Tuesday, August 13, 2013

குட்டி இளவரசன் - பிரெஞ்சு நாவல்



இதுவொரு குட்டி நாவல்.

LEPETIT PRINCE என பிரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்கள் வெ.ஸ்ரீராம், மதனகல்யாணி. பிரமாதமாக செய்திருக்கிறார்கள். இதுவரை 200 மொழிகளில் வெளியாகி, 14 கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கிறது. 1943-ல் வெளியான இந்த நாவல் தமிழில் 1981-ல் 'க்ரியா' பதிப்பித்திருக்கிறது. Braille முறையிலும் வெளியிட்டு இருக்கிறார்கள். Braille முறை என்பது கண் தெரியாதவர்கள் வாசிக்கும் முறையாகும்.

Antoine de Saint-Exupery
குட்டி இளவரசன் நாவலை எழுதியவர் அந்த்வான் து செந்த்-எக்சுபெரி Antoine de Saint-Exupery. 1923-ல் இவர் இராணுவத்தைவிட்டு வெளியே வந்துவிட்டார். எழுதுவதில் ஆர்வம் கொண்டு 1925-ல் தனது முதல் புத்தகத்தை வெளியிட்டார்.

இவர் ஒரு முறை சகாரா பாலைவனத்தில் விமானக்கோளாறு காரணமாக தரையிறங்கினார். ஒரு நபர் ஓட்டும் விமானம் என்பதால் துணைக்கும் யாருமில்லை. அங்கு மனிதர்கள் இல்லை. கண்ணுக்கெட்டியவரை மணல். தனிமை. பகலிரவாக மணலையும், ஆகாசத்தையும் பார்த்தபடியே கிடந்தார். இவருக்கு துணையாக காற்று மட்டும் வீசிக்கொண்டேயிருந்திருக்கிறது. அந்த நாட்களில் அவர் அடைந்த பயம், கற்பனை, பரவசம் இன்னும் பலவென அவருக்குள் ஆழமான மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

இரண்டாவது உலகப் போரில் 1944-ல் ஜுலை 31-ஆம் தேதி கார்ஸிகாவில் போர்கோ என்ற இடதிலிருந்து விமானத்தில் சென்ற அவருக்கு என்ன ஆயிற்று என்றறிய முடியாதவாறு மறைந்துபோனார். இவர் கதை ஒன்றின் கதாபாத்திரம் போல காணாமலே போனார்.

இவரது இலக்கியச் சேவையை சிறப்பிக்கும் விதமாக பிரெஞ்சு தேசம் ஐம்பது பிராங்க் நோட்டில் அவரது கதையில் வரும் குட்டி இளவரசன் மற்றும் யானையை விழுங்கிய மலைப்பாம்பு ஆகிய படங்களை வெளியிட்டுள்ளது.


இந்த 'குட்டி இளவரசனை' இத்தனை மொழிகளில் உலவவிட்டிருப்பது எது?

கதையில் குட்டி இளவரசன் கேட்கும் கேள்விகள் எளிமையானவை, தத்துவார்த்தமானவை, உலகை எந்த மனத்தடையும் அற்று நெருங்க சொல்பவை. தான் ஒருமுறை கேட்ட கேள்வியை ஒரு போதும் மறக்காத குட்டி இளவரசன் பதில் பெறும்வரை மீண்டும் மீண்டும் நினைவு படுத்துவான்.

கதை இப்படி ஆரம்பிக்கிறது - "எனக்கு ஆறு வயதானபோது ஒரு அற்புதமான படத்தைப் பார்த்தேன். மலைபாம்பு காட்டுவிலங்கை விழுங்குவதாக. அதேபோல் யானையை ஒரு மலைபாம்பு விழுங்குவதாக நான் வரைந்தேன். பெரியவர்களுக்கு அது புரியவில்லை. பெரியவர்களுக்கு விளக்கங்கள் தேவையாகயிருக்கிறது. எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்கள் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கிறது."

The Little Prince - குழந்தைகளுக்கான புத்தகம். பெரியவர்களுக்குமான கதை.

இனி சுருக்கம்,-

கதையை சொல்பவராக விமானி. ஒரு நாள் விமானம் பழுதடைந்து தனியாக பாலைவனத்தில் இருக்கிறார். அங்கு ஒரு சிறுவனைக் காண்கிறார். ஆள் நடமாட்டம் ஏதுமில்லாத இந்த இடத்தில் இச்சிறுவன் எப்படி என ஆச்சரியம் படுகிறார். வேறு கிரகத்தில் இருந்து வந்த சிறுவன் என அறிந்து கொள்கிறார். சிறுவன்தான் குட்டி இளவரசன்.

அவன் விமானியிடம் ஓர் ஆட்டுகுட்டியை வரைந்து தர சொல்கிறான். குட்டி இளவரசனுக்கு தனியாக கிரகம் இருகிறது. சிறிய கிரகம். நமது வீட்டைவிட சற்று பெரியது. அவ்வளவுதான் அந்த கிரகம். அங்கு ஒரு ரோஜா செடியிருக்கிறது. பூவோடு பேசுகிறான். குட்டியாக மூன்று எரிமலையிருக்கிறது. தனி ஒருவனாக கிரகத்தில் வாழ்வதால் அந்த கிரகத்தை சுத்தம் செய்வது முதல் சகல வேலைகளையும் அவன் ஒருவனே செய்கிறான்.

ஒரு வேலையைத் தேடிக்கொள்ளவும் அறிவை வளர்த்துக்கொள்ளவும் தன்னைச் சுற்றிய சிறு கிரங்களை நோக்கி அவன் பயணம் செய்கிறான். முதல் கிரகத்தில் அரசன் ஒருவரைச் சந்திக்கிறான். இன்னொன்றில் தற்பெருமைக்காரன், மற்றதில் குடிகாரன், அடுத்த கிரகத்தில் ஒரு 'பிஸினஸ்மேன்', ஐந்தாவதில் தெருவிளக்கு ஏற்றுபவன், ஆறாவதில் பிரமாண்டமான புத்தகங்களை எழுதிக்கொண்டிருக்கும் புவியியலாளன் - முதியவர் - என வரிசையாக சந்தித்து ஏழாவதாக பூமிக்கு வருக்கிறான்.

பூமியில், பாலைவனத்தில் ஒரு பாம்பைச் சந்திக்கிறான், அதோடு பேசுகிறான். மனிதர்களைத் தேடிச் செல்கிறான். வழியில் ஒரு மலரைச் சந்தித்து அதன் சுகதுக்கங்களைக் கேட்கிறான். பின் நரியை சந்திக்கிறான்.

நரி, அவனிடம் ரகசியம் சொல்கிறது. 'இதயத்திற்கும் பார்வை உண்டு. அது கண்களுக்குத் தென்படாததைப் பார்க்க முடியும்' என்கிறது.

அதனால் நரியோடு நட்பு கொள்கிறான். அதன் பிறகு நமது விமான ஓட்டியைச் சந்தித்து அவனுடன் பழகி நட்பாகிறான். இருவரும் ஒன்றாக பொழுதைக் கழிக்கிறார்கள்.

குட்டி இளவரசன் வானில் உள்ள நட்சத்திரங்கள் வெறும் ஒளி அல்ல. அவை கண்ணுக்குத் தெரியாத சிரிப்பு. அதை நீ உணர வேண்டும் என்று கற்றுத் தந்துவிட்டுப் பிரிந்து போய்விடுகிறான். உயிர் பிழைத்து சொந்த ஊருக்கு வந்தபிறகும் குட்டி இளவரசன் நினைவோடு அவன் மறுமுறை வரக்கூடும் என்று ஏக்கத்துடன் விமானி காத்திருப்பதாக முடிகிறது.

இந்த கதையில் குட்டி இளவரசன் மனிதர்களைத் தேடி செல்லும் வழியில் மலரிடம் பேசும் ஒரு பகுதி வருகிறது. இந்த கதையின் எழுத்து நடைக்கு ஒரு சாம்பிள்.
  

குட்டி இளவரசன் மிக நவீனமான ஒரு கதாபாத்திரம். அவனால் எலி, நரி போன்றவற்றை எளிமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனிதர்களை புரிந்துகொள்ள முடியவில்லை.

கதையின் மையமாக நான் கருதும் சம்பவம். விமானிக்கு குட்டி இளவரசன் கற்று கொடுக்கும் 'கண்ணுக்கு தெரியாததைப் பார்க்க முடியும்' என்று சொல்லிக் கொடுப்பதைதான். பெரியவர்களான நமக்கும் குட்டி இளவரசன் சொல்வதும் இதுவே.

இதைப் படிக்கும் போது நமக்கு கிடைக்கும் அனுபவம் அலாதியானது. இளவயதில் படித்தால், நடுத்தர வயதில், பெரியவர்கள் படித்தால் என்று படிக்கும் போது கிடைக்கும் அனுபவமும் புரிதலும் முக்கியமானது. இதனாலேயே குட்டி இளவரசன் புத்தகம் வெற்றி பெறுகிறது. மற்றும் இக்கதை கவித்துவத்தோடு சொல்லப்பட்டிருப்பது ஒரு மேலும் ஒரு சிறப்பு.

குட்டி இளவரசன் அழகான சிறுவன். ஒரு மலரைப் பாதுக்காப்பாகக் காப்பற்ற தெரியாத மனிதர்கள் எப்படி பூமியைக் காப்பாற்றுவார்கள் என்று கேட்கிறான். ரோஜாவை வளர்க்க தெரிந்த மனிதனுக்கு அதை புரிந்து கொள்ளத் தெரியவில்லை என்கிறான். இயற்கை மனிதர்களுக்கு தந்திருப்பதை மனிதர்கள் எப்படி கண்டுகொள்ளாமல் சிதைக்கிறார்கள் என்பதையே நாவல் விவரிக்கிறது.

சின்ன புத்தகம் - வாசித்துவிடலாம்.

***

உதவியவை:

1. குட்டி இளவரசன், க்ரியா பதிப்பகம். Rs.100/-
2. ரயிலேறிய கிராமம், உயிர்மை பதிப்பகம். Rs.125/-
3. http://www.thehindu.com/news/cities/Madurai/braille-edition-of-french-classic-released/article4580383.ece

No comments: