சர்ச்சையின் இன்னொரு அவதாரமாகவே ஆகிவிட்டது யூலிப் பாலிசிகள்!
இதுவும் போன வார கூத்துதான்.
ஒருபக்கம் இந்தவகையான பாலிசிகள் இன்ஷூரன்ஸா அல்லது முதலீடா என்ற பட்டிமன்றங்கள், இன்னொரு பக்கம் பங்குச் சந்தை சார்ந்த இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது லாபமா, இல்லையா என்ற வாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன...
இதற்கிடையில் யூலிப் பாலிசிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்று செபி, ஐ.ஆர்.டி.ஏ. இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அடுத்தகட்டமாக நீதிமன்றத்தின் படிகளை ஏறப் போகிறது. இந்த இரு நிறுவனங்களில் யார் சொல்வது சரி என்பது குறித்து விவாதமே தேவையில்லை. காரணம்.....
காரணம் பார்பதற்கு முன்பு புதியவர்களுக்காக ULIP, SEBI, IRDA அப்படின்னா என்னவென்று சுருக்கமாக பார்த்துவிடலாம்.
SEBI -'செபி' என்பது பங்கு சந்தை சார்ந்த அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஓர் அமைப்பு. IRDA - 'ஐ.ஆர்.டி.ஏ.' இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு வாரியம். ULIP - 'யூலிப்' என்பது ஒரு வகையான இன்ஷூரன்ஸ் திட்டம் தான். இதில் செலுத்தும் தொகை பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இந்தியாவுக்கு யூலிப் பாலிசிகள் வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இரு ரெகுலேட்டர்களும் நிதியமைச்சகத்தின் கீழ்தான் வருகின்றன. அறிமுகம் போதும்.
யூலிப் பாலிசிக்காக ஐ.ஆர்.டி.ஏ-விடம் அனுமதி வாங்கிய இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், அவற்றை பங்குச் சந்தையில் முதலீடு செய்தபோதும் செபியிடம் எந்த அனுமதியையும் வாங்கவில்லை. இதுநாள்வரை அமைதியாக இருந்துவிட்டு இப்போது விழித்து தாம்தூம் என்று குதித்தபடி தடை சொல்லியிருக்கிறது செபி. ஆனால் ஐ.ஆர்.டி.ஏ. தன்னுடைய உரிமையை பங்குபோட்டுக் கொள்ள விரும்பவில்லை! யூலிப் பாலிசிகளுக்கு செபியின் அனுமதி தேவையில்லை என்று ஐ.ஆர்.டி.ஏ. கருத்து தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்னையில் தலையிட்டு முடிவு சொல்ல விரும்பாத மத்திய அரசாங்கம், உங்களில் யார் சொல்வது சரி என்பதை நீதிமன்றத்துக்குச் சென்று முடிவு செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டது.
இனி காரணம், யூலிப் பாலிசிகளில் மக்கள் போடும் பணத்தில் 80% - 90% பங்கு மற்றும் நிதிச் சந்தையில்தான் முதலீடு செய்யப்படுகிறது என்கிறபோது, தங்களைக் கட்டுப்படுத்த செபிக்கு அதிகாரமே இல்லை என்று இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் எப்படிச் சொல்ல முடியும்? யூலிப் பாலிசிகள் நல்ல இன்ஷூரன்ஸ் திட்டம் அல்ல என்பதே நிதி வல்லுனர்களின் கருத்து; சிறப்பான முதலீட்டுக் கருவியும் அல்ல. இந்த உண்மை தெரியாத சாதாரண மக்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை அதில் கொண்டு போய் கொட்டி, குறைந்த லாபத்தையே கண்டிருக்கிறார்கள்.
இப்போது, யூலிப் பாலிசிகளை விற்க 14 இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மீது செபி விதித்திருந்த தடை தற்காலிகமாக நீங்கியிருக்கிறது. இந்தத் தடை நீக்கம் மட்டும் வராமல் போயிருந்தால் இந்த 14 இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் பங்குச் சந்தையில் போட்ட 75 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக திரும்ப எடுத்துவிடலாம் என்று நினைத்ததாம்.
அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் சந்தை மிகப் பெரிய சரிவை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கும். இப்போதைக்கு அந்த பயம் இல்லை என்றாலும், இது தலைக்கு மேல் தொங்கும் கத்தி மாதிரிதான்.
அரசாங்கத்துக்குத் தேவை யூலிப் பாலிசிகள் மூலம் பங்குச் சந்தைக்கு வரும் பல ஆயிரம் கோடி ரூபாய்தான். அதனால் மக்களுக்கு என்ன நன்மை என்பது பற்றி அது கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. பொறுத்திருந்து பார்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment