Monday, July 12, 2010

சொல்லியிருக்கலாம்...சொல்லிவிட்டேன்!


நான் அரை மூச்சாய் [இன்னும் முழு மூச்சாய் ஆரம்பிக்கவில்லை] புத்தகம் படிக்க ஆரம்பித்ததே 2 வருடங்களுக்கு முன் தான். அதற்கு முன் குமுதம், விகடன், அதுவும் எப்போதாவது கையில் மாட்டும் போது. 5 வருடம் கல்லூரியில் கழித்தேன். அந்த மாலை நேரங்களை என்ன செய்தேன் என்று இன்று கவலைப் படுகிறேன். அப்போவே ஒழுங்காய் படித்திருந்தால் இன்னைக்கு தில்லா…  -பிரதீப் குமார் (வலைப் பதிவர்)

மேலே சொன்ன 'பிரதீப் குமார்' என்ற பெயருக்குப் பதிலாக நம்மில் பல பெயரை போட்டுக் கொள்ளலாம். மேலே சொன்ன வாசகம் அவரது பதிவொன்றில் சொன்னது.

நபருக்கு நபர் வருடமும், சூழலலும் மாறுபடலாம். ஆதாரமான அந்த 'அடடா' நம் எல்லோருக்கும் பொது!.

அடடா... நாம் செய்யாமல் விட்டு விட்டோமே,  கொஞ்சம் யோசிச்சிருக்கலாம், அடடா... அப்படி பண்ணியிருக்கலாம் - என அந்த 'அங்கலாய்ப்பு' அனுபவம் நிச்சயம் நம்மில் இருக்கிறது. விதி விலக்கில்லாமல்.

*****

நான் கொஞ்சமே கொஞ்சம் போல் படிக்கும் காலத்தில் (பாடம் தவிர்த்து) படிக்காமல் போனேனே என்று அங்கலாய்க்க அவசியமில்லாமல் தேடித் தேடிப் படித்திருக்கிறேன். செமஸ்டர் நடக்கும் இடையில், இரவில் படித்திருக்கிறேன்.(கல்கியின் சிவகாமியின் சபதம்). பஸ் பயணங்களில், இரயில் பயணங்களில், காத்திருக்கும் வேளைகளில், ஏன் ஊருக்கு போய் பாட்டியை பார்க்கும் வேளைகளில் என விவஸ்த்தையில்லாமல், நேரங்காலம் பார்க்காமல் படித்திருக்கிறேன். கல்கி, சாண்டில்யன், லா.ச.ர, மௌனி, ஜி.நாகராஜன், நா.பிச்சமூர்த்தி, கலைஞர் மு.கருணாநிதி, ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன், சிவசங்கரி, அனுராத ரமணன், சுபா, ராஜேஷ்குமார், பி.கே.பி, கண்ணதாசன், வைரமுத்து, வாலி என நீளும் பட்டியலின் எழுத்துகளை வெகு அருகில் வைத்து ரசித்திருக்கிறேன். உறவாடியிருக்கிறேன்.

வகை என பிரிக்காமல் சொன்னதைப் படித்தேன். மனம் போனபோக்கில் புத்தகங்களை தேர்ந்தெடுப்பேன். இன்னது என பாகுபடுத்தாத 'பொது' பிரிவிலேயே இருந்திருக்கிறேன்.

உலக சினிமாக்களை மாதம் ஒரு முறை போட்டுக் காட்டுவார்கள். சந்தாதாரர் ஆக ரூபாய் 50 அல்லது 60 வசூலிப்பார்கள். சந்தா கட்டி உறுப்பினர் ஆகி படம் பார்த்திருக்கிறேன். படம் முடிந்தவுடன் அதைப் பற்றி விவாதிப்பார்கள். படம் பார்த்து அவர்கள் சொல்லும் கருத்தையே என் கருத்தாக எடுத்துக் கொண்டு வெளி வருவேன். படம் பார்த்து புரியாத எனக்கு அவர்கள் விவாதிக்கும் விஷயமும் பாதிதான் விளங்கும். அப்புறம் நான் எங்கு அந்த விவாதத்தில் பங்கெடுத்துக் கொள்வது!. இதெல்லாம் 2003 முந்தைய திருச்சியில். நான் பார்த்த தமிழ் படங்கள், ஊர் சுற்றும் என் ஆர்வம், நண்பர்கள் எல்லாம் புத்தகம் படிக்கும் ஆசைக்கு சமமாகவே இருந்ததால், நான் ஒரேயடியாக புத்தக புழுவாகவும் ஆகவில்லை. எதைதான் உருப்படியாகச் செய்தேன்?!.

அந்த சமயத்தில் நான் செய்து பார்க்க துணியாதது 'காதல்' மட்டுமே. பெண்களை கண்ணில் பார்பதோடு சரி... அதற்கும் காரணம் இருந்தது. எந்த பெண்ணும் என்னை 'மோகித்து' காத்திருக்கவில்லை. ஆத்து நீச்சல் (சுமாராக!) மட்டும் தெரிந்த எனக்கு 'காதல்' கடலில் குதிக்கும் தைரியமும் வாய்த்திருக்கவில்லை. நான் பார்த்த பெண்களுக்கு பின்புலமும் கூடவே சகோதரனும் இருந்ததால் என் 'உடல் பத்திரம்' கருதி வாளாவி இருந்து விட்டேன். என்னுடன் தவறி பழகியவர்களும் சகோதர பாசத்தைக் காட்டியவர்கள். இதில் என் நல்ல நண்பர்களை சேர்க்கவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று சிலரிடம் சிரித்து மட்டும் வைத்திருந்தேன். 'ஃபிக்செட் டெபாஸிட்'!. என் டெபாஸிடை களவாடிய 'களவாணி'களே அதிகம். தீராத வேலைக்கிடையில் செமஸ்டர் அறிவித்து, புண்ணியம் கட்டிக் கொண்ட பல்கலை கழகத்தின் நிர்வாகத்திற்கு என் 'காதல்' தேவை புரியவில்லை. ச்சே.... ?! என் பார்டர் தாண்டாத காதலும் தேறவில்லை. அதனால், பெண்களை பார்பதோடு சரி!

இதனால் எல்லாம் என் பாட படிப்பு தனியாக பாதித்தாக சொல்ல முடியவில்லை. ஒழுங்காகவே பாஸ் செய்து வெளிவந்தேன். (பட்ட கஷ்டம் நமக்குதான் தெரியும்!.)
*****

அந்த காலகட்டத்தில்தான், நான் முதன் முதல் படித்த முழு மொழிபெயர்ப்பு நாவல் 'பட்டாம்பூச்சி'.

ட்டாம்பூச்சி - ஹேன்றி ஷாரியர் எழுதிய Papillon என்னும் பிரெஞ்சு நூலின் ஆங்கிலம் வழியான தமிழ் மொழிபெயர்ப்பு. 800 பக்கங்களைத் தாண்டும் இந் நூல். மயிர்கூச்செறிதல் என்று சொல்வார்களே - அந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டேன்.

நூலின் ஆசிரியர் தனது இருபத்தைந்தாவது வயதில் கொலைக் குற்றமொன்றிற்காக ( செய்யாத கொலையென்கிறார் ) ஆயுட் தண்டனை பெற்று அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறு கோடிக்கு, பிரெஞ்சுக் கயானாவில் இருந்த கொடிய தீவாந்தர சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப் படுகிறார்.

அவர் ஒவ்வொரு சிறையாகத் தப்பிப்பதும், பிடிபடுவதும், அடைபடுவதுமாக 13 வருட காலத்தை, அவர் தனது விடுதலை மீதான இலக்கில் மீண்டும் மீண்டும் செலவிடுகிறார். கொடிய தீவுச் சிறைகளில் இருந்து புதைமணலிலும், ஒட்டைக்கட்டுமரங்களிலும் தப்பிப்பதுவும், மீண்டும் அகப்பட்டு இருண்ட தனிமைச்சிறைகளில் அடைக்கப்படுவதும், அதிலிருந்து வெளியேற தொடர்ந்து முயற்சிப்பதுமாக விரிகிறது கதை.

தமிழின் மிகச் சிறந்த மொழி பெயர்ப்பு நூலாகக் இதைக் சொல்லலாம். Must read வரிசையில் இந்த புத்தகத்திற்கு என்றும் இடமுண்டு. பெரும்பாலான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இக்கதை ஓர் உண்மை சம்பவம்!. உலக புகழ் பெற இது மட்டும் காரணம் அல்ல. மனிதனின் சுதந்ததிர வேட்கை உலக பொது!. மனிதனின் அந்த சுய விருப்ப 'விடுதலை'. நான் யாருக்கும் அடிபணிய தேவையில்லை என்ற உற்சாகம். அந்த உணர்வு கொடுக்கும் உற்சாகமே! இதை உலக இலக்கியத்தில், உலக மக்களிடம் புகழ் பெற காரணம்.

தமிழில் பெயர்த்தவர் ரா.கி.ரங்கராஜன். ( 'சிவாஜி' பட சூட்டிங்கில் ரஜினிகாந்திற்கு நடிகர் விவேக் பரிசளித்தது இந்த நூலைத்தான்! )

ரா.கி. ரங்கராஜன்: 05.10.1927 ல் கும்பகோணத்தில் பிறந்தார். தன் 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புகள் சின்னத்திரையிலும் இடம்பெற்றுள்ளன. எழுத்துலகின் மேதாவி, பிஷ்மர் என்று போற்றபடுபவர்.

இந்த புத்தகத்தை வாங்க விரும்புபவர்கள், வரும் அடுத்த புத்தக கண்காட்சியில் வாங்கிப் படியுங்கள். குறித்து வைத்துக் கொள்ளலாம். அவசரப்படுபவர்கள் இப்போதே தேடி, ஆரம்பிக்கலாம்.
இது படமாகவும் வந்திருக்கிறது. அதன் ட்ரைலர்.




"ஓசைப்படாமல் சாதனை படைத்த தமிழர்களில் ஒருவரான எனது இனிய நண்பர். ரா.கி. ரங்கராஜன் ஒரு கர்மயோகி. குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு, நேசம், வெள்ளைச்சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு - இவை இவருடைய சிறப்புகள்"

- சுஜாதா

நீங்களும் உங்கள் நண்பர்களிடம் இந்த பத்தியின் தலைப்பைச் சொல்லி பேச்சை ஆரம்பித்து விடுங்கள்.

அடடா... இதை முன்பே சொல்லியிருக்க வேண்டுமோ!

6 comments:

cheena (சீனா) said...

அன்பின் சுரேந்தர்

கொசு வத்தி சுத்த வச்சிட்டீங்க - அக்கால கட்டத்தில் பட்டாம்பூச்சி படித்தது நினைவிற்கு வருகிறது. அருமையான நாவல் - மீண்டும் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும்.

நல்வாழ்த்துகள் சுரேந்தர்
நட்புடன் சீனா

ஸ்ரீராம். said...

நல்ல பகிர்வு... பட்டாம்பூச்சி என்று குமுதத்தில் அது தொடராக வந்த போதே படித்திருக்குறேன். பைண்ட் செய்யப் பட்டு வீட்டில் இருந்தது. சோகம்... என்னைப் போலவே சில கரையான்களுக்கும் அந்தப் புத்தகம் பிடித்துப் போனது.

Anonymous said...

படிக்கும் பழக்கத்தை பற்றிய உங்கள் கருத்து சரி. நல்ல வேளை எங்கள் வீட்டில் விகடனும், குமுதமும் முதலில் இருந்தே வாங்கீனார்கள்... ஆனால் என்ன, நல்ல இலக்கிய நாவல்கள் வாசிக்கத்தான் என்னால் இயல வில்லை.

உங்கள் காதல் பற்றி என் போன்றவர்களுக்கு தெரியாது.. எதாவது முன்னமே எழுதி இருந்தால் சுட்டுங்கள்.

Thangavel K said...

அந்த சமயத்தில் நான் செய்து பார்க்க துணியாதது 'காதல்' மட்டுமே... Good.. Aanal piragu thuninthu vittirgal polirikkirathu.. (Sagodara pinpulam illayo..)

Surendhar said...

@சீனா - அன்பருக்கு, உங்களைப் போலவே எனக்கும் தோன்றியதால் - இந்த பதிவு. நீங்க படிச்சிருக்கீங்கனு சொல்றது சந்தோஷமா இருக்கு. நல்ல வேளை நான் ஏதும் உளறலைனு சொல்றதுக்கு சாட்சியா இருக்கீங்க. தொடர்ந்து, உங்க கருத்தைச் சொல்லுங்க.

@ஸ்ரீராம் - நண்பருக்கு, நன்றிங்க. 80களின் பிற்பகுதியில் வந்ததாக சொல்ல கேள்விப் பட்டிருக்கிறேன். உங்களின் 'சோகத்தை' நிரம்ப ரசிக்கும் படி சொல்லியிருக்கிறீர்கள் ! உங்கள் கருத்துகளை எப்போதும் எதிர்பார்க்கிறேன்.

@குருவுக்கு, அதனால் என்னங்க? இப்ப பகிர்ந்துகிட்டு படிச்சுட்டா போச்சு!
'காதல்' பற்றி தெரிஞ்சுக்க கேட்கறீங்களா? இதில் ஏதும் உள் நோக்கம் இல்லையே. :-)

@தங்கவேல், உண்மை தெரிஞ்சவங்க பக்கத்தில் இருக்கும் போது, என்னால ஏதும் சொல்ல முடியலை. 'காதல்' கதைய விடுங்க. நான் சொன்ன கதையை படிச்சுட்டு
அல்லது அந்த படத்தை பார்த்திட்டு உங்க அபிப்பராயத்தை நம்மோடு பகிர்ந்துக்குங்க. உங்க சுவாரஸ்யத்தை எதிர்ப்பார்த்திருக்கிறேன்.

Anonymous said...

நம்ப மாட்டீங்களே.. நெஜமாவே எனக்கு தெரியாது.. ;)