார்.

அவசரங்களில் நாம் கடந்துவிட்ட எத்தனையோ மனிதர் போல்தான் இவர் இருக்கிறார்.

இனி, அப்படி கடந்துவிடாதீர்கள்.

Friday, May 7, 2010

பார்த்து போங்ங்....க

(படத்தை க்ளிக் செய்யவும்)


அப்ப்பாஆஆஆ.........
இந்த வாரம் அதிர்ச்சி அடைய வைத்த விளம்பர படம்.

Thursday, May 6, 2010

கவிதையே தெரியுமா

பொன்னாடை

முன் மேடை
சம்பிரதாயங்கள்
நீண்டபடி இருக்க
ஒப்பனை அறையில்
உறங்குகிறது
ஆடவந்த குழந்தை!

செல்வேந்திரனை எனக்கு கவிதைகளில் தான் இன்று வரை பரிச்சயம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவரது கவிதைகள் விகடனில் வெளிவந்த போது நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். இவரது கவிதை தொகுப்பு ஏதேனும் வெளி வந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள்.

எனக்கு பிடித்த கவிதை 'விஷய ஞானம்'.

Tuesday, May 4, 2010

விதிபடி வரும்


நாம் வங்கியில் பணம் போடுகிறோம், ஆண்டு கூட்டுவட்டி (Annual compound interest) தருவதாக வைத்து கொள்வோம், எத்தனை ஆண்டுகளில் அது இரட்டிப்பாகும்? கணக்கிட, ஒரு சுலப வழி சொல்லித் தருகிறேன்.

The Rule of 72 (விதி 72)

எழுபத்தி இரண்டை வட்டியால் வகுத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணம், வட்டித் தொகை 10% என்று வைத்துக்கொள்வோம்,

72 / 10 = 7.2 வருடம்
நாம் போட்ட தொகை 7 வருடத்தில் இரட்டிப்பாகி விடும்.

இதுவே வட்டி எட்டு சதவீதம் என்றால் நமது பணம் இரட்டிப்பாக
72 / 8 = 9 வருடம் ஆகும்.

இன்னொரு வழி, நாம் போடும் பணம் 15 வருடத்தில் இரட்டிப்பாக வேண்டுமென்றால் எத்தனை சதவீத வட்டி வேண்டும்.
72 / 15 = 4.8%

எல்லாம் சரி, பணம் போட முதல் இல்லை என்கிறீர்களா?
விதி (இதை விளக்குவதாய் இல்லை).

டெக்னாலஜி - நீ கேளேன்!

கடுமையான பணி.


அலுவலகங்களில் வேலை செய்யும் அனைவரும் கட்டாயம் சொல்லும் வார்த்தைதான் மேலே சொன்னது.

என் விஷயத்தில் கடினமான பணி என்பதையும் சேர்த்து கொள்ளலாம். நிறைய பேர் மெனக்கெட்டு உழைப்பாங்க (hard workers) ஆனால் இவ்வளவு கஷ்டபட தேவையில்லை. நமக்கு குறித்த நேரத்திற்குள் வேலை முடியனும். அதுக்கு smart work (புத்திசாலித்தனம்) கொடுத்தா போதும் என்றார், ஒரு முறை என் மேலாளர். எவ்வளவு ஸ்மார்ட்டா வேலை செய்யறீங்களோ அதுலதான் உங்களுக்கு Appreciation இருக்கு. இருக்கும்.

நிஜம் தான்.

கொஞ்சம் யோசிச்சா நாமும் தினப்படி வாழ்க்கையில் இந்த ஸ்மார்ட்னெஸ்ஸை கொண்டுவரலாம். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை நமக்கு சாதகமாக எப்படி பயன்படுத்தலாம்? இதைப்பத்தி ஒரு சிறப்பு பார்வை பார்க்கலாம்.

காரணம், இளைஞர்கள் நிரம்பியிருக்கும் இந்தியா. தொழில் நுட்ப துறையில் பணி புரியாவிட்டாலும், தொழில் நுட்ப வளர்ச்சிகளை நுகர விரும்பும் நபர்களாகத்தான் நாம் இருக்கோம். அதுல எப்படி ஸ்மார்ட்னெஸ் கொண்டு வருவது ஒவ்வொன்னா பார்க்கலாம்.


1. Learn Computer - கம்ப்யூட்டர் கற்றுக் கொள்வது. கடிதம் எழுதுவது, கணக்குகள் போடுவது என தொடங்கி போக போக நிறைய கற்று கொள்ளலாம். இது ஒரு ஆரம்பம். பரிச்சயமான பிறகு இதன் பயன் புரிய ஆரம்பிக்கும். நாம் நினைப்பது போல் கம்ப்யூட்டர் கற்பது அவ்வளவு கடினமல்ல.

2. Secure your PC - கணினி இருந்தால் சொந்தமாகவே Internet Security உள்ள Antivirus வாங்கி இன்ஸ்டால் செய்து விடுவது நல்லது. இணையத்திலும் பாதுகாப்பாக உலவலாம், வைரஸ் அட்டாக்கில் இருந்து தப்பிக்கலாம். இதை செய்யாததால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகம். முதலில் தகவல் பறிபோகும் அபாயம். கணினி சரியாக இயங்க மறுக்கும், சரி செய்ய பணம் செலவாகும். மன உளைச்சல். முன்னெச்சரிக்கையாக போடப்படும் தடுப்பூசி மருந்து போல. ஒரு பாதுகாப்பு.

3. Talk over Computer - கணினி இருந்தால் இணையத்திலே பேசிக்கொள்ளலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் Voice Over Internet Protocol (VOIP) உள்ள சாப்ட்வேரை டெளன்லோட் செய்து கொள்வது. இது இலவசமாக கிடைக்கிறது. உம்: skype, GTalk , etc வெளிநாட்டிலோ ஊரிலோ இருக்கும் நண்பர்கள், உறவினர்களுக்காக பயன் படும். வீடியோ வசதி இருக்கிறது. பார்த்து கொண்டே பேசலாம். இந்த சேவைக்கு பணம் கிடையாது. நாம் பேசுவதில் சலிக்காதவர்கள். கட்டாயம் தேவைபடும்.

4. Ride don't drive - அதாவது நம்மிடம் இருக்கும் பைக்கோ காரோ உபயோகிப்பதை குறைத்து பொது வாகனங்களை முடிந்தபோது (பஸ் ரயில்)பயன்படுத்தி பார்க்கலாம். சமயத்திற்கு தகுந்தாற் போல் இரண்டையும் கலந்து உபயேகிக்கலாம்.

5. Save Energy - காற்றாலை, தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிப்பது நம்மை போன்றவர்களுக்கு சாத்தியமில்லை. வீடுகளில் எனர்ஜி சேவர் மின்விளக்குகள் வாங்கலாம். சொந்த வீடு இருந்தால், தேவையெனில் சோலார் வாட்டர் ஹீட்டர் வாங்கலாம். கடைகளில் குறிப்பிட்டு கேட்டால், தந்துவிடுவார்கள். காசு கொஞ்சம் போல அதிகம். நாம் செய்ய வேண்டியது எல்லாம், உபயோகமில்லாத போது எந்தவொரு மின்சாதனத்தையும் அணைத்து விடுவது. அவ்வளவுதான், சுலபம்.

6. Banking - debit card - வங்கிகளில் Net Banking என்றொரு வசதி இருக்கிறது. வீட்டில் இருந்தவாறே பண பரிவர்த்தனைகள் செய்யலாம். திருட்டு பயமோ, கால் கடுக்க நிற்க வேண்டிய அவஸ்தையோ இல்லை. debit card என்றால் என்னவென்று வங்கியில் கேட்டால் சொல்லி விடுவார்கள். இந்த இரண்டிற்கும் தனித்தனியே User id (உபயோகிப்பாளர் முகவரி/எண்), password (கடவுச்சொல்) என்று இரண்டு தருவார்கள். அதை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். உபயோகிக்க எளிதாக வடிவமைக்கப் பட்டு இருக்கிறது. Net Banking மூலமாக தான் நான் வீட்டு வாடகை கொடுக்கிறேன், வீட்டிற்கு பணம் அனுபலாம், பெறலாம், கரண்ட் பில், இண்டர்நெட் பில் எதையும் செலுத்தலாம். இதனைக் கற்றுகொண்டால் அத்துணை சௌகரியம்.

7. Mobile - அறிமுகம் தேவையில்லாத அதிக எண்ணிக்கையில் பயன்படும் தொழில் நுட்ப சாதனம். மற்ற சௌகரியங்களை கணக்கில் கொண்டால் இது அபாரமானது. உதாரணத்திற்கு, வங்கியில் phone banking வசதி தருகிறார்கள். இலவசம். நம் கணக்கில் பணம் எடுத்தலோ போட்டாலோ உடனே நமது மொபைலுக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். இதன் பயன் நான் விளக்க தேவையில்லை. மொபைலின் மாற்று உபயோகங்கள் விரிவடைந்து கொண்டே போகிறது. நாம் கற்றுகொள்ள நிறைய இருக்கிறது.

8. Surf - இணையத்தை எவ்வாறு உபயோகித்து கொள்வது? தகவல் தேட, ரயில் பஸ் டிக்கெட் ரிசர்வ் பண்ண, சினிமா டிக்கெட் வாங்க, பாட்டு கேட்க, படம் பார்க்க.... ஏன் இணையத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது வரை நிறைய செய்யலாம். அதற்கு இணையத்தில் உலவ கற்றுகொள்ள வேண்டும். தேட கற்றுகொள்ள வேண்டும். Google ஒரு நல்ல ஆரம்பம்.

9. Get a tech career - எந்த துறை தேர்ந்தெடுத்திருந்தாலும் கணினி தொடர்போடு இருங்கள். துறை சார்ந்த கணினி தொடர்பு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

10. Remove dump: நம்மிடம் இருக்கும் தேவையில்லாத குப்பைகளை தூக்கி எறியுங்கள். தொகுத்து வைக்க கற்றுகொண்டால் போதும், தேவையானதை தேடிக்கொண்டிருக்க தேவையில்லை. சட்டென கிடைத்துவிடும். நேரம் மிச்சம்.