Saturday, July 10, 2010

செம்மொழி மாநாடு - நம் பார்வை II


செம்மொழி மாநாட்டு ஆரவாரமெல்லாம் முடிந்து, தமிழர்கள் தத்தமது வேலைகளில் இறங்கிவிட்டனர். ஆட்சியாளர்கள் கட்சி பணி பார்க்கவும், நாமெல்லாம் மற்றுமொரு உலக கோப்பையை பார்க்க - ஆக்டோபஸ்ஸின் உதவியோடு - நகம் கடித்து துப்ப தொடங்கியிருக்கிறோம்.

களிமண், கல்வெட்டு, ஓலை, காகிதம் தாண்டி கணினியிலும் பட்டொளி வீசிப் பறக்கும் தமிழ்க் கொடியை இன்னும் உயரே தூக்கிப் பிடிக்கும் நோக்கில், செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது!பேசும் மொழிக்காக இத்தனை லட்சம் பேர் கூடுவார்கள் என்ற ஒன்றே கோவை மாநாட்டுக்குக் கிடைத்த வரலாற்றுப் பெருமை.

கொஞ்சம் அருகில் சென்று, நுரை தள்ளி தண்ணீர் அள்ளி பார்ப்போம்.

*****

மொழியியல் சார்ந்த உலக மேதைகளும் உள்ளூர் அறிஞர்களும் ஒன்றாகச் சேர்ந்து தங்களது ஆய்வு முடிவுகளை, இது வரை இருக்கும் ஆதாரங்களை நினைவுபடுத்துவதும், அடுத்த கட்டமாகத் தங்களது ஆய்வை எதை நோக்கிச் செலுத்துவது என்று முடிவு எடுக்கவுமே ஆய்வரங்குகள் நடத்தப்படுகின்றன. ஆனால், கோவையில் நடந்த ஆய்வரங்குகள் இதில் எந்த நோக்கத்தையும் நிறைவு செய்ததாகத் தெரியவில்லை.

ஆய்வரங்க நிகழ்வுகளில் கருணாநிதி பற்றி சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள்கூட யாரையும் நெருட வில்லை. அவர் மகள் கனிமொழி பற்றியும் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில்... தமிழறிஞர்களுக்கு முகச்சுளிப்பு!

கனிமொழி பற்றி மூன்று தலைப்புகளில்! அந்தக் கட்டுரைகளின் பொருளடக்கமும் சரி... சமர்ப்பித்தவர்களின் விஷயஞானமும் சரி... அந்த அரங்கத்திலேயே காற்று இறங்கிப் போனது இன்னும் சோகம்! நல்ல வேளை பொது மக்களை பார்க்க அனுமதிக்கவில்லை (!).

ஒர் உதாரணம் பார்ப்போம்.

'கவிஞர் கனிமொழியின் கவிதைகளில் பெண் மன உணர்வுச் சித்திரிப்பு' என்ற தலைப்பில் வெ.கலைச்செல்வி என்பவர் ஓர் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். அங்கீகரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட கேள்வியாளர்கள் மொத்தமே 10 பேர்தான் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் எழுந்து, 'கனிமொழி எத்தனை கவிதைத் தொகுப்புகள் எழுதி இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?' என முதல் கேள்வியைப் போட்டார்.

இதற்கு பதில் சொல்ல முடியாமல் கொஞ்சம் நேரம் தயங்கி, எதையோ யோசித்த போஸில் நின்றார் கலைச்செல்வி.கேள்வி கேட்டவரே கனிமொழி எழுதிய மூன்று புத்தங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, ''அவர் எழுதிய புத்தகங்களின் பெயர்களைக்கூடத் தெரிந்துகொள்ளாமல் எப்படி ஆய்வுக் கட்டுரை எழுதினீர்கள்?' என்று மடக்கினார்.

''நான் 'கருவறை வாசனை' பற்றி மட்டும்தான் ஆய்வு செய்தேன்!' என்று சமாளித்தார் கலைச்செல்வி. இதில் சமாதானம் அடையாத கேள்வியாளர், 'ஆய்வு என்பது சம்பந்தப்பட்டவருடைய எல்லா எழுத்துகளையும் படித்துவிட்டு அவற்றில் இருந்து நீங்கள் அறிந்துகொண்டதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, பொத்தாம் பொதுவான கட்டுரையாக இருக்கக்கூடாது!' எனச் சொல்ல, கலைச்செல்வியின் முகம் இருண்டது.

*****
பெ.பகவத் கீதா 'கனிமொழியும் கவிதைமொழியும்' என்கிற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வைத்தார். இந்த ஆய்வுக்கும் சரமாரி கேள்விகள்! முதலில் எழுந்த ஒரு கேள்வியாளர், 'கருவறையின் வாசத்தை ஆண்கள் உணர்ந்தது இல்லையா? ஆண்களைப்பற்றியும் கனிமொழி எழுதி இருப்பது உங்களுக்குத் தெரியுமா? 'சிகரங்களில் உறைகிறது காலம்' என்ற புத்தகத்தில் தந்தையரைப் பற்றியும் அவர் பாடி இருக்கிறாரே..?' என்று அடுக்கிக்கொண்டே போனார் கேள்விகளை. பகவத்கீதா, 'நான் பெண்மை தொடர்பான விஷயத்தை மட்டுமே எடுத்துக்கொண்டேன். அவ்வளவுதான்!' என்றார். அடுத்து பழனிசாமி என்பவர் எழுந்து, 'உங்கள் ஆய்வுக் கட்டுரை முழுக்கப் பாராட்டு மழையாக அல்லவா இருக்கிறது. நடுநிலையான விமர்சனம் எதுவும் இல்லையே? கனிமொழியின் படைப்புகளில் இருக்கும் முரண்பாடுகள் பற்றி நீங்கள் எதையும் குறிப்பிடவில்லையே... ஏன்?' என ஒன்றுக்குள் ஒன்றாகப் பல கேள்விகளை அடுக்க, 'அவையடக்கத்தின் காரணமாக, அதுபற்றி எல்லாம் ஆய்வு செய்யவில்லை!' என்று பகவத்கீதா பதில் சொன்னாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டு அரங்கமே ஒரு நிமிடம் அமைதி காக்க, 'ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதற்கும் அவையடக் கத்துக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமே புரியவில்லையே?'' என்று இன்னொரு கேள்வியாளர் அரங்கத்தின் அமைதியைக் கலைத்தார். தொடர்ந்து அவரே, ''எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றிய நன்மை - தீமையை அலசி ஆராய்ந்து சொல்வதுதான் ஆய்வுக் கட்டுரை! ஒருவரைப் பாராட்டி எழுதுவது ஆய்வுக் கட்டுரையே இல்லை. அதை வெறும் கட்டுரை என்றுதான் சொல்ல முடியும்!' என்று ஆவேசமாகக் குரல் எழுப்பினார். நல்ல வேளை இந்தக் கேள்விக்கு பகவத்கீதா பதில் சொல்ல அரங்கத் தலைவர் கனல்மைந்தன் அனுமதிக்கவில்லை. காரணம் நேரமின்மைதான்! (ஜு.வி யில் (04-07-2010) விரிவாக வந்திருக்கிறது.)

*****
கிளம்பிற்றுகாண் ஜால்ரா கூட்டம்!

என விகடன் கொட்டு வைக்கும் அளவுக்கு சத்தம் அதிகம்.

அதே கவிஞர்கள், அதே கூட்டம் சூழ்ந்திருக்க, நடுநாயகமாக வீற்றிருக்கிறார் முதல்வர். 'யாரங்கே... தொடங்கட்டும்' என ஆரம்பமாகிறது கவியரங்கம்...

"கலைஞரின் கபாலக் களஞ்சியத்தில் ஆண் எண்ணங்களைவிட, ஈரப் பெண் எண்ணங்களே அதிகம். இல்லாவிட்டால், கோபாலபுரம் வீட்டை கொடையாகத் தர முடியுமா?, அந்த ஒளவையார் காலத்தில் இவர் இருந்திருந்தால், அதியமான் ஏமாந்திருப்பான்!" என்றெல்லாம் கவிதை மழை. சொன்னது ஈரோடு தமிழன்பன்.

வாலி, வைரமுத்து போன்ற கவிஞர்கள் மேல் நமக்கு தனிபட்ட பகையில்லை. கேட்பவர்களுக்கும் சில வேளை கூச்சம் வரலாம் என்பதே நமது கருத்து! வேறென்ன சொல்ல?

*****
கண்காட்சிக்கு ஜெ !

அந்த அரங்கத்துக்குள் நுழைந்தால், சிந்துச் சமவெளிக்குள் பயணிப்பதுபோலவே இருந்தது. மொகஞ்சதாரோ - ஹரப்பா நாகரிங்களாகக் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் இருந்த எழுத்துக்கள் திராவிட எழுத்துக்களே என்று நிரூபிக்கப்பட்டதால், அந்த எழுத்துக்களில் தொடங்கி, அங்கே இருந்த வீடுகள், கிணறுகள், அம்மக்கள் பயன்படுத்திய பொருட்களின் சிதைவுகளை மாதிரியாகச் செய்துவைத்து இருந்தார்கள். ஓலைச் சுவடிகளை ஊர் ஊராக அலைந்து திரிந்து கைப்பற்றி புத்தகங்களாகப் பதிப்பித்தவர் உ.வே.சாமிநாதய்யர். அவர் வைத்து இருந்த திருக்குறள், புறநானூறு, சீவகசிந்தாமணி ஆகிய இலக்கியங்களின் ஓலைச் சுவடிகள், அதை எழுதப் பயன்படுத்திய எழுத்தாணிகள் வைக்கப்பட்டு இருந்தன. புராதனச் சிலைகள், தமிழர் வாழ்க்கையைக் காட்டும் ஓவியங்கள், பழைய காலத்துத் தமிழ் எழுத்துக்கள் என எல்லாமே பழமையை நினைவுபடுத்துவதாக இருந்தன. இலக்கியக் காட்சிகளை வைத்துத் தயாரிக்கப்பட்ட 3டி அனிமேஷன் காட்சிகள்கொண்ட ஒலி - ஒளி கண்காட்சி அரங்கம் அருமை! (கண்காட்சி வருணனை - ஆ.வி., நன்றி)

அறுதலான விஷயம், 'தமிழிலேயே பாடம் படித்தால், தமிழக அரசுப் பணிகளில் முன்னுரிமை'. அச்சுத் துறையில் கணினித் தமிழை உலகளாவ ஒருமுகப்படுத்தும் விதமாக, 'யூனிகோட்' மற்றும் 'டிஏசிஇ-16' ஆகியவற்றை ஆரத் தழுவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழர் அனைவரும் ஒரே எழுத்துருவில் படிக்கலாம் இனி!

 'டிஏசிஇ-16' புரியாதவர்களுக்கு வேறொரு சந்தர்பத்தில் சொல்கிறேன்.

*****
தமிழுக்கு இவை மட்டும் போதுமா? இன்னும் செல்வதற்கும் செய்வதற்கும் எவ்வளவோ இருக்கின்றன!

யானைக்கு சோள பொரி. என்ன! இந்த பொரி அவிக்க, 380 சொச்சம் கோடி தேவைப் பட்டிருக்கிறது!

2 comments:

Thangavel K said...

Thani manitha thuthi padalgalai velicham pottu kattiyirukkirirkal..

யானைக்கு சோள பொரி. என்ன! இந்த பொரி அவிக்க, 380 சொச்சம் கோடி தேவைப் பட்டிருக்கிறது! - Pallu irukkaravan pakoda sapidaran.. (Thanks -IK)

Surendhar said...

இதில் பகிர்ந்த விஷயம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்க நியாயம் இருந்தும் உங்கள் கருத்தை பகிர்ந்ததற்கு நன்றிங்க.

அப்புறம் 'பல்லு-பக்கோடா' -க்கு தனியா நன்றி???
காப்புரிமை வாங்கன மாதிரியும் தெரியலையே?