Tuesday, December 28, 2010

2010 பார்க்கவேண்டியது



2010 ஆண்டை கடந்துவிட்டோம். திரும்பி பார்க்கும் அனைவருக்கும் திரும்பிப் பார்க்க சம்பவங்கள் இருக்கும். முதல் முறையாக கல்லூரியில் சேர்ந்திருப்பீர்கள், காதலிக்க ஆரம்பித்திருப்பீர்கள், கல்யாணம் கட்டியிருப்பீர்கள், குழந்தை பிறந்திருக்கும், வேலைக் கிடைத்திருக்கும், வீடு வாகனம் வாங்கியிருக்கலாம், First day first show பார்த்திருக்கலாம், பதவி உயர்வு, Twitter, சிறு காயம், நட்பு, விபத்து, நல்ல கவிதை, தற்கொலை, பிரச்சனை, மாற்றல், அரசியல்,மன்னிப்பு என சிறுசும் பெருசுமாக நிறைய நடந்திருக்கும். அசை போட்டுப் பார்பதில் நம் அனைவருக்கும் அலாதி சந்தோசம்.

*****

நம் கவலைகளின் ஒரு பகுதியான பண பரிவர்தனைகளில் நம் நாட்டு பொருளாதாம், நம் பொருளாதாரம் எப்படி? நிலை உயர்ந்திருக்கிறதா? அலசிப் பார்போம்.

பங்குச் சந்தை

முதலில் பங்குச் சந்தை... அதன் செயல்பாடு 2009-ம் ஆண்டை போல ஆஹா, ஓஹோ (81% வளர்ச்சி) என்று இல்லாவிட்டாலும், 2008-ம் ஆண்டைப் போல் மைனஸாக (-52%) இல்லை என்பதே பெரிய ஆறுதல்தான். 2010-ம் ஆண்டு சென்செக்ஸ் 14.61%, நிஃப்டி 15.06% வருமானம் கொடுத்திருக்கிறது. இவை கிட்டத்தட்ட ஓராண்டுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட இரு மடங்கு அதிகம். அந்த வகையில் நல்ல லாபம்தான்!

இந்த ஆண்டு நம் பங்குச் சந்தை அள்ளியும் கொடுத்திருக்கிறது தள்ளியும் விட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பி.எஸ்.இ. ஆட்டோ, கன்ஸ்யூமர் டியூரபிள் இண்டெக்ஸ்கள் முறையே 112% மற்றும் 60% வளர்ச்சி கண்டன. ஆனால், பி.எஸ்.இ. ரியால்டி இண்டெக்ஸ் 29%, பவர் 9% வீழ்ச்சி அடைந்தன.

நம் சந்தை லாபத்தில் அதாவது எழுச்சியில் இருந்தால் காளையின் பிடியிலும், நஷ்டத்தில் அல்லது சரிவில் இருந்தால் கரடியின் பிடியில் இருப்பதாகவும் சொல்லுவோம். உண்மையில் பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயிப்பவர்களாக முதலிடத்தில் இருப்பவர்கள் எஃப்.ஐ.ஐ-க்கள், அதாவது அந்நிய நிதி நிறுவனங்கள்தான்.

இந்திய பங்குச் சந்தையில் அவற்றின் நிகர முதலீடு 2009-ல் 80,500 கோடியாக இருந்தது. இது 2010-ம் ஆண்டில் 1,29,980 கோடியாக அதிகரித்துள்ளது. இவர்களின் முதலீடு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பலரும் கருதுகிறார்கள். இது உண்மையாகும் பட்சத்தில் வரும்காலத்தில் சந்தை பாசிடிவ்- ஆக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கச்சா எண்ணெய்

பொதுவா கச்சா எண்ணெய் விலை அதிகரிச்சா நம்ம பொருளாதாரத்துக்கும் பங்குச் சந்தைக்கும் நல்லதல்ல. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் விலைவாசியும் ஏறிவிடுகிறது. நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை நிச்சயம் அதிகரிக்கும். 2008ல் கச்சா எண்ணெய்யின் சராசரி விலை 91.48 டாலர். அந்த ஆண்டு சந்தை வீழ்ச்சி அடைந்தது. 2009ல் நல்ல வருமானம் கொடுத்தது பங்குச் சந்தை அப்போ கச்சா எண்ணையின் சராசரி விலை 53.56 டாலர். 2010ல் சராசரியாக 70 டாலர். அதிகபட்சம் 93 டாலர் வரை போனது.

பனை மரத்தில் நெறி கட்டும் கதைதான். நம் கைகளில் ஒன்றும் இல்லை. இதை ஒரு குறியீடாக வைத்துக்கொள்ளலாம், பங்கு சந்தையை கவனிப்பவர்கள்.

பணவீக்கம்

அதிகபட்சமாக பணவீக்கம் 16.22% ஆக இருந்தது. படிப்படியாக குறைந்து ஒற்றை இலக்கை எட்டியிருக்கிறோம். பணவீக்கத்தின் ஏற்ற இறக்கம் பங்குச் சந்தையில் சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக பணவீக்கம் குறைவாக இருந்தால் சாதகம்.

ஜி.டி.பி. வளர்ச்சி மற்றும் தொழில் உற்பத்தி

2010-ம் ஆண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி சராசரியாக 8.9%, இந்திய தொழில் உற்பத்தி (ஐ.ஐ.பி.) வளர்ச்சி குறியீடு 11.64% பாஸிடிவ் சிக்னலைத் தான் தருகிறது.

கவலை அளிக்கும் விஷயங்கள்

வேலை இல்லாதவர்களின் சதவிகிதம் 7.32% ஆக இருந்து 8% ஆக அதிகரித்துள்ளது. உலக பொருளாதாரம் குறிப்பாக அமெரிக்காவோ ஐரோப்பாவோ ஆட்டம் கண்டால் நம்மை நிச்சயம் கவலை கொள்ளச் செய்யும். அவர்களின் நிலை கவலைக் கொள்ளவே செய்கிறது. பக்கத்து வீடு பற்றி எரிவது என்றால் நமக்கும் கவலைதானே.


தொடர்ந்து கற்றலும், அடிப்படை அறிவும் தேவை என்பதை இங்கு 'குறிப்பாக' சொல்கிறேன். வரும் ஆண்டில் ஸ்டீல், பார்மா, சிமென்ட் துறை நன்றாக இருக்கும். துறை முன்னோடி நிறுவனங்களை வாங்கலாம். முக்கியமாக, பங்குச் சந்தை தெரியாமல் இறங்க வேண்டாம். கவனம்.

இனி நாம் செய்ய வேண்டியது.

மேலே சொன்னது எல்லாம் நம் சக்திக்கு மீறியது. நம்மால் செய்யக் கூடியதில், நாம் என்னவெல்லாம் செய்யலாம்.

யோசிக்கலாம்.

Concentrate on your portfolio: பிரித்து போடுவது ரிஸ்க் அளவை குறைக்கும். ஆனால் பணம் சேர்த்தவர்கள் பிரித்துப் பிரித்து போடுவதில்லை. உம்: அஸிம் பிரேம்ஜி, ரத்தன் டாடா, பில் கேட்ஸ். அவர்கள் ஒரு துறையில் போட்டுதான் வளர்ந்தார்கள். உங்கள் portfolioவில் இருக்கும் நல்ல பங்கு தொடர்ந்து வளரும் போது, அதைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ப்பதும் நல்லதுதான். 1995ல் Tata Power வாங்கியிருந்தால் அதன் தொடர்ச்சியை கவனிக்கவும். லாபகரமானதாகவே இருக்கும்.

Ignore some rules: எதையும் எழுதி வையுங்கள். பெரும்பாலானவர்கள் அறிந்த '100 minus age' thumb rule. இதன் மூலம் கணக்கிடப் பட்ட %, பங்குச் சந்தையில் போடலாம். குழப்புகிறதா. உங்களுக்கு சரியெனப் படும் சதவிகிதத்தை தனியே ஒதுக்கிவிட்டு, மீதியை பங்குச் சந்தையில் போடுங்கள். தேவையில்லாத குழப்ப கணக்குகளை தூர எறியுங்கள்.

Get rid of niche plans: Don't go for Specific policies, such as child plans, pension plans, etc. நல்ல ரிட்டன் தரக்கூடிய Mutual fund ல் போடுங்கள். அதை எடுத்து குழந்தையின் படிப்பிற்கோ, முதுமைகோ நம் சௌகரியத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். போடும் பணம் பொருக வேண்டும். அவ்வளவுதான்.

Get an adviser: பொரும்பாலும் நாம் பொற்றவர்களின் அறிவுரைப்படிதான் பண விஷயத்தில் நடந்து கொள்கிறோம். ஆரம்ப கட்டதில் அது சரி. போகப் போக அந்த துறை சார்ந்தவர்களின் ஆலோசனை கேட்பதே சரியானது. பாட்டி வைத்தியம் உடம்புக்கு ஓ.கே. ஆனால், அறுவை சிகிச்சைக்கு பட்டம் பெற்ற மருத்துவரே மிகச் சரியானவர்.

Surrender policies: தவறான முடிவின் பேரில் தேவை இல்லாத பாலிசியை சிலர் வைத்துக் கொண்டிருப்பார்கள். சிரமத்திலும் தொடர்ந்து கொண்டிருப்பார். அதை கணக்கு தீர்த்து தலை முழுகுங்கள். மனதளவில் அதன் நஷ்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒன்றும் குடி முழுகவில்லை. வாய்ப்பு நிறைய உள்ள கடல். படகை வேறு திசை திருப்பி வலை வீசுங்கள். புத்திசாலித்தனமாக முதலீட்டை ஆரம்பியுங்கள். இலக்கு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பணம், கண் முன்னே வளரும்.

Spend Analysis: செலவை கணக்கிடுங்கள். எவ்வளவு திறமையிருப்பினும் ஓட்டை படகு இடம் போய் சேராது. செலவை குறைக்கவாது செய்யலாம்.

*****

சேமிப்பு வேறு முதலீடு வேறு. உணர்ந்துக் கொள்ளுங்கள்.

கடைசியாக ஒன்று, முடிந்தால் சேமியுங்கள்.

முடியும்.
*****

வேறு பல விஷயங்களை மற்றொரு பொழுதில் பேசலாம்.

வாழ்த்துக்கள்.


Sunday, October 31, 2010

கனவு பூமியின்...


இன்று ஏறக்குறைய பிறந்த நாள்.

1931 அக்டோபர் 31-ம் நாள் சனிகிழமை....

செலுலாயிட் ஃபிலிம் தமிழிலும் பேசத் தொடங்கிய அற்புதத்தை 'காளிதாஸ்' படத்தின் மூலம் தமிழன் கண்டான்.

ஆம்....

தமிழ் சினிமா பிறந்துவிட்டது....

கனவு பூமிக்குள் தமிழன் பிரவேசித்து விட்டான். (80 வயதாகிறது).

இப்போது இருக்கும் 'தமிழ் சினிமா' நம் எல்லோருக்கும் அத்துப்படி. அலச, ரசிக்க எப்போதும் நாம் தயாராய் இருக்கிறோம். நம் கணத்தை திருடியிருக்கிறது. தெரிந்தே ஆசையோடு திருடு கொடுத்திருக்கிறோம். கொடுப்போம். சிரிக்க, கோபப்பட, பயப்பட, காதல், காமம் கொள்ளச் செய்திருக்கிறது. ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதில் விதிவிலக்குகள் மியூசிம் ஆசாமிகள். விதிவிலக்குகள் உண்டா, என்ன?

இன்று நாம் காணுகின்ற 'தமிழ் சினிமா' எப்படி இருக்கிறதோ, இப்படியாக உருக்கொள்ள எண்ணற்ற பலர் உழைத்தனர். ரஜினி, கமலுக்கு முந்தைய எம்.ஜி.ஆர், சிவாஜியைத் தெரியும். படங்கள் பார்த்திருக்கிறோம். அவர்களுக்கு முந்தைய தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா பற்றியும் கேள்விபட்டிருக்கிறோம். அதற்கும் முன்....

தமிழ் சினிமாக் குழந்தையைத் தாலாட்டி வளர்த்தவர்களைப் பற்றி வரலாறு இல்லை, படங்கள் இல்லை, அவர்கள் எடுத்த படங்களில் பல இல்லை. காலணா விலையில் வந்த பாட்டு புத்தகங்களின் கதைச் சுருக்கத்தில் நம் தமிழ் சினிமா வரலாறு கிடைக்கிறது!

காளிதாஸ் தனித் தமிழ் படமல்ல; தமிழிலும் தெலுங்கிலும் பேசிய பாடிய படம்! எச்.எம்.ரெட்டி டைரக்க்ஷனில், நாயகி டி.பி.ராஜலட்சுமி நடித்த படம். ஹீரோ தெலுங்கு நடிகர். பெயர் தெரியவில்லை. இந்தப் படம் எட்டே நாளில் எட்டாயிரம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது. வசூல் 75 ஆயிரம்.



பல பழைய பத்திரிக்கைகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் செய்திகள் விமர்சனங்கள், குறிப்புகள், போட்டோக்கள். தொடர்ந்த தேடல்... இடைவிடாத தேடல்.... தேடிக் கண்டுபிடித்து, திரட்டி தொகுத்திருக்கிறார் திரு.அறந்தை நாராயணன். 'கனவு பூமியின்...' என்னும் கட்டுரைத் தொடராக 'பொம்மை' இதழில் வந்திருக்கிறது. இப்போது புத்தகமாக, 'ஆரம்பகால தமிழ் சினிமா' (ரூ.100/- விஜயா பதிப்பகம். 044-2471 8757). அறந்தை நாராயணனின் பணி ஒரு இமாலய சாதனை.

வரலாற்றை சுருக்கமாக புதியதாகத் தந்திருக்கிறார். நிச்சயம் இந்த தலைமுறைக்கு தெரியாது. தெளிவான படங்களோடு இருக்கிறது.

எம்.ஆர்.ராதா நடித்த முதல் படம்(ராஜசேகரன்). 1939-ல் 'வீர ரமணி' என்றொரு படம். கதாநாயகி கே.டி. ருக்மணி. மோட்டார் சைக்கிளில் சவாரி செய்து ரசிகர்களின் இதயத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார், சிகரெட் பற்றவைத்துப் புகைத்து, சுருள் சுருளாகப் புகைவிட்டிருக்கிறார். இது ஒரு சண்டைப் படமாம்.'1939' என்பதுதான் இதில் விசேஷம். அவரின் புகைப்படம் இருக்கிறது.


புராணம் இல்லாமல் கதைகளிலும் புதுமை, புரட்சி செய்திருக்கிறார்கள் - பிராமண வகுப்பைச் சேர்ந்த வாலிபன், பிராமணரல்லாத வகுப்பைச் சேர்ந்த இளம் பெண்ணைக் காதலிக்கும் கதை 'சாந்தா'. 1941-ல் வெளிவந்திருக்கிறது. 'யம வாதனை', 'அடங்காப் பிடாரி', 'புலி வேட்டை', 'போலிச் சாமியார்', 'மாலைக் கண்ணன்' ஆகிய தனித்தனிச் சிறு கதைகளை இணைத்து 'சிரிக்காதே' என்ற பொது தலைப்பில் ஓர் படம் 1939-ல் வெளிவந்தது. என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், கொத்தமங்கலம் சுப்பு, என நகைச்சுவை நடிகர்கள் நடித்தது.

1941 'சாயா' என்று ஒரு படம் தயாரிக்கப்பட்டு வெளி வரவில்லை. வந்திருந்தால் வரலாற்றுப் புகழைப் பெற்றிருக்கும். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம் இது!

இப்படி, சுவாரஸ்ய பளிச் !..... உண்டு.

அறந்தை நாராயணன் அவர்கள், படங்கள் வெளிவந்த காலம், படங்களில் நடித்தவர்கள் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த புத்தகம் ஒரு Fast forward.

இப்பொழுது இருக்கும் நடிகைகள் சினேகா, பாவணா, அசின், நயந்தாரா கணக்காய் அப்பொழுதும் கண்ணுக்கு நிறைவாய் எம்.வி.ராஜம்மா, டி.சூர்யகுமாரி...... இருந்திருக்கிறார்கள்.


நான் வெகுவாக ரசித்தது - அப்போது வந்த படங்களின் பெயர்களை. உ.ம்:- 'பாலாமணி (அ) பக்கா திருடன்', 'உஷா கல்யாணம் & கிழட்டு மாப்பிள்ளை', 'வாலிபர் சங்கம்', 'மட சாம்பிராணி', 'டூபான் - குயின்', 'போர் வீரன் மனைவி & அசட்டு வீரன் மனைவி', 'என்னை அடியாதே பெத்தப்பா'.

இதில்,

'சைரந்திரி (அ) கீச்சவதம்' - இந்த பெயர் இப்போது வைத்தால் வரிவிலக்கு கொடுப்பார்களோ?

Wednesday, October 27, 2010

தீண்டும் இன்பம்

எந்திரன் - நமது பார்வை

எந்திரன் - திரையிலோ, திருட்டு ஸிடியிலோ இணையத்திலோ பார்த்துவிட்ட பிறகு, அவரவருக்கு கருத்தும் அபிப்பிராயமும் ஏற்பட்டுவிட்டது. முதல் நாள் விடியற்காலை 4 மணிக்கு படம் பார்த்த ஆரம்ப சந்தோஷம் அலாதியானது. ஆரவாரம் அடங்கி, அவரவர் வேலைப் பார்க்க தொடங்கிவிட்டிருக்கிறோம். இப்பொழுது சற்றே உணர்ச்சிவசப்படாமல், நுரை விளக்கிப் பார்ப்போம்.


எந்திரனுக்கு அதை உருவாக்கியவரின் காதலி மேல் காதல். இந்த கதையின் திரைக்கதையில், சில சுவாரஸ்யங்கள் தள்ளி நிறைய கோட்டைவிட்டிருக்கிறார்கள். ஒவ்வொன்றாக,

1. Prime numberன் அத்தனை சொல்லும் ரோபோவுக்கும் பெண்ணின் காதல் பெரிசு.

2. சுயசிந்தனை பெற்றவுடன் கவிதை படிக்க ஆரம்பித்து விடுகிறது, கட்டளையை மீறி.

3. ஒரு ரெட் சிப்பில் அத்தனை அடம் வந்துவிடுகிறது, ரெட் சிப்- உவமை. மக்களுக்கு புரியாமல் போய்விடக்கூடாது என்ற கவலை இயக்குனருக்கு.

4. ரோபோவினால் எல்லாம் முடியும் என்பதை வசனத்திலும் காட்சிகளிலும் திரும்ப, திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பது. பாடல்களிலும் அதே.

5. எந்த வேலை செஞ்சாலும் - ஆராய்ச்சி செய்வது வரை - அழகான காதலி இருந்தே தீருவாள். இந்த க்ளிஷேவை எப்போது மீறுவோம்?

6. பாடல் காட்சிக்காக (கிளிமாஞ்சாரோ ரஜினியை கோழையாக காண்பிக்க வேண்டுமா என்ன? காமெடி முயற்சி பண்ணியிருந்தாலும் 'சாரி'.

7. ரெண்டு, ஒரு ரஜினி ஓகே. திகட்ட திகட்ட எதற்கு அத்தனை ரஜினி.

8. Climax Graphics காட்சிகளை எவ்வளவு தூரம் justify பண்ண முடியும் - இயக்குனரால்? கதைக்காக.

9. செக்ஸை தாண்டி யோசிக்கும் ரோபாவால், சிக்கலான கேள்விக்கு - 'hypothesis' சொல்லும் ரோபோவால், நுட்பமாக பிரசவிக்கும் ரோபோவால், 'ஐஸ்'ஸின் மனதை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆச்சர்யம். ஒரு வேளை கதையின் ட்விஸ்ட் அதுதானோ!

10. ஏன் கடைசிவரை ஒரு 'பெண் ரோபோ' செய்யும் யோசனை, ரஜினிக்கு தோன்றவில்லை.

இருந்தும்.....இவ்வளவு இருந்தும்...


பணம் வைத்திருக்கிறார் - தயாரிப்பாளர்.

வித்தை கற்றவர் - இயக்குனர்.

அழகும், திறமையும், நடிக்கவும் - நாயகி.

பாடலாகட்டும், காட்சியாகட்டும், கிராஃபிக்ஸ் ஆகட்டும் - கூட்டணி, கூட்டணி உழைப்பும் அபாரம்.

அத்தனைக்கும் மேல் ரஜினி - மாஸ் பலம், ஓடும் குதிரை, ஜெயித்திருக்கிறது. 'வெற்றி' எல்லாவற்றையும்விட ஓங்கி உரைக்கும்.
*****
சமிபத்தில், சுஜாதா எழுதிய நாவலான 'தீண்டும் இன்பம்' படிக்க சந்தர்பம் வாய்த்தது (கிழக்கு பதிப்பகம்). கிட்டதட்ட பத்தாண்டுகளுக்கு முன் 'விகடனில்' தொடராக வந்திருக்கிறது. உங்களில் சிலர் படித்திருக்கலாம். நான் இப்போதுதான்.

நாவலின் ஒன் லைன் - கல்லூரிக்குப் போகும் பெண் கர்ப்பமானால் என்ன ஆகும்? இந்த ஒற்றைவரியை வைத்துக்கொண்டு, ஒரு பெண்ணின் மனப் போராட்டங்களை, இயல்பு மாறாமல், வெகு யதார்த்தமாக, ரசிக்கும்படி தந்திருக்கிறார். இதில் குறிப்பிடும்படியாக நான் கருதுவது, இன்றும் பல விஷயங்களில் முரண்படாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும்படி இருப்பதுவே. பொழுதுபோகும்படியாகவே இருந்தாலும் இளைஞர்களுக்கான 'மணி' கட்டப்பட்டு இருக்கிறது. வாத்தியாராச்சே !

ரசித்த இடம் -

"தேசியக் கருத்தரங்கம். அதற்கு பரீட்சைக்குப் படிப்பது போல இரண்டு பேரும் லைப்ரரி ஹாலில் படித்தார்கள். 'Unplanned Pregnancy' என்ற புத்தக்கதை பிரிட்டிஷ் கவுன்சிலிலிருந்து ப்ரமோத் எடுத்து வந்திருந்தான். சன்னமான குரலில் படித்துக்காட்டினான்.

'ஒரு பெண்ணுக்கு வேண்டாத கர்ப்பம் என்பது மிகக் கடினமான, கடுமையான ஒரு அனுபவம் ...............................................................................................................................................
அமெரிக்காவில் மாத்திரை சாப்பிடுபவர்களில் 16 சதவிகிதமும், உறைகளைப் பயன்படுத்துபவர்களில் 16 சதவிகிதமும் வேண்டாத கர்ப்பம் அடைகிறார்கள்.'

ப்ரமோத் அதைப் படித்துவிட்டு நிமிர்ந்தான். 'இதெல்லாமா சொல்லப்போறோம் ப்ரமோத்' என்றாள்.

'ரிஸ்க் இருக்கிறது தெரியாம மாணவ-மாணவிகள் அது பத்திரமானதுன்னு நெனைச்சுக்கிட்டு மாட்டிக்கறாங்கன்னு சொல்லலாம். செக்ஸ் எஜுகேஷ்னுக்கு வலுவான சாட்சியமாப் பயன்படுத்தலாம் இல்லையா? என்ன?'

'நீங்க என்ன யூஸ் பண்றீங்கன்னு கலாட்டா பண்ணுவாங்களே ப்ரமோத்? பயமா இருக்கு.'

'கேட்டா, சிரிச்சிட்டு ஐஸ்வாட்டர்னு சொல்லு.'

'புரியலை.'

புரிஞ்சவங்க நம்ம கட்சி. புரியாதவர்களுக்கு ஒரு க்ளு- வயது வந்தவர்களுக்கான சைவ ஜோக் இது. அடம்பிடிப்பவர்களுக்கு - ஒரு நடை நாவலை படிச்சுட்டு வாங்க, அப்புறமா சொல்லுறேன்.

*****
ரசித்த கவிதை

Wednesday, October 6, 2010

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!

நன்றி தினமணி.


ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்" உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா" 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

தஞ்சாவூரில் "சந்திரலேகா" வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: "ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''


படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ". "சந்திரலேகா" வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூறப்படுகிறார்!


ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக

"சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த்...


வரலாறுதானா 'சன் பிக்சர்'ஸின் "எந்திரன்"?

நிச்சயமாக "எந்திரன்" ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. 'சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான 'கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை 'எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்"டுக்கும் "கோகோ கோலா"வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர"ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் 'எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.


சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.

இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு 'எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட 'எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் 'எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக" (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, 'எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

'எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். 'எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் 'எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!
 
http://bit.ly/9hMsaO

நமது கருத்து, வரும் பதிவில்....

Sunday, August 29, 2010

ட்விட்டர் - ஓர் பார்வை



அறிமுகம்

ட்விட்டர் - இந்த வார்த்தை இணைய உலகத்தில் மிக பிரபலம் அடைந்திருக்கிறது. இந்த நாளில் இணையத்தின் சூப்பர் ஸ்டாராகத் தொடர்வது - சந்தேகம் இன்றி டிவிட்டர் (www.twitter.com).

புறாவிடு தூதாகத் தொடங்கிய தகவல் தொடர்பு, கடிதம், தந்தி, ஃபேக்ஸ், இ-மெயில் என முன்னேறி இப்போது சிட்டுகுருவியில் வந்து நிற்கிறது. எழுச்சியும், வீரியமும் கிடைக்க சிட்டுகுருவிகளை (!) லேகியத்திற்காக வம்பிழுத்துக் கொண்டிருந்த நமக்கு - இது புதுசு. பகலில் கண் சிமிட்டும் வெளிச்ச மத்தாப்பாய் - பல தொழில்நுட்ப நண்பர்களுக்கே தெரிந்தும் தெரியாமலும் இருக்கிறது. ஆதலால், டிவிட்டர் என்றால் என்னவென்று முதலில் பார்த்துவிடலாம். இது வேற வகை 'சிட்டுகுருவி'.

"நமது கருத்தை, சொல்ல விரும்புவதைச் சிக்கன வார்த்தைகளில் இணையத்தில் தெரிவிப்பது".

நறுக்கென்று 140 எழுத்துக்களில் "இப்போது என்ன செய்கிறீர்கள் ?" என்பதை ட்விட்டரில் தட்டினால் அதை ஆயிரக்கணக்கானவர்களுக்கு நொடிகளில் கொண்டுசேர்க்கும் இந்த இணைய தொழில் நுட்பத்தை பல பிரபலங்கள் பயன்படுத்துகிறார்கள். தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி கண்ட பிரபலம் பராக் ஒபாமா!

அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது துணை அதிபர் வேட்பாளரை அறிமுகப்படுத்துவது அங்கே மிகப் பெரிய மீடியா நிகழ்வு. 'செனட்டர் ஜோ ஃபைடனை துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கிறேன்!' என ட்விட்டிவிட்டு சில மணி நேரங்களுக்குப் பின்தான் மீடியாவுக்கே அறிவித்தார் ஒபாமா. (நம் ஊரில் சினிமா பிரபலங்கள்தான் உள்ளனர்!.)

டிவிட்டரில் யார் வேண்டுமானாலும், எவருடைய டிவிட்டர் பக்கத்தையும் படிக்கலாம். இதில் இரண்டு விஷயம். 1.நீங்கள் படிக்கும் பக்கத்தின் சொந்தக்காரர் உங்களுக்குத் தேவையான தகவல்களை டிவிட்டியபடி இருந்தால், நீங்கள் அவரைப் பின்பற்றலாம் (Following). நீங்கள் பின்பற்றுபவரின் டிவிட்டுகள் உங்களது டிவிட்டர் பக்கத்தில் பிரசுரமாகும். 2.உங்களை யாராவது பின்பற்றினால் (Followers) அவர்களது டிவிட்டர் பக்கங்களில் உங்களது டிவிட்டுகள் பிரசுரமாகும். பை தி வே, Twitting என்பது வினைச்சொல்லாகவும், Tweet என்பது பொருட்சொல்லாகவும் பயன்படுத்தப் படுகிறது. Tweet என்றால் 'குட்டியான தகவல் பிட்' என்றால், Twitting என்பது மேற்படி பிட்டுகளை அனுப்புவது.

சரி, ஓரளவிற்கு புரிந்திருக்கும். இனி....

*****
கண நேர இணையம்
பாயின்ட் A-யில் இருந்து பாயின்ட் B-க்குத் தகவலைக் கொண்டு சேர்த்த தொழில் நுட்பங்களை ஒதுக்கிவிட்டு, சமநேரத்தில் (real time) அப்டேட் செய்ய முடிகிற தொழில் நுட்பங்களுக்குத்தான் இனி எதிர்காலம் என்கிறார்கள். (நன்றி அண்டன்). ஓவர்நைட் சக்சஸ் ஆன டிவிட்டர் இதற்கு நல்ல உதாரணம்.

எப்படி...? புரியும்படி பார்க்கலாம். அதற்கு முன் ஒரு குட்டியூண்டு Flash back.

இணையத்தை இரு மாபெரும் யுகங்களாகப் பிரிக்கிறார்கள். முதல் யுகமான இணையம் 1.0-ல் தகவல்கள் (data) வலைத்தளப் பக்கங்களில் கொடுக்கப்பட, நீங்கள் அவற்றைப் படித்துத் தகவல்களை எடுத்துக்கொண்டீர்கள் (Static). கிடைத்த தகவலை வைத்து எதிர்க் கேள்வி கேட்பதோ, பின்னூட்டம் இடுவதோ, கலந்துரையாடுவதோ சாத்தியமில்லை. கிட்டத்தட்ட நூலகம் சென்று புத்தகம் படிப்பது போன்ற ஒரு சாதாரண மீடியாவாகவே இருந்த இணையம் 2001-ல் புது வடிவம் எடுக்க ஆரம்பித்தது.

இணையம் 2.0 என அழைக்கப்படும் இந்தப் புதிய யுகம், எல்லோரையும் ஒருங்கிணைக்க ஆரம்பித்தது. வலைப்பதிவுக் கலாசாரம் தொடங்கப்பட்டது; விக்கிகள் முளைத்தன; மின்னல் வேகத்தில் பின்னூட்டங்கள் இடப்பட்டன; (Dynamic). சமூக நெட்வொர்க்கிங் தளங்களில் படங்களும், வீடியோக்களும் அப்லோட் செய்யப்பட்டு நண்பர்களுடன் பகிரப்பட்டன. கீ-போர்டு தட்டுவதையும் தாண்டி அலைபேசியிலிருந்து நொடிக்கு நொடி ட்விட்டத் தொடங்கினர்.

Flash back ஒவர். இதில், முன்பு சொன்ன கண நேர இணையம் (Real Time Web) எங்கே, எப்படி வருகிறது ?

சொல்கிறேன்.

தேடல் இயந்திர (Google, Yahoo) நிறுவனங்களுக்கும், சமூக வலைதள நிறுவனங்களுக்கும் (Facebook,etc) ஆதார சுருதி விளம்பரங்கள்தான். ஆனால், இந்த இரண்டு தரப்பினரும் பின்பற்றும் டெக்னிக்குகள் வித்தியாசமானவை.

தேடல் இயந்திரங்களின் மிகப் பெரிய சவால், லேட்டஸ்டான தகவல்களைத் தேடல் முடிவுகளில் முதல் பக்கத்தில் கொண்டுவருவது. கூகுளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு, கூகுள் சாதாரண வலைதளங்களைவிட, வலைப்பதிவுப் (Blogs) பக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தெரிய வரும். வலைதளங்களைவிட வலைப்பதிவர்கள் தகவல்களை வேகமாகப் பிரசுரிக்க முடியும் என்பதால் இந்த முக்கியத்துவம். திறம்பட வேகமாகத் தொகுக்கும் திறன் மட்டுமல்லாது, பொருத்தமான தளங்களை ஒரு தேடல் தளம் அடையாளம் காட்டுவது பயனீட்டாளர்களுக்கும் முக்கியம். அவர்களுக்குப் பொருத்தமான (Targeted Advertisements) விளம்பரங்களை அளிக்க விரும்பும் விளம்பர ஸ்பான்சர்களுக்கும் முக்கியம்.

ஆனால், சமூக வலைதள நிறுவனங்களில் (Social Network) இருந்து பயனீட்டாளர்களும், விளம்பரதாரர்களும் எதிர்பார்ப்பது சற்றே வித்தியாசமானது. தனது நட்பு வட்டாரத்தின் (Social graph) செயல்பாடுகளை உடனுக்குடன், தெரிந்துகொள்வதை பயனீட்டாளர் விரும்புகிறார் என்றால், இந்த நட்பு வட்டாரத்தின் மத்தியில் நடக்கும் உரையாடல்களையும், பரிமாறிக்கொள்ளப்படும் புகைப்படம், வீடியோக்களையும் புரிந்துகொண்டு, அதற்குத் தகுந்த பொருத்தமான விளம்பரங்களைக் காட்ட விளம்பரதாரர் விரும்புகிறார்.

ஓர் எளிய உதாரணம்...,

'இன்னும் இரண்டு வாரத்தில் விடுமுறைக்கு லண்டன் செல்கிறேன்!' என்று நட்புவட்டத்துக்கு நீங்கள் ஃபேஸ்புக்கில் எழுதிவைத்தால், லண்டனில் வாழும் உங்கள் நண்பர்கள் சில ஆலோசனைகளைக் கொடுக்கக்கூடும். அது உங்களுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கும். ஆனால், விளம்பரதாரர்களுக்கோ, உங்களது வலைப்பக்கத்தில் லண்டனில் தங்கும் விடுதி, வாடகை கார் போன்றவற்றின் விளம்பரங்களைக் காட்டுவது பயனுள்ளது. ஆக, நடைபெறும் தகவல் பரிமாற்றத்தை எவ்வளவு விறுவிறுப்பாக கிரகித்துக்கொள்ள முடியுமோ, அந்த சமூகத் தளங்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். அதனால்தான், ஃபேஸ்புக் நிறுவனம் இந்தத் தளத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

பல லட்சம் பேர் இப்படித் தங்கள் மனதில் இருப்பதை எழுதியபடி இருப்பதைக் கிரகித்தால், மக்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் வெளிப்படும். என்ன விஷயங்கள் முக்கியமாகக் கருதப்படுகிறது என்ற உண்மை வெளிப்படும். இதில், கண நேர இணையத்தின் நோக்கம், நட்பு வட்டாரத்தின் உரையாடல் மட்டுமல்ல... இணையத்தின் பயனீட்டாளர் எவருடைய தகவல்களையும், அந்த நொடிப் பொழுதில் தேடித் தர முடிகிற இந்த Concept தான் டிவிட்டரின் Secret of Success !. கண நேர இணையத்தில் இருக்கும் தகவல்கள் ரொம்பவே முக்கியம். உதாரணமாக, திரைப்படம் ஒன்றை ரிலீஸ் செய்த அன்றே, அந்தப் படம் வெற்றியடையுமா, தோல்வி அடையுமா என்பதை டிவிட்டுகளைத் தேடிக் கண்டறிய முடியும்.

நான் சொல்ல வந்தது இதைத்தான். இதன் சாத்தியங்கள் யோசித்தால், ஆச்சரியங்களைக் கொடுக்கும். பல மில்லியன் டாலரையே கொடுத்திருக்கிறது - கொட்டிக் கொண்டும் இருக்கிறது !.

*****
என் ட்விட்டர் முகவரி @JSurendhar

சில ட்விட்டர் சுவாரஸ்யங்களும்,



மேலும் அறிய
 
 
 

சில வலைத்தள சேவைகள்

பிரபலமான டிவிட்டர் உரலிகளைத் தொகுத்து அளிக்கும் தளம்: www.tweetmeme.com
டிவிட்டரில் உங்களைப் பின்பற்ற (followers) ஆட்களைப் பிடிக்க வேண்டுமா? மல்டி லெவல் மார்க்கெட்டிங் ஸ்டைலில் உதவுகிறது - www.twitproquo.com/

*****

கடைசியாக ஒர் வார்த்தை, இந்தக் களத்தில் குதித்திருக்கிறது கூகுளும்தான். கூகுள் வெளியிட்டிருக்கும் கண நேர இணையத்தின் பெயர் பஸ்ஸ் (http://www.google.com/buzz/).

இன்னென்றும் இருக்கிறது.

அதன் பெயர் "டம்ளர்" !.  

Saturday, August 7, 2010

ஞானப் பல்


அடிக்கடி தொந்தரவான பல் வலி உபாதையுடன் அலுவலகம் வருகிறேன். பல் வலிக்கான காரணம் - ஞானப் பல் முளைக்கிறது.

                                
ஒருவருக்கு கடைசியாக முளைக்கும் நான்கு கடைவாய்ப் பற்கள்தான் ஞானப் பற்கள் (Wisdom teeth). 'விஸ்டம்' என்றால் அறிவு, ஞானம் என்று மட்டும் அர்த்தமில்லை. தற்பெருமை உணர்வு என்றும் பொருள் உண்டு. Late teen age 17 அல்லது 18 வயதிற்கு பின் நமக்கு நன்கு விபரம் தெரிந்து முளைப்பதால் இதை ஞானப் பற்கள் என்று சொல்கிறார்கள் !.

பொதுவா பற்களில் பற்சொத்தை, பயோரியா (பற்களை சுற்றியுள்ள எலும்பை தாக்கும் நோய்), ஹாலி டோலிஸ் (பற்சிதைவால் ஏற்படும் வாய் துற்நாற்றம்)- னு பிரச்சனை வரும். ஆனால் நமக்கு, (ஞான !) பல் முளைக்க போதுமான இடம் இல்லாத காரணத்தால் தொந்தரவு.

காரணம் தெரிந்திருப்பதால் டாக்டரை சந்திப்பதில் தாமதம். வலி அவ்வளவு திவிரம் இல்லை. முன்பொருமுறை இதே காரணம் ஏற்பட்டு இருக்கிறது. அதை பிறகு சொல்கிறேன்.பல் வலி முதல் பாதினா, டாக்டர் பார்க்கும், அனஸ்தீசியா, ஆஸ்பிட்டல் வாசம்னு ஜோரா போகும் இரண்டாம் பகுதி.


இதில் அனஸ்தீசியா பற்றி கொஞ்சம் சேர்ந்து சிந்திப்போம்.

அனஸ்தீசியா என்பது ஒரு கிரேக்கச் சொல். இதற்கு, இல்லாத என்றும், உணர்வுக்காக என்றும் பொருள். ஆலிவர் வென்டால் ஹோம்ஸ் என்பவர்தான் 1946-ல், இந்த வார்த்தையை உருவாக்கினார். உணர்வு நீக்கி கண்டுபிடிப்பால், பல வகை அறுவை சிகிச்சையின் கதவுகள் திறந்தன.

1946க்கு முன்வரை அறுவை சிகிச்சை என்றாலே அனைவருக்கும் நடுக்கம்தான். 'பல்லை' எடுப்பதுகூட பயங்கரமான விஷயம் தான். அறுவை சிகிச்சை செய்யும் நபருக்கு, ஆல்கஹால், ஓபியம் கொடுத்து, நல்ல பலசாலியான பத்து மனிதர்களைக் கொண்டு அவரைப் பிடித்துக் கொள்ளச் செய்துவிட்டு, அறுவை சிகிச்சை நிபுணர், மிக துரித கதியில் சிகிச்சையை முடிப்பார். இந்த நிலையில் நோயாளி மிக பயங்கரமாக அலறுவார்; மயங்கிவிடுவார்; இறப்பு நேரிடுவதும் உண்டு.

*****
உணர்வு நீக்கியின் உபயோகம், பழங்கால 'இங்கா' இன மக்களிடம் இருந்திருக்கிறது. 'கோக்கோ' மர இலைகளைச் சுவைத்தபின் நோயுண்டாக்கும் கெட்ட ஆவியை விரட்ட மண்டையில் துளை போடுவார்கள். கோக்கோ மரப்பிசினை துளை போடும் இடத்தில் பலமணி நேரம் தடவி, அந்த இடம் மரத்துப் போகச் செய்து ஆவி விரட்டுவர். கெட்ட ஆவி உடலுக்குள் நுழைந்தது நோய்க்கு காரணம் என அக்கால மக்கள் நம்பினார்கள்.

*****

நாம் பாடத்தில் படித்தது போல், பிரிஸ்ட்லி(Priestley) என்ற அமெரிக்க கெமிஸ்ட் கி.பி.1772-ல் 'நைட்ரஸ் ஆக்ஸைடை'க் (N2O) கண்டு பிடித்தார். அதை சுவாசித்தால், மனம் லேசாகி, ரொம்ப சந்தோஷப்பட்டது. அவருக்கு ஏற்பட்ட சிரிப்பை அடக்கவே முடியவில்லை. தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தார். எனவே இவ்வாயுவுக்கு 'சிரிக்கும் வாயு' எனப் பெயரிட்டார்.


கார்டனர் கியூன்கி கால்ட்டன் (Gardner Quincy Colton) என்ற நிபுணர் 1844-ம் ஆண்டு, டிசம்பர் 10 ஆம் நாள் நைட்ரஸ் ஆக்ஸைடின் சாதனைகளை நடுத் தெருவில் எல்லோரும் பார்த்து, மெய்சிலிர்த்து வியப்படையும்படி செய்து காட்டினார். பார்வையாளர் கூட்டத்தில் 'ஹோரஸ் வெல்ஸ்' (Horace Wells) என்ற பல் மருத்துவரும் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார். N2O தான் வலி நீக்கியாகச் செயல்படுகிறது என வெல்ஸின் மூளை சொல்லியது.

வெல்ஸ், நைட்ரஸ் ஆக்ஸைடின் குணத்தை, பல் பிடுங்கும் நோயாளிகளிடம் செலுத்தி சோதிக்க விரும்பினார். நைட்ரஸ் ஆக்ஸைடு உள்ள ரப்பர் பையைத் திறந்து, நோயாளியின் முகத்தருகே கொண்டு சென்றார். நோயாளி வாயுவை சுவாசித்ததும், தோல் வெளுத்து, கண் நீலமாகி, தலை சாய்ந்தது. நோயாளியின் பல்லை வெகு வேகமாகப் பிடுங்கினார். நோயாளி பயங்கரமாக அலறுவார் என எதிர்பார்த்தால், அவரிடம் ஒரு சத்தமும் இல்லை. நோயாளி கொஞ்ச நேரத்தில் கண்விழித்தார்.

1846ம் ஆண்டு வெல்ஸ் பெயர், உணர்வு நீக்கியின் கண்டுபிடிப்பில் வெளியானது. புத்தகம் வெளியிட்டார். நியூயார்க் போய் குளோரோபார்ம் பயன்படுத்தி, பல் பிடுங்குதலின் போது குளோரோபார்மே பாதுகாப்பானது, சிறந்தது என நிரூபித்தார்.

பின்னர் ஜனவரி, 1848 தற்கொலை செய்து கொண்டது தான் சோகம்.

 வெல்ஸ் உலகைவிட்டு மறைந்தபின் Father of anesthesia என்று மருத்துவ கழகம் பாராட்டியது.
*****

தலையனையாக புத்தகம் படித்து, நவீன மருத்துவதுடன் சடுதியில் பிடுங்கி விடுகின்றனர், இப்போதெல்லாம். என் ஞானப் பல்லில் ஒன்றை, ஏற்கனவே அனஸ்தீசியா பெற்றுகொண்டு இழந்துவிட்டேன். நோகாமல் பல்லை தட்டி கையில் கொடுத்து விடுகிறார்கள். இப்போது, இன்னொன்று போக்கு காட்டிக்கொண்டிருக்கிறது.

Monday, July 12, 2010

சொல்லியிருக்கலாம்...சொல்லிவிட்டேன்!


நான் அரை மூச்சாய் [இன்னும் முழு மூச்சாய் ஆரம்பிக்கவில்லை] புத்தகம் படிக்க ஆரம்பித்ததே 2 வருடங்களுக்கு முன் தான். அதற்கு முன் குமுதம், விகடன், அதுவும் எப்போதாவது கையில் மாட்டும் போது. 5 வருடம் கல்லூரியில் கழித்தேன். அந்த மாலை நேரங்களை என்ன செய்தேன் என்று இன்று கவலைப் படுகிறேன். அப்போவே ஒழுங்காய் படித்திருந்தால் இன்னைக்கு தில்லா…  -பிரதீப் குமார் (வலைப் பதிவர்)

மேலே சொன்ன 'பிரதீப் குமார்' என்ற பெயருக்குப் பதிலாக நம்மில் பல பெயரை போட்டுக் கொள்ளலாம். மேலே சொன்ன வாசகம் அவரது பதிவொன்றில் சொன்னது.

நபருக்கு நபர் வருடமும், சூழலலும் மாறுபடலாம். ஆதாரமான அந்த 'அடடா' நம் எல்லோருக்கும் பொது!.

அடடா... நாம் செய்யாமல் விட்டு விட்டோமே,  கொஞ்சம் யோசிச்சிருக்கலாம், அடடா... அப்படி பண்ணியிருக்கலாம் - என அந்த 'அங்கலாய்ப்பு' அனுபவம் நிச்சயம் நம்மில் இருக்கிறது. விதி விலக்கில்லாமல்.

*****

நான் கொஞ்சமே கொஞ்சம் போல் படிக்கும் காலத்தில் (பாடம் தவிர்த்து) படிக்காமல் போனேனே என்று அங்கலாய்க்க அவசியமில்லாமல் தேடித் தேடிப் படித்திருக்கிறேன். செமஸ்டர் நடக்கும் இடையில், இரவில் படித்திருக்கிறேன்.(கல்கியின் சிவகாமியின் சபதம்). பஸ் பயணங்களில், இரயில் பயணங்களில், காத்திருக்கும் வேளைகளில், ஏன் ஊருக்கு போய் பாட்டியை பார்க்கும் வேளைகளில் என விவஸ்த்தையில்லாமல், நேரங்காலம் பார்க்காமல் படித்திருக்கிறேன். கல்கி, சாண்டில்யன், லா.ச.ர, மௌனி, ஜி.நாகராஜன், நா.பிச்சமூர்த்தி, கலைஞர் மு.கருணாநிதி, ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன், சிவசங்கரி, அனுராத ரமணன், சுபா, ராஜேஷ்குமார், பி.கே.பி, கண்ணதாசன், வைரமுத்து, வாலி என நீளும் பட்டியலின் எழுத்துகளை வெகு அருகில் வைத்து ரசித்திருக்கிறேன். உறவாடியிருக்கிறேன்.

வகை என பிரிக்காமல் சொன்னதைப் படித்தேன். மனம் போனபோக்கில் புத்தகங்களை தேர்ந்தெடுப்பேன். இன்னது என பாகுபடுத்தாத 'பொது' பிரிவிலேயே இருந்திருக்கிறேன்.

உலக சினிமாக்களை மாதம் ஒரு முறை போட்டுக் காட்டுவார்கள். சந்தாதாரர் ஆக ரூபாய் 50 அல்லது 60 வசூலிப்பார்கள். சந்தா கட்டி உறுப்பினர் ஆகி படம் பார்த்திருக்கிறேன். படம் முடிந்தவுடன் அதைப் பற்றி விவாதிப்பார்கள். படம் பார்த்து அவர்கள் சொல்லும் கருத்தையே என் கருத்தாக எடுத்துக் கொண்டு வெளி வருவேன். படம் பார்த்து புரியாத எனக்கு அவர்கள் விவாதிக்கும் விஷயமும் பாதிதான் விளங்கும். அப்புறம் நான் எங்கு அந்த விவாதத்தில் பங்கெடுத்துக் கொள்வது!. இதெல்லாம் 2003 முந்தைய திருச்சியில். நான் பார்த்த தமிழ் படங்கள், ஊர் சுற்றும் என் ஆர்வம், நண்பர்கள் எல்லாம் புத்தகம் படிக்கும் ஆசைக்கு சமமாகவே இருந்ததால், நான் ஒரேயடியாக புத்தக புழுவாகவும் ஆகவில்லை. எதைதான் உருப்படியாகச் செய்தேன்?!.

அந்த சமயத்தில் நான் செய்து பார்க்க துணியாதது 'காதல்' மட்டுமே. பெண்களை கண்ணில் பார்பதோடு சரி... அதற்கும் காரணம் இருந்தது. எந்த பெண்ணும் என்னை 'மோகித்து' காத்திருக்கவில்லை. ஆத்து நீச்சல் (சுமாராக!) மட்டும் தெரிந்த எனக்கு 'காதல்' கடலில் குதிக்கும் தைரியமும் வாய்த்திருக்கவில்லை. நான் பார்த்த பெண்களுக்கு பின்புலமும் கூடவே சகோதரனும் இருந்ததால் என் 'உடல் பத்திரம்' கருதி வாளாவி இருந்து விட்டேன். என்னுடன் தவறி பழகியவர்களும் சகோதர பாசத்தைக் காட்டியவர்கள். இதில் என் நல்ல நண்பர்களை சேர்க்கவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று சிலரிடம் சிரித்து மட்டும் வைத்திருந்தேன். 'ஃபிக்செட் டெபாஸிட்'!. என் டெபாஸிடை களவாடிய 'களவாணி'களே அதிகம். தீராத வேலைக்கிடையில் செமஸ்டர் அறிவித்து, புண்ணியம் கட்டிக் கொண்ட பல்கலை கழகத்தின் நிர்வாகத்திற்கு என் 'காதல்' தேவை புரியவில்லை. ச்சே.... ?! என் பார்டர் தாண்டாத காதலும் தேறவில்லை. அதனால், பெண்களை பார்பதோடு சரி!

இதனால் எல்லாம் என் பாட படிப்பு தனியாக பாதித்தாக சொல்ல முடியவில்லை. ஒழுங்காகவே பாஸ் செய்து வெளிவந்தேன். (பட்ட கஷ்டம் நமக்குதான் தெரியும்!.)
*****

அந்த காலகட்டத்தில்தான், நான் முதன் முதல் படித்த முழு மொழிபெயர்ப்பு நாவல் 'பட்டாம்பூச்சி'.

ட்டாம்பூச்சி - ஹேன்றி ஷாரியர் எழுதிய Papillon என்னும் பிரெஞ்சு நூலின் ஆங்கிலம் வழியான தமிழ் மொழிபெயர்ப்பு. 800 பக்கங்களைத் தாண்டும் இந் நூல். மயிர்கூச்செறிதல் என்று சொல்வார்களே - அந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டேன்.

நூலின் ஆசிரியர் தனது இருபத்தைந்தாவது வயதில் கொலைக் குற்றமொன்றிற்காக ( செய்யாத கொலையென்கிறார் ) ஆயுட் தண்டனை பெற்று அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறு கோடிக்கு, பிரெஞ்சுக் கயானாவில் இருந்த கொடிய தீவாந்தர சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப் படுகிறார்.

அவர் ஒவ்வொரு சிறையாகத் தப்பிப்பதும், பிடிபடுவதும், அடைபடுவதுமாக 13 வருட காலத்தை, அவர் தனது விடுதலை மீதான இலக்கில் மீண்டும் மீண்டும் செலவிடுகிறார். கொடிய தீவுச் சிறைகளில் இருந்து புதைமணலிலும், ஒட்டைக்கட்டுமரங்களிலும் தப்பிப்பதுவும், மீண்டும் அகப்பட்டு இருண்ட தனிமைச்சிறைகளில் அடைக்கப்படுவதும், அதிலிருந்து வெளியேற தொடர்ந்து முயற்சிப்பதுமாக விரிகிறது கதை.

தமிழின் மிகச் சிறந்த மொழி பெயர்ப்பு நூலாகக் இதைக் சொல்லலாம். Must read வரிசையில் இந்த புத்தகத்திற்கு என்றும் இடமுண்டு. பெரும்பாலான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இக்கதை ஓர் உண்மை சம்பவம்!. உலக புகழ் பெற இது மட்டும் காரணம் அல்ல. மனிதனின் சுதந்ததிர வேட்கை உலக பொது!. மனிதனின் அந்த சுய விருப்ப 'விடுதலை'. நான் யாருக்கும் அடிபணிய தேவையில்லை என்ற உற்சாகம். அந்த உணர்வு கொடுக்கும் உற்சாகமே! இதை உலக இலக்கியத்தில், உலக மக்களிடம் புகழ் பெற காரணம்.

தமிழில் பெயர்த்தவர் ரா.கி.ரங்கராஜன். ( 'சிவாஜி' பட சூட்டிங்கில் ரஜினிகாந்திற்கு நடிகர் விவேக் பரிசளித்தது இந்த நூலைத்தான்! )

ரா.கி. ரங்கராஜன்: 05.10.1927 ல் கும்பகோணத்தில் பிறந்தார். தன் 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புகள் சின்னத்திரையிலும் இடம்பெற்றுள்ளன. எழுத்துலகின் மேதாவி, பிஷ்மர் என்று போற்றபடுபவர்.

இந்த புத்தகத்தை வாங்க விரும்புபவர்கள், வரும் அடுத்த புத்தக கண்காட்சியில் வாங்கிப் படியுங்கள். குறித்து வைத்துக் கொள்ளலாம். அவசரப்படுபவர்கள் இப்போதே தேடி, ஆரம்பிக்கலாம்.
இது படமாகவும் வந்திருக்கிறது. அதன் ட்ரைலர்.




"ஓசைப்படாமல் சாதனை படைத்த தமிழர்களில் ஒருவரான எனது இனிய நண்பர். ரா.கி. ரங்கராஜன் ஒரு கர்மயோகி. குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு, நேசம், வெள்ளைச்சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு - இவை இவருடைய சிறப்புகள்"

- சுஜாதா

நீங்களும் உங்கள் நண்பர்களிடம் இந்த பத்தியின் தலைப்பைச் சொல்லி பேச்சை ஆரம்பித்து விடுங்கள்.

அடடா... இதை முன்பே சொல்லியிருக்க வேண்டுமோ!

Saturday, July 10, 2010

செம்மொழி மாநாடு - நம் பார்வை II


செம்மொழி மாநாட்டு ஆரவாரமெல்லாம் முடிந்து, தமிழர்கள் தத்தமது வேலைகளில் இறங்கிவிட்டனர். ஆட்சியாளர்கள் கட்சி பணி பார்க்கவும், நாமெல்லாம் மற்றுமொரு உலக கோப்பையை பார்க்க - ஆக்டோபஸ்ஸின் உதவியோடு - நகம் கடித்து துப்ப தொடங்கியிருக்கிறோம்.

களிமண், கல்வெட்டு, ஓலை, காகிதம் தாண்டி கணினியிலும் பட்டொளி வீசிப் பறக்கும் தமிழ்க் கொடியை இன்னும் உயரே தூக்கிப் பிடிக்கும் நோக்கில், செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது!பேசும் மொழிக்காக இத்தனை லட்சம் பேர் கூடுவார்கள் என்ற ஒன்றே கோவை மாநாட்டுக்குக் கிடைத்த வரலாற்றுப் பெருமை.

கொஞ்சம் அருகில் சென்று, நுரை தள்ளி தண்ணீர் அள்ளி பார்ப்போம்.

*****

மொழியியல் சார்ந்த உலக மேதைகளும் உள்ளூர் அறிஞர்களும் ஒன்றாகச் சேர்ந்து தங்களது ஆய்வு முடிவுகளை, இது வரை இருக்கும் ஆதாரங்களை நினைவுபடுத்துவதும், அடுத்த கட்டமாகத் தங்களது ஆய்வை எதை நோக்கிச் செலுத்துவது என்று முடிவு எடுக்கவுமே ஆய்வரங்குகள் நடத்தப்படுகின்றன. ஆனால், கோவையில் நடந்த ஆய்வரங்குகள் இதில் எந்த நோக்கத்தையும் நிறைவு செய்ததாகத் தெரியவில்லை.

ஆய்வரங்க நிகழ்வுகளில் கருணாநிதி பற்றி சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள்கூட யாரையும் நெருட வில்லை. அவர் மகள் கனிமொழி பற்றியும் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில்... தமிழறிஞர்களுக்கு முகச்சுளிப்பு!

கனிமொழி பற்றி மூன்று தலைப்புகளில்! அந்தக் கட்டுரைகளின் பொருளடக்கமும் சரி... சமர்ப்பித்தவர்களின் விஷயஞானமும் சரி... அந்த அரங்கத்திலேயே காற்று இறங்கிப் போனது இன்னும் சோகம்! நல்ல வேளை பொது மக்களை பார்க்க அனுமதிக்கவில்லை (!).

ஒர் உதாரணம் பார்ப்போம்.

'கவிஞர் கனிமொழியின் கவிதைகளில் பெண் மன உணர்வுச் சித்திரிப்பு' என்ற தலைப்பில் வெ.கலைச்செல்வி என்பவர் ஓர் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். அங்கீகரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட கேள்வியாளர்கள் மொத்தமே 10 பேர்தான் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் எழுந்து, 'கனிமொழி எத்தனை கவிதைத் தொகுப்புகள் எழுதி இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?' என முதல் கேள்வியைப் போட்டார்.

இதற்கு பதில் சொல்ல முடியாமல் கொஞ்சம் நேரம் தயங்கி, எதையோ யோசித்த போஸில் நின்றார் கலைச்செல்வி.கேள்வி கேட்டவரே கனிமொழி எழுதிய மூன்று புத்தங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, ''அவர் எழுதிய புத்தகங்களின் பெயர்களைக்கூடத் தெரிந்துகொள்ளாமல் எப்படி ஆய்வுக் கட்டுரை எழுதினீர்கள்?' என்று மடக்கினார்.

''நான் 'கருவறை வாசனை' பற்றி மட்டும்தான் ஆய்வு செய்தேன்!' என்று சமாளித்தார் கலைச்செல்வி. இதில் சமாதானம் அடையாத கேள்வியாளர், 'ஆய்வு என்பது சம்பந்தப்பட்டவருடைய எல்லா எழுத்துகளையும் படித்துவிட்டு அவற்றில் இருந்து நீங்கள் அறிந்துகொண்டதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, பொத்தாம் பொதுவான கட்டுரையாக இருக்கக்கூடாது!' எனச் சொல்ல, கலைச்செல்வியின் முகம் இருண்டது.

*****
பெ.பகவத் கீதா 'கனிமொழியும் கவிதைமொழியும்' என்கிற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வைத்தார். இந்த ஆய்வுக்கும் சரமாரி கேள்விகள்! முதலில் எழுந்த ஒரு கேள்வியாளர், 'கருவறையின் வாசத்தை ஆண்கள் உணர்ந்தது இல்லையா? ஆண்களைப்பற்றியும் கனிமொழி எழுதி இருப்பது உங்களுக்குத் தெரியுமா? 'சிகரங்களில் உறைகிறது காலம்' என்ற புத்தகத்தில் தந்தையரைப் பற்றியும் அவர் பாடி இருக்கிறாரே..?' என்று அடுக்கிக்கொண்டே போனார் கேள்விகளை. பகவத்கீதா, 'நான் பெண்மை தொடர்பான விஷயத்தை மட்டுமே எடுத்துக்கொண்டேன். அவ்வளவுதான்!' என்றார். அடுத்து பழனிசாமி என்பவர் எழுந்து, 'உங்கள் ஆய்வுக் கட்டுரை முழுக்கப் பாராட்டு மழையாக அல்லவா இருக்கிறது. நடுநிலையான விமர்சனம் எதுவும் இல்லையே? கனிமொழியின் படைப்புகளில் இருக்கும் முரண்பாடுகள் பற்றி நீங்கள் எதையும் குறிப்பிடவில்லையே... ஏன்?' என ஒன்றுக்குள் ஒன்றாகப் பல கேள்விகளை அடுக்க, 'அவையடக்கத்தின் காரணமாக, அதுபற்றி எல்லாம் ஆய்வு செய்யவில்லை!' என்று பகவத்கீதா பதில் சொன்னாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டு அரங்கமே ஒரு நிமிடம் அமைதி காக்க, 'ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதற்கும் அவையடக் கத்துக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமே புரியவில்லையே?'' என்று இன்னொரு கேள்வியாளர் அரங்கத்தின் அமைதியைக் கலைத்தார். தொடர்ந்து அவரே, ''எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றிய நன்மை - தீமையை அலசி ஆராய்ந்து சொல்வதுதான் ஆய்வுக் கட்டுரை! ஒருவரைப் பாராட்டி எழுதுவது ஆய்வுக் கட்டுரையே இல்லை. அதை வெறும் கட்டுரை என்றுதான் சொல்ல முடியும்!' என்று ஆவேசமாகக் குரல் எழுப்பினார். நல்ல வேளை இந்தக் கேள்விக்கு பகவத்கீதா பதில் சொல்ல அரங்கத் தலைவர் கனல்மைந்தன் அனுமதிக்கவில்லை. காரணம் நேரமின்மைதான்! (ஜு.வி யில் (04-07-2010) விரிவாக வந்திருக்கிறது.)

*****
கிளம்பிற்றுகாண் ஜால்ரா கூட்டம்!

என விகடன் கொட்டு வைக்கும் அளவுக்கு சத்தம் அதிகம்.

அதே கவிஞர்கள், அதே கூட்டம் சூழ்ந்திருக்க, நடுநாயகமாக வீற்றிருக்கிறார் முதல்வர். 'யாரங்கே... தொடங்கட்டும்' என ஆரம்பமாகிறது கவியரங்கம்...

"கலைஞரின் கபாலக் களஞ்சியத்தில் ஆண் எண்ணங்களைவிட, ஈரப் பெண் எண்ணங்களே அதிகம். இல்லாவிட்டால், கோபாலபுரம் வீட்டை கொடையாகத் தர முடியுமா?, அந்த ஒளவையார் காலத்தில் இவர் இருந்திருந்தால், அதியமான் ஏமாந்திருப்பான்!" என்றெல்லாம் கவிதை மழை. சொன்னது ஈரோடு தமிழன்பன்.

வாலி, வைரமுத்து போன்ற கவிஞர்கள் மேல் நமக்கு தனிபட்ட பகையில்லை. கேட்பவர்களுக்கும் சில வேளை கூச்சம் வரலாம் என்பதே நமது கருத்து! வேறென்ன சொல்ல?

*****
கண்காட்சிக்கு ஜெ !

அந்த அரங்கத்துக்குள் நுழைந்தால், சிந்துச் சமவெளிக்குள் பயணிப்பதுபோலவே இருந்தது. மொகஞ்சதாரோ - ஹரப்பா நாகரிங்களாகக் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் இருந்த எழுத்துக்கள் திராவிட எழுத்துக்களே என்று நிரூபிக்கப்பட்டதால், அந்த எழுத்துக்களில் தொடங்கி, அங்கே இருந்த வீடுகள், கிணறுகள், அம்மக்கள் பயன்படுத்திய பொருட்களின் சிதைவுகளை மாதிரியாகச் செய்துவைத்து இருந்தார்கள். ஓலைச் சுவடிகளை ஊர் ஊராக அலைந்து திரிந்து கைப்பற்றி புத்தகங்களாகப் பதிப்பித்தவர் உ.வே.சாமிநாதய்யர். அவர் வைத்து இருந்த திருக்குறள், புறநானூறு, சீவகசிந்தாமணி ஆகிய இலக்கியங்களின் ஓலைச் சுவடிகள், அதை எழுதப் பயன்படுத்திய எழுத்தாணிகள் வைக்கப்பட்டு இருந்தன. புராதனச் சிலைகள், தமிழர் வாழ்க்கையைக் காட்டும் ஓவியங்கள், பழைய காலத்துத் தமிழ் எழுத்துக்கள் என எல்லாமே பழமையை நினைவுபடுத்துவதாக இருந்தன. இலக்கியக் காட்சிகளை வைத்துத் தயாரிக்கப்பட்ட 3டி அனிமேஷன் காட்சிகள்கொண்ட ஒலி - ஒளி கண்காட்சி அரங்கம் அருமை! (கண்காட்சி வருணனை - ஆ.வி., நன்றி)

அறுதலான விஷயம், 'தமிழிலேயே பாடம் படித்தால், தமிழக அரசுப் பணிகளில் முன்னுரிமை'. அச்சுத் துறையில் கணினித் தமிழை உலகளாவ ஒருமுகப்படுத்தும் விதமாக, 'யூனிகோட்' மற்றும் 'டிஏசிஇ-16' ஆகியவற்றை ஆரத் தழுவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழர் அனைவரும் ஒரே எழுத்துருவில் படிக்கலாம் இனி!

 'டிஏசிஇ-16' புரியாதவர்களுக்கு வேறொரு சந்தர்பத்தில் சொல்கிறேன்.

*****
தமிழுக்கு இவை மட்டும் போதுமா? இன்னும் செல்வதற்கும் செய்வதற்கும் எவ்வளவோ இருக்கின்றன!

யானைக்கு சோள பொரி. என்ன! இந்த பொரி அவிக்க, 380 சொச்சம் கோடி தேவைப் பட்டிருக்கிறது!

Tuesday, June 29, 2010

செம்மொழி மாநாடு - நம் பார்வை I


நாடாளுபவரின் நிறைவேறாத பெருங்கனவாக இருந்ததை, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தி தற்போது நிறைவேற்றியுள்ளார் கலைஞர்.
திராவிட இயக்கத்தில் ஏற்கனவே அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்திவிட்டனர்.


நமது கருத்துக்களை பகிரும் முன் - மாநாட்டுத் துளிகள் - உங்களுக்காக!


செம்மொழி மாநாட்டிற்காக போய் இறங்கியதும் ஜில்லென்று இருந்தது ஊர்.

"செம்மொழி மாநாடு நடக்கும் ஐந்து நாட்களுக்கும் சேர்ந்து ஆறு லட்சம் பேர் வருவார்கள்!" - இப்படித்தான் கணக்குப் போட்டிருந்தார்கள் போலீஸ் புலனாய்வுத்துறை அதிகாரிகள். அவர்கள் போட்ட கணக்கு தப்பாகி விட்டது. முதல் நாளே ஆறு லட்சத்தைத் தாண்டியிருக்கலாம். அந்த அளவுக்கு கூட்டம் என்றால் அப்படியொரு கூட்டம்.


கோவை மாநகருக்குள்ளும், மாநகரைத் தொட்டும் மாநாட்டை ஒட்டி பல்வேறு சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலைப்பணிகள் மேற்கொள்ள சுமார் 60 கோடிக்கு அரசாணை பெறப்பட்டுப் பணிகள் நடைபெற்றுள்ளன.

மாநாட்டில் கலந்துகொள்ள ஒருநாள் முன்னதாகவே ஜனாதிபதியும் வந்து விட்டார்.

மாநாட்டிற்கு வந்த நடிகர்கள் பாடு படுதிண்டாட்டம். நடிகர் சிவகுமார், பிரபு, விஜயகுமார், பிரகாஷ்ராஜ், தியாகு போன்றவர்கள் கேலரியில் 'கலைஞர்கள்' என்று எழுதப்பட்ட ஒரு கோடியில்தான் அமர வேண்டியிருந்தது. அங்கிருந்து பார்த்தால் மேடையே தெரியாத நிலை. மின்விசிறி வேறு இல்லை. அழைப்பிதழையே விசிறிக் கொண்டனர். (மற்றொரு நாள் இந்த பகுதியில்தான் நாம் அமர வைக்கப்பட்டோம் !).

பிரகாஷ்ராஜ் வரும்போது அவரை யார் என்று தெரியாமல்(!) ஒரு பாதுகாப்பு போலீஸ்காரர் தடுத்து தள்ளியது தனிக் கதை.


மாநாட்டு பட்டிமன்றம் முடிந்த போது வெளியே கட்டுக்கடங்காத மக்கள் கடல். அதை நீந்தி கடந்து செல்ல ஒரு கி.மீ.க்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆயிற்று.


நாம் பார்த்த பிரபலங்கள். வாலி, வைரமுத்து, சிவக்குமார், வடிவேலு, பாரதிராஜா, சந்திரசேகர் (விஜய் அப்பா அல்ல), எஸ்.வீ.சேகர், லியோனி, நக்கீரன் கோபால், எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன், சாலமன் பாப்பையா, மனுஷய புத்திரன், மற்றும் அறிஞர் பெருமக்கள்.

மாநாட்டு மைய நோக்கு பாடல் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது, டிவியிலும், பெரிய திரையிலும் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு தமிழ் அலை பரவ மிக முக்கிய காரணமாய் இதைக் குறிப்பிடலாம்.

உணவில் 'சுவை, தரம் முக்கியம்' என்பது முதல்வரின் கறார் கட்டளையாம். ரூ.30-க்கு சாப்பாடு விநியோகிக்கப்பட்டது. ஒரு வெரைட்டி ரைஸ், ஒரு தயிர் சாதம், ஒரு பாட்டில் தண்ணீர், ஊறுகாய், இனிப்பு, சிப்ஸ் இருந்தது. (அதை 'ஊசி, புளித்துப் போன சாப்பாடு, விலையும் அதிகம்' என்று திட்டிக்கொண்டே சிலர் சாப்பிட்டனர்.)

கழிவுகளைக் கொட்ட 660 குப்பைத் தொட்டிகள் மாநாட்டு திடலில் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தன. சாதாரணக் காய்ச்சலில் துவங்கி விபத்து வரை எவ்வகையான உடல் நலப் பிரச்னைகள் ஏற்பட்டாலும், விரைந்து சேவையாற்ற நூற்றுக்கணக்கான மருத்துவர்களும் தயார் நிலையில். வி.ஐ.பி-க்களுக்கு என ஸ்பெஷல் ஏற்பாடுகளுடன் அதி நவீன மருத்துவ வாகனங்கள்!

மாநாடு முழுக்க டாய்லெட் வசதி ஏற்படுத்திக் கொடுத்து பெண்களின் புண்ணியத்தை கட்டிக்கொண்டனர். பெண்களிடம் முகச்சுழிப்பில்லை. பஞ்சமில்லாமல் தண்ணீர் வசதி செய்து கொடுத்தார்கள். ஆண்களில் சிலர் வசதியை புறக்கணித்து இயற்க்கை அழைத்த போதெல்லாம் சுவர் ஓரம் ஒதுங்கினர்!.

தமிழ்க் கணினி இணைய கண்காட்சி நடந்தது. 123 அரங்குகளில் மத்திய, மாநில அரசுத் துறை சார்ந்த 123 இணைய தளங்கள் இடம்பெற்றன. இந்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகமும் இதில் பங்கேற்றது. இதன் சார்பில் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களுக்கு யூனிகோட் தமிழ் மென்பொருள்கள் அடங்கிய ஒரு லட்சம் சி.டி-க்கள் இலவசமாக வழங்கப்பட்டது. கண்காட்சியில் பங்கேற்கும் மற்ற நிறுவனங்களும் தங்களது தமிழ் மென்பொருட்கள் அடங்கிய சி.டி-க்களை இலவசமாக வழங்கின. (நாம் கேட்ட லினக்ஸ் சிடி பெற, அரை மணி கழித்து வர சொன்னார்கள். மெயில் ஐடி, செல் நம்பர் கொடுத்து வந்தேன், இது வரை தொடர்பில்லை!)

புத்தக கண்காட்சியிலும் பெரும் கூட்டம். சிந்து சமவெளி மற்றும் பல பெருமைகள் விளக்கும் கண்காட்சியிலும் கூட்டம். அவசியம் குழந்தைகளும் பெரியவர்கள் காண வேண்டியது.

லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள் என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கவில்லையோ போலும். சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களை பல்லாயிரக்கணக்கில் வரவழைத்திருந்தனர். கூட்டத்தில் அந்த பெண்கள் சிக்கி சங்கடப்பட்டனர். கஷ்டமாக இருந்தது. (யாருக்கு என்று கேட்காதீர்கள் !)


கட்சிக் கரை வேட்டியினரை வெகு அரிதாகத்தான் விழாவில் காணமுடிந்தது. நாம் பார்த்த வரை, நகரில் எந்த மூலையிலும் தி.மு.க பேனர்களையோ, போஸ்டர்களையோ காணமுடியவில்லை. கட்சி நிர்வாகிகள் ஆச்சரியப்படுத்தினர். பாராட்டலாம்.

ரத ஊர்வலத்தை தொடங்கி வைக்க (லக்ஷ்மி மில்ஸ் சந்திப்பு) வந்த கனிமொழி, அங்கு நின்றிருந்த நாதஸ்வரம், கரகாட்டப் பெண்கள், ஆண்களிடம், "ரொம்ப நேரமா நிற்கிறீங்களே. கால் சுடுமே. உட்கார்ந்துகொள்ளலாமே?" என்றார். அவர்களோ, "நாங்கள் நாள்கணக்கில் இப்படி நின்றாலும் எங்களுக்குக் கால் சுடாது. வலிக்காது. கடவுளிடம் அப்படியொரு வரம் வாங்கி வந்திருக்கிறோம்" என்று கூறி அசத்தினர்.

ஸ்டாலினும் கனிமொழியும் விழா முழுக்க ஜொலித்தனர். நமது பத்திரிக்கைகளும் இதை சிலாகித்தது.


இந்த லட்சோப லட்சம் மக்கள் கூட்டத்தைப் பார்த்துவிட்டு ஒரு பெண்மணி பேசி வந்த வார்த்தைகள் இதுதான். "அடுத்த தடவையும் தேர்தல்ல கருணாநிதிதான் வருவார் போலிருக்கு!"

தொடரும்.....

Sunday, June 20, 2010

என்றுமுள தமிழ்



தமிழ் மொழியையும், நம்மையும் பெருமையுறச் செய்த தமிழறிஞர்கள் பலர். இவர்களைப் பற்றி பிறகு.


******

செம்மொழி என்ற வார்த்தை திடிரென்று நம் எல்லோருக்கும் பரிச்சயம் ஆகியிருக்கிறது. கோவை செம்மொழி மாநாட்டு செய்திகள் நம்மை வந்து சேருவதற்கு எல்லா வழிகளிலும் அரசாங்கம் முயன்று, வெற்றியும் பெற்றிருக்கிறது. இதில் அரசியல் பார்க்கத் தேவையில்லை. மொழி வளர்ச்சிகான வாய்பாக இதைப் பார்க்கலாம்.

Friday, June 18, 2010

2010 இயர் அப்ரைசல்



ஒரு அலசல்:

தி.மு.க அரசு - யாருக்கு எவ்வளவு மார்க்?

சிறந்த மற்றும் மோசமான அமைச்சர்கள் யார், யார்?

தி.மு.க அரசுக்கு எதிர்க்கட்சிகள் தந்த மார்க் எவ்வளவு? என இந்தியா டுடே (ஜுன் 23,2010) கவர் ஸ்டோரி வெளியிட்டு இருக்கிறார்கள்.

தி.மு.க அரசின் அமைச்சர்களின் சாதனைகள் தோல்விகள் தர்மசங்கடங்களை அலசி இருக்கிறார்கள்.

தரப் பட்டியலில் 29 அமைச்சர்களுக்கு மதிப்பெண்(%) கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல்வருக்கு 64% ஸ்டாலின் 63% அன்பழகன் 55% தந்திருக்கிறார்கள். முதல் முறை அமைச்சர்களில் வெகு சிலரே திருப்திகரமாகச் செயல்பட்டுள்ளனர்.

புள்ளிவிவரங்களுடன் அணுகினால் தமிழகம் ஒன்றும் இந்தியாவின் முதன்மையான மாநிலமாகத் திகழவில்லை. இப்போது தமிழகத்தின் கடன் ரூ.75,000 கோடி. தரப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. விவசாயத்திலும் மூன்றாமிடம்தான். ஆரம்ப சுகாதாரத்தில் நான்காவது இடம். உள்கட்டமைப்பில் ஆறாவது இடம்.

இலவசங்கள், மானியங்களுக்காக மட்டும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் போடப்பட்டுவருகின்றன. இது சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் இன்னும் உயரவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. கருணாநிதி, எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.கவை பல வகைகளிலும் பலவீனமாக்கியிருக்கிறார். பதவி கேட்டுப் போராடிய காங்கிரசை அடக்கியும், ஆதரித்துக் கொண்டே எதிர்ப்பு அரசியலை நடத்தும் பா.ம.கவை ஓரங்கட்டியும் ஓர் அரசியல் தலைவராக சிறந்த ராஜ தந்திரியாக செயல்பட்டிருக்கிறார்.

ஆனால் அது மட்டும் போதாதே, தமிழகத்தை முதலிடத்தில் வைக்க. மின் பற்றாக்குறை இல்லாத, குடிதண்ணீருக்குப் பஞ்சம் இல்லாத, விலைவாசி கட்டுக்குள் இருக்கிற, நாளொரு கொலை, பொழுதொரு கொள்ளை இல்லாத, தொழில் வளம் மேம்பட்டு வேலைவாய்ப்புகள் பெருகியிருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, இலவசம் இனி தேவையில்லை என்கிற சூழலுக்கு தமிழகம் வந்திருக்க வேண்டும். அப்போதுதான் நாம் முதலிடத்தை பிடித்திருக்க முடியும்.

******

நமது மதிப்பீட்டை ஒப்பிட்டு பார்க்கலாம்.

தெரியாதவர்கள் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆர்வமிருப்பின் படித்துப்பாருங்கள்.

******

நான் ரசிச்ச 'பாசம்' கவிதை -- ரசிச்ச கேள்வி பதில்