Monday, March 21, 2011

நேற்று ஜப்பானில் நடந்தது...


***ஜப்பான் உணர்த்தும் பாடம்***

ஜப்பான் தனக்கு ஏற்பட்டிருக்கும் பேரழிவைத் துணிவுடன் எதிர்கொண்டுள்ளது என்பது உண்மை.

ஆனால், மின்வெட்டு, உணவுப் பற்றாக்குறை, எல்லோரையும் பயமுறுத்தும் அணுக் கதிர்வீச்சு அபாயம் என்று நிலைகுலைந்து போயிருக்கிறது. தலைநகரான டோக்கியோ உள்ளிட்ட நகரங்களிலிருந்து வெளியேறி 500 மைல்களுக்கு அப்பாலுள்ள நகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள் பலர்.

சுனாமியால் ஆயிரக்கணக்கானோர் பலியாகிவிட்டனர். இதுவரை சுமார் 20 ஆயிரம் பேர். சுனாமியால் ஃபுகுஷிமா நகரிலுள்ள அணு மின் உற்பத்தி நிலையம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. நிலையத்திலிருந்து 4 அணு உலைகளும் வெடித்துவிட்டன. இதனால் அங்கு கதிரியக்கப் பாதிப்பு ஏற்பட்டது. அணு மின் நிலையத்தில் மின்சாரம் இல்லாததால் அங்குள்ள குளிர்விப்பாங்கள்(Coolers) செயலிழந்துவிட்டன. தண்ணீர் சூழ்ந்திருப்பதால் அங்கிருக்கும் ஜெனரேட்டர்களையும் இயக்க முடியவில்லை. இதன் காரணமாகவே அணு உலைகள் வெடித்தன.

கடல் நீரைக் கொண்டு அணு உலைகளை குளிர்விக்க நடவடிக்கைகள் தீவிரப் படுத்தியும், இயக்க பொறியாளர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

*****

இது ஜப்பானின், இன்றைய சூழல். அணு மின் நிலையங்கள் மனிதனின் விஞ்ஞான வளர்ச்சிக்கு எடுத்துக் காட்டாக வர்ணிக்கப்பட்டு வந்தன. ஆனால் அணுசக்தியின் அபாயங்கள் எத்தகையவை என்பதை ஜப்பானைப் பார்க்கும்போதுதான் உணர முடிகிறது*.


இந் நிலையில் நம் நாட்டு பாதுகாப்பு பணிகள் எப்படி இருக்கின்றன என்பது தான் நூறு மில்லியன் டாலர் கேள்வி?

பதில் பார்போம்...

அணு உலை குறித்து பாதுகாப்பு அவசியம் என்று பிரதமர் கருத்து கூறியிருக்கிறார். இதை ஒப்புக்காகச் சொன்னதாகவே கருத்து கணிப்பில் (73.92%) மக்கள் நினைக்கிறார்கள்.


நிபுணர்களின் கருத்தும், இதை ஒட்டியதாகவே இருக்கிறது. உதாரணமாக - 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சுந்தர்ராஜன்,

''தமிழகத்தில், கல்பாக்கத்தில் ஓர் அணு உலை செயல்பட்டு வருகிறது. இந்த மார்ச் 31-ம் தேதி முதல் கூடங்குளத்திலும் அணு உலையைத் திறக்கிறார்கள். இதுவரை நாட்டில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களில் இருந்தும் பெறப்படும் மின்சாரத்தின் அளவு வெறும் 4,385 மெகாவாட்தான். ஆனால், நமக்கான தேவையோ 1,70,000 மெகாவாட்! எனவே, 'பல்லாயிரம் கோடிகள் செலவழித்து குறைந்த அளவிலான மின்​​சாரம் ஏன் தயாரிக்க வேண்டும்?’ என்பதுதான் முதல் கேள்வி.


மரபு சாரா எரிசக்தி மூலம் அல்லது சூரிய ஒளியைப் பயன்​படுத்தியோ நாம் மொத்த நாட்டுக்கும் மின்​சாரம் பெற்றுவிட முடியும் என்கிற​பட்சத்தில், அதற்கான நடவடிக்கைகளை ஏன் எடுக்கத் தயங்குகிறது நம் அரசு?

கடந்த 2008-ல் அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில், உலக நாடுகளில் இருந்து யுரேனியத்தையும், அணு உலைகளையும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

நம் நாட்டிலேயே 1,20,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக யுரேனியம் இருக்கும்போது, இறக்குமதி ஏன்? இந்த ஒப்பந்தத்தின் மூலம் 2020-ல் சுமார் 5 லட்சம் கோடி மதிப்பில் வியாபாரம் நிகழ்த்தப்பட இருக்கிறது. மேலும், உபயோகமான யுரேனியத்தை மீண்டும் உபயோகிக்கும்போது, அதில் இருந்து வெளிப்படும் கழிவுகளும் அதிகம் பாதிப்பைத் தரும்.

அந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டு இருக்கும் இன்னொரு விஷயம்... இழப்பீடு. அணு விபத்துகள் ஏதேனும் ஏற்பட்டால், அதற்கு 1,500 கோடி இழப்பீடாகத் தர வேண்டும். ஆனால், இதில் 500 கோடியை மட்டும் அணு உலை நிறுவனங்கள் செலுத்தினால் போதுமாம். மீதித் தொகையை அரசே செலுத்துமாம். எத்தனை வருடங்கள் கழித்து விபத்து ஏற்பட்டாலும், இதே 1,500 கோடிதான் இழப்பீடு. ஆக, இதை எல்லாம் பார்க்கிறபோது, அணு மின் நிலையங்கள் என்பதே தேவை இல்லாத விபரீதங்கள்தான்!'' என்றார்**.

*****

ஜப்பானில் நம்பர் 1 பாதுகாப்பு என்று சொல்லக்கூடிய அளவுக்கு இருந்த அணு உலையிலேயே விபத்து ஏற்பட்டுவிட்டது.

வாழ்ந்து கெட்டவன் என்று நாம் பரிதாபப்படுவோம். விஞ்ஞானம் தரும் எல்லா சுகத்துக்கும் ஆசைப்பட்டவர்கள் ஜப்பானியர்கள். வசதியான வாழ்வு என்று நாம் கருதும் எல்லாமே அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள். ஒரு ஆழிப்பேரலை அத்தனையையும் அழித்துப் பல ஜப்பானியர்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. எஞ்சி இருப்பவர்களை கதிர்வீச்சு அபாயம் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

ஒரு விபத்து நேர்ந்துவிட்டது என்பதற்காக அணு மின் சக்தி வேண்டாம் என்று கூறுவது முட்டாள்தனம் என்கிறார்கள் சிலர். அவர்கள் தங்களைப் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்களில் ஒருவராகச் சிந்தித்து, இந்தப் பிரச்னையை அணுகிப் பார்க்கட்டும். விடை கிடைக்கும்!

*****

பின் குறிப்பு:

*http://bit.ly/fXdsTP அணு மின்உலை பற்றி பத்திரிகையாளர் சுந்தர்ராஜனின் பதிவு.
** 20 மார்ச்2011, ஜூ.வி. பேட்டியில்.

No comments: