Sunday, October 31, 2010

கனவு பூமியின்...


இன்று ஏறக்குறைய பிறந்த நாள்.

1931 அக்டோபர் 31-ம் நாள் சனிகிழமை....

செலுலாயிட் ஃபிலிம் தமிழிலும் பேசத் தொடங்கிய அற்புதத்தை 'காளிதாஸ்' படத்தின் மூலம் தமிழன் கண்டான்.

ஆம்....

தமிழ் சினிமா பிறந்துவிட்டது....

கனவு பூமிக்குள் தமிழன் பிரவேசித்து விட்டான். (80 வயதாகிறது).

இப்போது இருக்கும் 'தமிழ் சினிமா' நம் எல்லோருக்கும் அத்துப்படி. அலச, ரசிக்க எப்போதும் நாம் தயாராய் இருக்கிறோம். நம் கணத்தை திருடியிருக்கிறது. தெரிந்தே ஆசையோடு திருடு கொடுத்திருக்கிறோம். கொடுப்போம். சிரிக்க, கோபப்பட, பயப்பட, காதல், காமம் கொள்ளச் செய்திருக்கிறது. ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதில் விதிவிலக்குகள் மியூசிம் ஆசாமிகள். விதிவிலக்குகள் உண்டா, என்ன?

இன்று நாம் காணுகின்ற 'தமிழ் சினிமா' எப்படி இருக்கிறதோ, இப்படியாக உருக்கொள்ள எண்ணற்ற பலர் உழைத்தனர். ரஜினி, கமலுக்கு முந்தைய எம்.ஜி.ஆர், சிவாஜியைத் தெரியும். படங்கள் பார்த்திருக்கிறோம். அவர்களுக்கு முந்தைய தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா பற்றியும் கேள்விபட்டிருக்கிறோம். அதற்கும் முன்....

தமிழ் சினிமாக் குழந்தையைத் தாலாட்டி வளர்த்தவர்களைப் பற்றி வரலாறு இல்லை, படங்கள் இல்லை, அவர்கள் எடுத்த படங்களில் பல இல்லை. காலணா விலையில் வந்த பாட்டு புத்தகங்களின் கதைச் சுருக்கத்தில் நம் தமிழ் சினிமா வரலாறு கிடைக்கிறது!

காளிதாஸ் தனித் தமிழ் படமல்ல; தமிழிலும் தெலுங்கிலும் பேசிய பாடிய படம்! எச்.எம்.ரெட்டி டைரக்க்ஷனில், நாயகி டி.பி.ராஜலட்சுமி நடித்த படம். ஹீரோ தெலுங்கு நடிகர். பெயர் தெரியவில்லை. இந்தப் படம் எட்டே நாளில் எட்டாயிரம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது. வசூல் 75 ஆயிரம்.



பல பழைய பத்திரிக்கைகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் செய்திகள் விமர்சனங்கள், குறிப்புகள், போட்டோக்கள். தொடர்ந்த தேடல்... இடைவிடாத தேடல்.... தேடிக் கண்டுபிடித்து, திரட்டி தொகுத்திருக்கிறார் திரு.அறந்தை நாராயணன். 'கனவு பூமியின்...' என்னும் கட்டுரைத் தொடராக 'பொம்மை' இதழில் வந்திருக்கிறது. இப்போது புத்தகமாக, 'ஆரம்பகால தமிழ் சினிமா' (ரூ.100/- விஜயா பதிப்பகம். 044-2471 8757). அறந்தை நாராயணனின் பணி ஒரு இமாலய சாதனை.

வரலாற்றை சுருக்கமாக புதியதாகத் தந்திருக்கிறார். நிச்சயம் இந்த தலைமுறைக்கு தெரியாது. தெளிவான படங்களோடு இருக்கிறது.

எம்.ஆர்.ராதா நடித்த முதல் படம்(ராஜசேகரன்). 1939-ல் 'வீர ரமணி' என்றொரு படம். கதாநாயகி கே.டி. ருக்மணி. மோட்டார் சைக்கிளில் சவாரி செய்து ரசிகர்களின் இதயத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார், சிகரெட் பற்றவைத்துப் புகைத்து, சுருள் சுருளாகப் புகைவிட்டிருக்கிறார். இது ஒரு சண்டைப் படமாம்.'1939' என்பதுதான் இதில் விசேஷம். அவரின் புகைப்படம் இருக்கிறது.


புராணம் இல்லாமல் கதைகளிலும் புதுமை, புரட்சி செய்திருக்கிறார்கள் - பிராமண வகுப்பைச் சேர்ந்த வாலிபன், பிராமணரல்லாத வகுப்பைச் சேர்ந்த இளம் பெண்ணைக் காதலிக்கும் கதை 'சாந்தா'. 1941-ல் வெளிவந்திருக்கிறது. 'யம வாதனை', 'அடங்காப் பிடாரி', 'புலி வேட்டை', 'போலிச் சாமியார்', 'மாலைக் கண்ணன்' ஆகிய தனித்தனிச் சிறு கதைகளை இணைத்து 'சிரிக்காதே' என்ற பொது தலைப்பில் ஓர் படம் 1939-ல் வெளிவந்தது. என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், கொத்தமங்கலம் சுப்பு, என நகைச்சுவை நடிகர்கள் நடித்தது.

1941 'சாயா' என்று ஒரு படம் தயாரிக்கப்பட்டு வெளி வரவில்லை. வந்திருந்தால் வரலாற்றுப் புகழைப் பெற்றிருக்கும். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம் இது!

இப்படி, சுவாரஸ்ய பளிச் !..... உண்டு.

அறந்தை நாராயணன் அவர்கள், படங்கள் வெளிவந்த காலம், படங்களில் நடித்தவர்கள் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த புத்தகம் ஒரு Fast forward.

இப்பொழுது இருக்கும் நடிகைகள் சினேகா, பாவணா, அசின், நயந்தாரா கணக்காய் அப்பொழுதும் கண்ணுக்கு நிறைவாய் எம்.வி.ராஜம்மா, டி.சூர்யகுமாரி...... இருந்திருக்கிறார்கள்.


நான் வெகுவாக ரசித்தது - அப்போது வந்த படங்களின் பெயர்களை. உ.ம்:- 'பாலாமணி (அ) பக்கா திருடன்', 'உஷா கல்யாணம் & கிழட்டு மாப்பிள்ளை', 'வாலிபர் சங்கம்', 'மட சாம்பிராணி', 'டூபான் - குயின்', 'போர் வீரன் மனைவி & அசட்டு வீரன் மனைவி', 'என்னை அடியாதே பெத்தப்பா'.

இதில்,

'சைரந்திரி (அ) கீச்சவதம்' - இந்த பெயர் இப்போது வைத்தால் வரிவிலக்கு கொடுப்பார்களோ?

3 comments:

Thangavel K said...

அப்பொழுதும் கண்ணுக்கு நிறைவாய் எம்.வி.ராஜம்மா, டி.சூர்யகுமாரி...... இருந்திருக்கிறார்கள்.. Avarkal pugaipadathaiyum pottirukkalam..

Anonymous said...

@KT.. lol... நான் நினைச்சேன் நீங்க சொல்லீடீங்க... :D

@சுரேந்தர்: விளக்கம் தேவை!

~Guru

Surendhar said...

புகைபடம் போடலாம், முடியாததாலதான் 'நயன்தாரா' பிராயச்சித்தம்.

ஆனாலும் அதுல பாருங்க என் நேர்மையை :-)